Monday, July 6, 2009

மற்றவர்களை புண்படுத்தவது ஒரு கொள்கையா?


தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கருத்து வேறுபாடோ, வெறுப்போ இல்லாத போதும், நமக்கு பிடிச்ச நபர்களையோ,விஷயங்களையோ,நம்பிக்கைகளையோ, மற்றொருவர் கேவலப்படுத்துறார்னு தோன்றும் போது, அதை ஜீரணித்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான். அப்படிப் பட்ட பதிவுகளுக்கு எதிராக நான் , சின்ன சின்ன பின்னூட்டங்கள் இடுவது உண்டு. கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு. இப்படி பிரபல திராவிட இயக்க பதிவரான தமிழ் ஓவியாவிற்கும், நமக்கும் சின்ன சின்ன கருத்து Fight வருவதுண்டு. "மகாவிஷ்ணு இராம அவதாரம் எடுத்தது எதற்கு? -7" என்ற தலைப்பில் நடந்த கருத்துப் பரிமாற்றம்..இங்கே..

தமிழ் ஒவியா :மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டிகாவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

கபிலன்: பூமியின் நிலப்பரப்புகளில் காலா காலமாக Geographical மாற்றம் எப்படி ஏற்பட்டு வந்தது என்பதை Manorama புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு காலத்தில் நிலப்பரப்புகள் பெரும்பாலும் ஒன்றாக இருந்தன. காலப்போக்கில் பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள் காரணமாக நிலப்பரப்புகள் நகர்ந்து(Continental Plates) அதன் பிறகே ஒவ்வொரு கண்டமாக உருவெடுத்தது. அது மட்டுமல்ல, இந்த அவதாரங்கள் எடுத்த காலகட்டத்தில், அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா என்ற ஒன்று இருந்ததா? என்பதே கேள்விக்குறி தான்.

தமிழ் ஓவியா: இப்போது கடவுள்கள் ஏன் அவதாரங்கள் எடுப்பதில்லை.


இந்த கேள்விக்கு, பின்னூட்டத்தில் பதில் சொல்வதை விட, பதிவிலேயே சொல்லி விடலாம். ஏன்னா பதில் கொஞ்சம் பெருசு. ஒரு வேளை, நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனா? பலர் நினைக்கிறாங்க, ஆனா கண்டுக்காம விட்டுடுறாங்களா? என்ன மேட்டர்னு, பலரோட கருத்து தெரிய வரும்.

கபிலன்:

நண்பரே, நிரூபிக்க கூடிய விஷயங்களைக் கொண்டவையை, அறிவியல்(Science) என்போம். உதாரணமாக, Nuclear Science,Computer Science இப்படி. ஆனால் சமயங்களை நம்பிக்கைகள்( Religious Belief) என்று சொல்கிறோம் அதாவது hindu belief, Islam and christian faith என்று சொல்லுவோம். நிரூபிக்கப் படாத விஷயங்கள், மனிதனின் அறிவுக் கண்களுக்கு எட்டாத விஷயங்கள் அனைத்தும் பொய்யாகாது !

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ! ஒவ்வொரு மாதிரியான வழிபாடுகள் ! நம்ம இங்க இட்லி சாப்பிடுறோம், அமெரிக்காவுல பர்கர், பீட்சா சாப்பிடுறாங்க, கொரியாவில் மாமிசத்தை அரை வேக்காட்டில் சாப்பிடுவாங்க...ஏன் நாய்களைக் கூட உணவாக உண்ணும் இடங்கள் உண்டு. வெவ்வேறு உணவாக இருந்தாலும், கடைசியில், அனைத்தும் நம் பசியைத் தீர்க்கத் தான் பயன்படுகிறது. அதே போல தான் சமயங்களும். வெவ்வேறு சமங்களின் வழிபாடுகள், முறைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், அனைவரும் அன்பு செலுத்தி, நல்வழியில் நடந்து, இன்புற வேண்டும் என்பதைத் தான் எல்லா சமயங்களும் வற்புறுத்துகின்றன.

கடவுள் இருக்கிறார். இவ்வாறாக இருக்கிறார். அனைவரையும் நல்வழிப் படுத்துகிறார் என்பது நம்பிக்கை ! நம்முடைய நம்பிக்கைகள் அடுத்தவரை பாதிக்காதவரை, அடுத்தவரை புன்படுத்தாதவரை, நம் நம்பிக்கைளின்படி நடப்பதில் என்ன தவறு இருக்கிறது ?

கடவுளை ஒழித்தால் சாதி ஒழியுமா? ஏற்றத் தாழ்வுகள் நீங்குமா?
மனதில் தோன்றும் பதில் "வாய்ப்பே கிடையாது"

சாதிகள் களையப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. பெரியார் இறந்து, வருடங்கள் பல ஓடியும், சாதி ஒழியவில்லையே ஏன்?

காரணம் நடைமுறைச் சிக்கல்கள். பேச்சளவில் சாதி ஒழிய வேண்டும் என்று கூச்சலிடுவோம். எல்லா விண்ணப்பங்களிலும் சாதி என்ற இடத்தில் நம் சாதியை போட்டுக்கொள்வோம். பிறகு எப்படி சாதி ஒழியும் ? நம்மில் பலருக்கு, முழுமையான சாதிப் பெயர் இப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது தான் தெரியும். சாதிச் சான்றிதழ் வாங்க மணியக்காரிடமும்,தாசில்தாரிடமும் நடையோ நடை நடந்து சாதிச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு தானே இருக்கிறோம்? பேச்சளவில் சாதி இந்தளவு ஒழிந்திருப்பதற்கு பெரியார் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், பேச்சளவில் இருந்த சாதிக்கு, எழுத்து வடிவம் கொடுத்து ஏட்டில் ஏற்றிவிட்டதால், அதனை ஒழிக்க முடியாமல் தவிக்கிறோம்.

தெரியாம தான் கேக்குறேன்...கடவுளை நீங்கள் நம்புவதில்லை, அப்புறம் கடவுள் நல்லவரா இருந்தா, உங்களுக்கு என்ன? அல்லது கெட்டவராக இருந்தால் உங்களுக்கு என்ன? நாங்க கோவிலுக்கு போறதுல, சர்ச்சுக்கு போறதுல, மசூதிக்கு போறதுல உங்களுக்கு என்ன வருத்தம் ?

தங்கள் இயக்கத்தின் கருத்துக்களும், கொள்கைகளும், பல சாதி மக்களிடையே, பல சமய மக்களிடையே வேற்றுமைகளை உருவாக்குகிறது, பகையை வளர்க்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

யாரையாவது எதிர்த்தால் தான் இயக்கம் வலிவடையும் என்பது உண்மை தான். அதற்காக நாட்டின் ஒற்றுமையையும், மதச் சார்பின்மையையும் எதிர்க்க வேண்டாம் !

"நாத்திகனுக்கு இந்து அறநிலையத்துறை"
அடடா...என்னே நம் நிலைமை..!

திராவிட கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும், கடவுள் மட்டும் வேண்டாம், ஆனால் கடவுளின் உண்டியல் மட்டும் வேண்டும்.


என்னே ஒரு கொள்கை!

நான் பிடித்த முயலுக்கு மூணு கால்னு எத்தனை நாள் தான் சொல்லிக் கொண்டே இருக்கப் போகின்றீர்கள்.
மாற்றம் என்பது மானிடத் தத்துவம் !

உங்களை கடவுளை வழிபட அழைக்கவில்லை. கடவுளை நம்புவதோ, நம்பாமலிருப்பதோ அவரவர் தனிப்பட்ட விஷயம்.

அப்படி கடவுள் நம்பிக்கை உள்ள, பல கோடி மக்களின் நம்பிக்கையையும், அவர்களின் மனங்களையும் புன்படுத்தாமலாவது இருங்கள் என்று தான் கேட்கிறோம் !

தமிழ் ஓவியா, இப்படி தான் சொல்லுவார்னு நினைக்கிறேன்..."எங்கள் இயக்கத்தினுடைய, என்னுடைய கருத்தை சொல்வதற்கு எனக்கு முழு உரிமை உண்டு. யாருக்கும் பயப்படத் தேவை இல்லை. நீங்கள் அறியாமையில் பேசுகிறீர்கள். விடயம் தெரியாமல் பேசுகிறீர்கள். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். "

ஆஹா கபிலா....ஜூட்....

கருத்து வேறுபாடுகள் இயல்பு. அதற்கான பதிவு தான் இது. இதில் நண்பர் தமிழ் ஓவியாவின் மீது தனிப்பட்ட வெறுப்புகள் எதுவும் கிடையாது. அவரைப் புன்படுத்துவது இந்தப் பதிவின் நோக்கமல்ல அதற்காக எழுதியவையும் அல்ல.

கடைசியா....

சமுதாயம்ங்கறது ஒரு பாக்கெட் பால் மாதிரிங்க...அதுல நம்மைப் பிரித்து ஆள்வதற்கு ஒரு சில கூட்டங்கள் இருக்கு...அதை மட்டும் சிசர்ஸ் எடுத்து லைட்டா வெட்டி விட்டோம்னா...அன்பு என்கின்ற பால் வெள்ளமாக வழிந்து, சாதி மதச் சண்டைகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன், அமைதியுடன், சந்தோஷமாக வாழலாம்.


(டேய் மாதவா..என்ன என்னமோ பேசுறடா...எப்படிடா இதெல்லாம்...என்னமோ போடா....)

தமிழ் ஓவியாவின் எழுத்துக்கள் இங்கே!
http://thamizhoviya.blogspot.com/2009/07/7.html

அடிவாங்குறதுக்கு முன்னாடி.....குதிச்சுடுறா கைப்புள்ள ..................



31 comments:

சுவாதி said...

தமிழ் ஓவியா அவர்களின் பதிவுகளைப் படிக்கும் பொழுது, இவரின் இல்லாதக் கடவுளுக்காக, ஏன் இப்படி உருகுகிறார் என்று நானும் நினைத்ததுண்டு. ஆனாலும், அழகழகான பிள்ளையார், இராமர் படங்களை இவரின் பதிவில் பார்க்கும் பொழுது, இவரை ஒரு நாத்திகர் என்றே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கபிலன் said...

"சுவாதி said...
தமிழ் ஓவியா அவர்களின் பதிவுகளைப் படிக்கும் பொழுது, இவரின் இல்லாதக் கடவுளுக்காக, ஏன் இப்படி உருகுகிறார் என்று நானும் நினைத்ததுண்டு. ஆனாலும், அழகழகான பிள்ளையார், இராமர் படங்களை இவரின் பதிவில் பார்க்கும் பொழுது, இவரை ஒரு நாத்திகர் என்றே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை"

சரியாக சொன்னீங்க சுவாதி !
சும்மா அமைதியா இருக்குற நம்ம மனசை, புண்படுத்துற மாதிரி இருக்குங்க எனக்கு!
அந்த வருத்தத்தில் எழுதின பதிவு தாங்க இது!
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

அப்பாவி முரு said...

கபிலன்.,

என்னுடைய பெரியார் என்ற இடுகையே தமிழோவியாவின் மேலே நீங்கள் சொன்ன இடுகைக்கு பதில் சொல்லும் விதமான இடுகைதான்.
இணைப்பு.,

http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_29.html

கபிலன் said...

"அப்பாவி முரு said...
கபிலன்.,

என்னுடைய பெரியார் என்ற இடுகையே தமிழோவியாவின் மேலே நீங்கள் சொன்ன இடுகைக்கு பதில் சொல்லும் விதமான இடுகைதான்.
இணைப்பு.,

http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_29.html "

ஆம். உங்கள் பதிவிற்கு, நான் பின்னூட்டமும் அளித்திருக்கிறேன்.
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க அப்பாவி முரு!

மதி.இண்டியா said...

அண்ணே ,

வீரமணிதான் தமிழர் தலைவர் , அவர் தமிழர்களின் அழுக்கை அகற்றுவார் என நம்பும் (அல்லது நம்புவதாக நமக்கு காட்டும் ) இவர்களை எல்லாம் கணக்கில் எடுக்கலாமா ?

50 வருடமாக பேசி இவர்கள் என்ன சாதித்தனர் ? கோவில்களில் கூட்டம் அம்முது

கபிலன் said...

"mathi.India said...
அண்ணே ,

வீரமணிதான் தமிழர் தலைவர் , அவர் தமிழர்களின் அழுக்கை அகற்றுவார் என நம்பும் (அல்லது நம்புவதாக நமக்கு காட்டும் ) இவர்களை எல்லாம் கணக்கில் எடுக்கலாமா ?

50 வருடமாக பேசி இவர்கள் என்ன சாதித்தனர் ? கோவில்களில் கூட்டம் அம்முது"

நீங்க சொல்றது சரி தாங்க மதி...
இருந்தாலும் நம்ம மனசுல இருக்குறத எங்கயாச்சும் கொட்டிடனும்னு தோணுச்சு அதான்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

சோழன் said...

திரு. லோ. த.,
இந்த விஷயத்தில் அப்பாவி முரு வின் கருத்துக்கள் மிகவும் அருமை! பெரியார் என்ற ஒரு மனிதன் நிச்சயம் இன்று உள்ள தி.க. வினரை போல கண்மூடித்தனமாக கடவுள் இல்லை என்று எதிர்த்து இருக்க மாட்டார் என்று நம்பவே மனம் விழைகிறது! என்னதான் பெரியாரின் "கடவுள இல்லை! கடவுள இல்லை!!" என்ற வாதங்கள் இன்று தனித்து படிக்கும்போது கருத்து வேறுபாடுகளை உண்டாக்கினாலும் அவை மிக உறுதியாக இருந்த ஜாதி வேறுபாடுகளை உடைத்து, முற்றிலும் அழிக்கவில்லை என்றாலும் அளவில் சிறியதாக்கி இருக்கிறது! அவர் காலத்தில் இருந்த அளவுக்கு ஜாதி கொடுமைகள் இன்று இல்லை என்று நாம் அறிவோம்! மற்ற மாநிலத்தவரை பார்க்கும்போது நாம் சற்று மாறி இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.

இன்று உள்ள தி.க. வினர் அவரைப்போல் அல்லாமல், பதவிக்காகவும் பொருளுக்காகவும் அவர் அன்று உரைத்ததையே இன்றும் ஒப்பிப்பது (பின்பற்ற கூட இயலாமல்), மானம் கேட்ட செயல்! அவர் சொன்ன கருத்துக்களை அவர்கள் புரிந்துக்கொள்ளவும் முயலவில்லை, பின்பற்றவும் முடியவில்லை என்றே தோன்றுகிறது!

தங்கள் ..
//திராவிட கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும், கடவுள் மட்டும் வேண்டாம், ஆனால் கடவுளின் உண்டியல் மட்டும் வேண்டும்.//
கருத்து உண்மையை இடித்து உரைப்பவை!

"மற்றவரை புண்படுத்துவது ஒரு கொள்கையா?" - நெத்தியடி தலைப்பு! மற்றவரை துன்புருத்தவேண்டம், புண்படுத்த வேண்டம் என்று தான் மதங்கள் கூறுகின்றன! இவர்களுக்கு தான் எந்த கோட்பாடுமே கிடையாதே! இவர்களுடைய கொள்கை ஜாதியை ஒழிப்பது என்ற அடிப்படையை மறந்து மதத்தை ஒழிக்க கிளம்பி விட்டார்கள்!

சோழன் said...

பிராமணர்களை பற்றிய பெரியாருடைய கருத்துக்களும் அப்படிப்பட்டவையே! அன்று பிராமணர்களும் பிராமணீயமும் அப்படி இருந்தது! அவர்கள் இன்று இவ்வளவு மாறி இருக்கிறார்கள் என்றால் அதில் நிச்சயம் பெரியாரின் பங்கு மிகுதி! இன்று அவருடைய கருத்துக்களை பகுதி பகுதியாக பிரித்து படித்தால் நிச்சயம் தவறான புரிதலே மிஞ்சும்!

கபிலன் said...

"சோழன் said...
திரு. லோ. த.,
" என்னதான் பெரியாரின் "கடவுள இல்லை! கடவுள இல்லை!!" என்ற வாதங்கள் இன்று தனித்து படிக்கும்போது கருத்து வேறுபாடுகளை உண்டாக்கினாலும் அவை மிக உறுதியாக இருந்த ஜாதி வேறுபாடுகளை உடைத்து, முற்றிலும் அழிக்கவில்லை என்றாலும் அளவில் சிறியதாக்கி இருக்கிறது! "

பெரும்பாலும் உங்கள் கருத்துக்களை ஒப்புக்கொள்கிறேன்.

இருப்பினும்,கடவுள் இல்லை என்று கூறியதால் சாதியை ஒழிக்க முடியும் என்று சொல்லுவது போலிப் பிரச்சாரம். அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும். சமுதாயத்தில் கஷ்டப்படுகிறவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதனால் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடுகளே, ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தது என்று தான் சொல்ல வேண்டும். சாதிக் கொடுமைகள் குறைந்துள்ளதைத் தான், சாதி இந்தளவுக ஓழிந்துள்ளதற்கு பெரியார் ஒரு முக்கிய காரணமாக சொல்லி இருக்கிறேன். கடவுள் இல்லை என இவர்கள 60 ஆண்டுகளாக கூறுகிறார்கள். சாதி ஒழிந்துவிட்டதா ? சாதிக் கொடுமைகளை அழிப்பது வேறு, சாதியை அழிப்பது என்பது வேறு!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

கபிலன் said...

"சோழன் said...
பிராமணர்களை பற்றிய பெரியாருடைய கருத்துக்களும் அப்படிப்பட்டவையே! அன்று பிராமணர்களும் பிராமணீயமும் அப்படி இருந்தது! அவர்கள் இன்று இவ்வளவு மாறி இருக்கிறார்கள் என்றால் அதில் நிச்சயம் பெரியாரின் பங்கு மிகுதி! இன்று அவருடைய கருத்துக்களை பகுதி பகுதியாக பிரித்து படித்தால் நிச்சயம் தவறான புரிதலே மிஞ்சும்! "

ஹா ஹா...பெரியாரால் பிராமணர்கள் மாறி இருக்கிறார்களா ? அப்படி என்றால் தமிழ்நாட்டு பிராமணர்கள் மட்டும் தானே மாறி இருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் உள்ள பிராமணர்களும் மாறி இருக்கிறார்களே...அது எப்படி....
காலத்தின் கட்டாயத்தில் யாரும் விதி விலக்கல்ல. அக்காலத்தில், பிராமணர்கள் மட்டுமல்ல, பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்களும் தீண்டாமையை கையாண்டு இருக்கிறார்கள்.இதில் பிராமணர்களை மட்டும் எதிர்த்து பேசுவது திக வினரின் பிரித்தாளும் சூழ்ச்சி. இப்பொழுது எப்படி ஜாதிக் கட்சிகள் பேசுகின்றனவோ, அதே மாதிரியான வடிவமாகத் தான் இந்த கொள்கையையும் பார்க்க முடியும். அதுவும் இல்லாமல் வேறு சில சாதிகளுக்கு இடையேவும் இப்படி சண்டை நடக்கிறது. அதை கேட்க இவர்களுக்கு தைரியம் கிடையாது. உயிர் பயம்!

சோழன் said...

ஒரு மனோவியல் புத்தகத்தில் படித்த கதை:
குரு ஒருவர் தனது சீடர்களுக்கு தினமும் கல்வி கற்றுக்கொடுக்கும்போது ஒரு பூனை தினமும் வந்து தொல்லை கொடுத்ததாம்! அதற்காக தினமும் அவர் அந்த பூனையை கட்டிப்போட்டு விடுவது வழக்கமாக இருந்ததாம்! சில காலங்களுக்கு பிறகு அந்த குருவின் மறைவுக்கு பிறகு அந்த குருகுலத்தின் பிரதான சீடன் குருவாக தலைமையேற்ற பிறகு முதல் வகுப்பில் அவன் செய்த முதல் காரியம், எங்காவது ஒரு பூனையை தேடி கொண்டுவந்து கட்டிப்போடுங்கள் அப்பொழுது தான் பாடம் நடத்த முடியும் என்று கட்டளை இட்டது தானாம்! இவ்வாறு தான் நம்முடைய மதத்தின் கருத்துக்களை நம் மதத்தை நமக்கு போதித்தவர்களும் புரிந்து வைத்து இருக்கிறார்கள்! இது போன்ற விமர்சனங்கள் எழுந்த பிறகு தான் நம் செயல்களின் அர்த்தத்தை நாமே தேட ஆரம்பித்தோம்! நம்முடைய சுய வளர்ச்சிக்கு பெரியார் மிகவும் உதவி இருக்கிறார் என்றால் மிகையாகாது!

அதற்காக இன்று உள்ள தி.க. வினர் கூற்று மானம் கேட்ட செயலாக இருக்கிறது என்பதில் வேறு கருத்து இருக்க இயலாது என்று நம்புகிறேன்!

சோழன் said...

போதித்தவர்கள் என்று நான் கூறுவது பூசாரிகளை & மந்திரம் ஓதுவார்களை மட்டும் தான்!

சோழன் said...

மற்ற மாநிலத்தில் பிராமணர்கள் இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார்களா என்று தெரியவில்லை திரு.லோ.த. நம்மை மட்டும் தான் தெய்வீக மொழி சமஸ்கிருதம் என்று ஏமாற்ற முடிந்தது என்று தோன்றுகிறது! மற்ற மொழிகளில் சமஸ்கிருதம் கலந்து இருப்பதால் அவ்வாறு சொன்னாலும் மற்ற மாநிலத்தவர்கள் நம்பி இருக்க மாட்டார்கள்!

கபிலன் said...

"சோழன் said...
இது போன்ற விமர்சனங்கள் எழுந்த பிறகு தான் நம் செயல்களின் அர்த்தத்தை நாமே தேட ஆரம்பித்தோம்! நம்முடைய சுய வளர்ச்சிக்கு பெரியார் மிகவும் உதவி இருக்கிறார் என்றால் மிகையாகாது! "

ஹா ஹா..பெரியார் பற்றிய உங்கள் அபிப்ராயத்திற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தூரத்தில் தெரிவது கிளி என்று நீங்கள் சொல்கிறீர்கள், அது கிளி அல்ல பச்சொந்தி என்று நான் சொல்கிறேன்.

"நான் பிடித்த முயலுக்கு மூணு கால்னு சொல்றவங்க தான் அவங்க"

என்னுடைய தனிப்பட்ட கருத்து..இது தான்

சோழன் said...

இன்றைய தி.க என்று கூறிக்கொள்பவர்கள் நீங்கள் சொல்வதைப்போல் தான் என்று நானும் ஒப்புக்கொள்கிறேன்! அனால் இவர்களுடன் பெரியாரை சேர்த்து பேச வேண்டம் என்று தான் நினைக்கிறேன்! நீங்களும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்ற ரீதியில் பேசுவது போல தெரிகிறதே!

கபிலன் said...

"சோழன் said...
இன்றைய தி.க என்று கூறிக்கொள்பவர்கள் நீங்கள் சொல்வதைப்போல் தான் என்று நானும் ஒப்புக்கொள்கிறேன்! அனால் இவர்களுடன் பெரியாரை சேர்த்து பேச வேண்டம் என்று தான் நினைக்கிறேன்! நீங்களும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்ற ரீதியில் பேசுவது போல தெரிகிறதே! "

ஐந்து விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
ஒருவருக்கு விஜய் பிடிக்கலாம் மற்றொருவருக்கு அஜித் பிடிக்கலாம்
ஒருவருக்கு VSOP பிடிக்கலாம் மற்றொருவருக்கு Old Monk பிடிக்கலாம்.

இதில் யார் சொல்வதிலும் தவறு இருப்பதாக தெரியவில்லை. அப்படித் தான் நம் கொள்கைகளும்!

இப்பொழுது பெரியார் வாழ்ந்து கொண்டு இருந்தால், அதே கொள்கைகளைத் தான் கடைப் பிடித்து இருப்பாரா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

"அதற்காக இன்று உள்ள தி.க. வினர் கூற்று மானம் கேட்ட செயலாக இருக்கிறது என்பதில் வேறு கருத்து இருக்க இயலாது என்று நம்புகிறேன்!"
இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு...ஹி ஹி...

கிருஷ்ண மூர்த்தி S said...

கடவுள் கோட்பாட்டையும், மத நம்பிக்கைகள், அதன் பேரில் எழுந்த சடங்குகளையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்வதால் வரும் கோளாறுகள் இவை. சடங்கு மயமாகிப்போனதில், கடவுள் நம்பிக்கையாளர்கள் மட்டுமல்ல, மறுப்பாளர்கள் கூட, திரிந்து, ஒன்றுக்கும் உதவாமல் போனதில் வியப்பு ஒன்றுமில்லையே!

தமிழ் ஓவியாவின் பதிவில் புதிதாக என்ன இருக்கிறதென்று நினைக்கிறீர்கள்? அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால், பெரியார் அவருக்குப் புரிந்த அளவு, பேசியதைத் தானே இன்றைக்கும், கிளிப்பிள்ளைகள் மாதிரித் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது?

சுயமாகச் சிந்தித்து, தன்னுடைய அனுபவத்தில் அது சரிதானா என்பதையும் பார்க்கிற பார்வை ஒன்றே நிலைக்கும். மற்றவை நீர்த்துப் போகும்!

கபிலன் said...

"கிருஷ்ணமூர்த்தி said...
கடவுள் கோட்பாட்டையும், மத நம்பிக்கைகள், அதன் பேரில் எழுந்த சடங்குகளையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்வதால் வரும் கோளாறுகள் இவை. சடங்கு மயமாகிப்போனதில், கடவுள் நம்பிக்கையாளர்கள் மட்டுமல்ல, மறுப்பாளர்கள் கூட, திரிந்து, ஒன்றுக்கும் உதவாமல் போனதில் வியப்பு ஒன்றுமில்லையே!

தமிழ் ஓவியாவின் பதிவில் புதிதாக என்ன இருக்கிறதென்று நினைக்கிறீர்கள்? அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால், பெரியார் அவருக்குப் புரிந்த அளவு, பேசியதைத் தானே இன்றைக்கும், கிளிப்பிள்ளைகள் மாதிரித் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது?

சுயமாகச் சிந்தித்து, தன்னுடைய அனுபவத்தில் அது சரிதானா என்பதையும் பார்க்கிற பார்வை ஒன்றே நிலைக்கும். மற்றவை நீர்த்துப் போகும்"

மிகவும் தெளிந்த ஆழமான பார்வையில் எழுந்த கருத்தாக இருக்கிறது உங்களுடையது.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Anonymous said...

U r post is justified as you cannot expect decency or honesty or ethics or any hint of character traits you see in a cultured human being from DK ppl.Lets not get into debate of gods existence. For a moment let us(ME) assume god exists. Pouring milk,ghee, oil, fruits on him. Killing ppl on the name of gods, demolishing temples, conversion for greed and money. I am not able to connect with these stuff and these are happ because we assume existence of so called god and that is why I beleive he should be thrown out of our lives and land(all over).

Ram

காகிதப்பூ said...

கடவுள் இருக்கிறாரென்று விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தபடவில்லை. அதே சமயம் கடவுள் இல்லை என்பதும் நிருபிக்கப்படவில்லை. கடவுள் இருக்கிறார் என்பது எவ்வள்வு தூரம் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டதோ, அவ்வளவு தூரம் அப்பாற்பட்டது கடவுள் இல்லை என்பதும். அகவே இரண்டும் அடிப்படயில் நம்பிக்கைகளே. அவற்றுக்காக இப்படி போரடுவதென்பதும் அடிபடை மதவாதமாகும், பகுத்த்றிவுக் கொள்கையுட்பட. உண்மையான் பகுத்த்றிவாளன் இந்த இரண்டு கொள்கை பற்றியும் அவ்வள்வாக அலட்டிக்கொள்ள மாட்டான்.

தமிழ் ஓவியா said...

http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_15.html படிக்க வேண்டுகிறேன்

Anonymous said...

உங்களுக்கு உவப்பில்லாத ஒரு விஷயத்தை ஒருவர் எழுதுகிறார் என்றால் ஏன் அவருடைய தளத்தை பார்க்க வேண்டும், இப்படி அதைக் குறித்து விவாதிக்க வேண்டும்?

அவருடைய எழுத்துக்களுக்கு நீங்கள் ஆற்றுகிற எதிர்வினைகளே அவரது எழுத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.

வலை உலகம் ஒருவருக்கு மட்டுமோ ஒரு கருத்தைக் கொண்டிருப்போருக்கு மட்டுமோ சொந்தமானதில்லை. ஒருவரை இப்படி எழுதாதே, இப்படித்தான் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லுவதே மிகப் பெரிய அராஜகம்.

வலைப்பதிவு எழுதுகிற பலர் தங்களை ஒரு நீதிபதியாகப் பாவித்துக் கொண்டு தீர்ப்பெழுதக் கிளம்பி விடுகிறார்கள். இந்தப் பதிவு நீங்களும் அப்படி ஒரு நீதிபதி பிம்பமாக உங்களைக் கருதியிருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது.

மற்றவர்களைப் புண்படுத்துவது ஒரு கொள்கையா என்று கேட்கிறீர்கள். உங்கள் சதையை ஆழத் துளைத்த ஒரு தோட்டாவை வெளியே எடுக்க அந்தத் தோட்டா ஏற்படுத்திய கிழிசலைக் காட்டிலும் பெரிதாகக் கிழித்தால்தான் முடியும். இதை எந்த வகையில் புண்படுத்துவது என்று சொல்லுவீர்கள்.

நீங்கள் கோயிலுக்கோ மசுதீக்கோ சர்ச்சுக்கோ செல்வதால் அவருக்கு ஏன் வருத்தம் என்று கேட்கிறீர்கள். இதில் எந்த இடத்துக்கும் போகாத பகுத்தறிவாளர்களால் மத ரீதியாக எந்தக் கலவரமும் ஏற்பட்டதில்லை. மாறாக இந்த மூண்று இடங்களுக்கும் போகிறவர்களால்தான் அவர்களுக்குள்ளேயே சண்டைகள் வருகிறது. இலவச இணைப்பாக பகுத்தறிவாளர்களுடனும் சண்டையிடுகிறார்கள். இப்போது சொல்லுங்கள் குற்றம் சாட்டி விரல் நீட்ட வேண்டியது இந்த வழிபாட்டுத் தளங்களுக்குப் போகிறவர்களா அல்லது பகுத்தறிவாளர்களா.

உதாரணத்துக்குக் கோயிலுக்குப் போகிறவர்களையே எடுத்துக் கொள்வோம். ஒரு சாதியாரின் கோயிலுக்குள் வேற்று சாதி மனிதர் ஒருவர் நுழைகிறார் என்றால் அவர் நம்முடைய சாதிக்கு சமமான சாதியில் பிறந்தவராகவோ நம்முடைய சாதிக்கு மேலான சாதியில் பிறந்தவராகவோ இருந்தால்தான் நம் கோயிலுக்குள் விட வேண்டும் என்கிற மனப்பான்மை இல்லாத பிற்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் இருக்கிறார்கள் சொல்லுங்கள். நிஜமான பகுத்தறிவாளர்களுக்கு பார்ப்பனர்கள் மீது கோபமிருப்பதைப் போலவே செயலால் பார்ப்பனர்களாக நடந்துகொள்கிற பிற்படுத்தப்பட்டோர் மீதும் கோபம் உண்டு. பார்ப்பன உணர்வோடு நடந்து கொள்ளுகிற சொந்த ஜாதியினராகவே இருந்தாலும் அவர்களைக் கண்டிக்கிற நேர்மை மக்களுக்கு வளராத வரை தமிழ் ஓவியா போன்றோர் எழுதியாக வேண்டிய அவசியம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

ராயலசீமா மகேந்திரன்

கபிலன் said...

ஒருவர் ஒரு கருத்தை சொல்ல எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவிற்கு அவரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு கூறுவதற்கும் உரிமை உண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீதிபதியாக பாவித்துக் கொண்டு இந்தப் பதிவை எழுதவில்லை. சாதியை ஒழிக்க வேண்டும் ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடயாது நண்பரே. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ராயலசீமா மகேந்திரன்.

Anonymous said...

"நான் மக்களை வதைக்கும் சாதியை நெருப்பில் போடப் போகிறேன், அதில் உன் மதம் விலகியிருந்தால் எடுத்துக்கொண்டு போ, இல்லையென்றால் அதையும் நெருப்பில் போடுவேன், அதிலிருந்து கடவுள் அப்பாற் பட்டவராக இருந்தால் பிரித்துக்கொண்டு போ, இல்லையெனில் அவரையும் நெருப்பில் போடுவதைத் தவிர வேறு வழியில்லை." இது பெரியார் சொன்னது.

நாத்திகர்கள் அறநிலையத்துறையில் இருப்பது கொள்கை விரோதம் இல்லை, வரிப்பணத்தை கயவர்களிடமிருந்து காக்கும் ஒரு துறை.
முதலில் பெரியாருக்கு முன்பு இருந்த சமூக நிலையையும் தற்போதைய நிலையையும் அவதானித்துவிட்டு பின்னர் எழுதுங்கள், நுனிப்புல் மேய வேண்டாம்.........

Anonymous said...

kadaviullai yenbadhu unmai. bommaiyai kumbittu bvembi pogadheergal thamizhare!

கபிலன் said...

" Ellaam Vallan said...
kadaviullai yenbadhu unmai. bommaiyai kumbittu bvembi pogadheergal thamizhare! "


உங்களுக்கு உண்மை என்று தெரிவது எனக்கு பொய்யாகத் தெரிவதில் வியப்பேதும் இல்லைத் தமிழரே !
பொம்மையை கும்பிடுகிறோம், மண்ணைக் கும்பிடுகிறோம், மரத்தைக் கும்பிடுகிறோம், குப்பையைக் கும்பிடுகிறோம் அது அவரவர் விருப்பம். ஒருவரின் நம்பிக்கை மற்றவரை எந்த விதத்திலும் காயப்படுத்தவில்லை. யாருக்கும் எந்தக் கெடுதலும் ஏற்படுத்தவில்லை. பகுத்தறிவு கும்பல் என மார்தட்டி மற்றவரை இழிவுபடுத்தலைவிட, பொம்மையை கும்பிட்டு வெம்பிப் போவதைப் பெருமையாக நினைக்கிறேன் தமிழரே!

கபிலன் said...

"Anonymous said..
...
நாத்திகர்கள் அறநிலையத்துறையில் இருப்பது கொள்கை விரோதம் இல்லை, வரிப்பணத்தை கயவர்களிடமிருந்து காக்கும் ஒரு துறை."

தமிழ்நாட்டில் மிகப் பெரியக் கொள்ளைக் கூட்டம் எது என்று PLAYSCHOOL குழந்தைகளிடம் கேட்டால் கூட அருமையாக சொல்லும் : )

"முதலில் பெரியாருக்கு முன்பு இருந்த சமூக நிலையையும் தற்போதைய நிலையையும் அவதானித்துவிட்டு பின்னர் எழுதுங்கள், நுனிப்புல் மேய வேண்டாம்........."

பெரியார் சமுதாய முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே சமயம் பேச்சளவில் இருந்த சாதியை, எழுத்தாக்கி ஏட்டில் ஏற்றி, சாதியை நிரந்தரமாக்கிய பெருமையும் அவருக்கே சாரும் என்பதையும் மறுக்க முடியாது அனானி.

வால்பையன் said...

//சாதிகள் களையப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. பெரியார் இறந்து, வருடங்கள் பல ஓடியும், சாதி ஒழியவில்லையே ஏன்?//

தன்னை உயர்சாதி என சொல்லி கொள்ள ஆள் இருக்கும் போது எத்தனை பெரியார் வந்தாலும் சாதி ஒழியாது தான்! சாதி கூட கிடக்கட்டும், அந்த கிராஸ் பெல்டு எதுக்குன்னு சொல்லுங்களேன்!

கபிலன் said...

"வால்பையன் said...
தன்னை உயர்சாதி என சொல்லி கொள்ள ஆள் இருக்கும் போது எத்தனை பெரியார் வந்தாலும் சாதி ஒழியாது தான்! சாதி கூட கிடக்கட்டும், அந்த கிராஸ் பெல்டு எதுக்குன்னு சொல்லுங்களேன்!"

நம்மலே ஓடி போய் என்னைக் கீழ் சாதியில் சேர்...MBC கொடு,SC கொடு,ST கொடு என்று போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. துட்டு வருதுன்னா....கீழ் சாதி என்ற பெயரிலும் இருக்கத் தயார் என்பது தான் இப்போதைய நிலைமை...!

நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் போது எத்தனைப் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது தான் !

காலப் போக்கில், சாதிக் கொடுமைகள் எப்படி நீங்கிக் கொண்டிருக்கின்றனவோ...அதே போல பூநூல் கலாச்சாரமும் மாறும் ! ஒருவர் பூநூல் போடுவதாலோ...திருநீர் அணிவதாலோ...குல்லா அணிவதாலோ...யாரையும் தொந்தரவு செய்யாத பட்சத்தில் அது பெரிய தவறாகத் தெரியவில்லை !

நன்றி வால்பையன்!

வால்பையன் said...

//திருநீர் அணிவதாலோ...குல்லா அணிவதாலோ...யாரையும் தொந்தரவு செய்யாத பட்சத்தில் அது பெரிய தவறாகத் தெரியவில்லை !//

உங்கள் பக்கத்து வீட்டில் “இது பத்தினி வீடு” என போர்டு இருந்தால் உங்களுக்கு பெரிய தப்பாக தெரியாது தானே!

கபிலன் said...

"வால்பையன் said...
//திருநீர் அணிவதாலோ...குல்லா அணிவதாலோ...யாரையும் தொந்தரவு செய்யாத பட்சத்தில் அது பெரிய தவறாகத் தெரியவில்லை !//

உங்கள் பக்கத்து வீட்டில் “இது பத்தினி வீடு” என போர்டு இருந்தால் உங்களுக்கு பெரிய தப்பாக தெரியாது தானே! "

நான் பகுத்தறிவாளி (மற்றவன் .....?), இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்(மற்ற இடத்துல ..?), சுத்தமான நெய்யால் ஆன இனிப்புகள் விற்கப்படும்,அக்மார்க் முத்திரை, வேட்டி,சேலை,தமிழன், திராவிடன் என அடையாளப்படுத்திக்குற விஷயம் ஏற்கனவே இருந்துட்டு தாங்க இருக்கு. எந்த ஒரு சின்ன அடையாளமும் ஒரு வகையில் மற்றொருவனை குறை சொல்ற மாதிரி தாங்க இருக்கும். இது உலக நடைமுறை. அடையாளமே இல்லாம இருக்கணும்னா நிர்வாணமாகத் தான் இருக்கணும். அப்ப கூட ஆண் பெண் என்ற அடையாளங்கள் மிஞ்சும்.

அது மட்டுமில்ல, பாக்யராஜ் படத்துல ஒரு காட்சி வரும்....யாராவது ஒரு பத்தினி பேரை சொல்லுங்கன்னு கேட்பார். எல்லோரும் கண்ணகியை சொல்லுவாங்க...அப்போ உங்க பொண்டாட்டிங்க பத்தினிகள் இல்லையான்னு திருப்பி கேட்பார்.

என் பக்கத்து வீட்டுக்காரர் இது பத்தினி வீடு என்று எழுதி வைத்திருந்தால் கூட எனக்கு தப்பாகத் தெரியாது.
இதையே அவர் " என் பக்கத்து வீடு பத்தினி வீடு அல்ல " என்று எழுதியிருந்தால் தப்பாகத் தெரியும் !

LinkWithin

Blog Widget by LinkWithin