Saturday, November 23, 2013

இந்த சாதிக்காரன் இப்படித் தான் இருப்பான்...!

சாப்ட்வேர் ப்ராஜெக்ட் சம்பந்தமாக ஒரு தொழிலதிபரிடம் பேச நிகழ்ந்தது. அவர் ஒரு இஸ்லாமியர். பல்வேறு தொழில்களில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொடிகட்டி பறக்கும் அரசியல் செல்வாக்கு மிகுந்த ஒரு விவிஐபி. மிகவும் எளிமையான மனிதர்.

ப்ராஜெக்ட் நிமித்தமாக பேசி முடித்த பிறகு, அவர் ஆரம்பிக்கும் நிறுவனம் பற்றி சொன்னார். பிறகு அதற்கு ஒரு தலைமை செயல் அதிகாரி (CEO) வேண்டும் என்றார்.

"கபிலன், எனக்கு ஒரு நல்ல திறமையான சேல்ஸ் அல்லது மார்கெட்டிங்க் போன்றவற்றில் 15 வருடம் அனுபவமுள்ள, கம்பெனி நிர்வாகம் அறிந்த ஒருவர் இருந்தால் சொல்லுங்கள். மாதம் 10 லட்சம் சம்பளம் தருகிறேன். மற்றும் கார், தங்குவதற்கு பங்களா போன்ற வசதிகளையும் செய்து தருகிறேன். இருந்தால் சொல்லு ப்பா "

அடடா.... 10 லட்சம் சம்பளமா...நம்மலே ஒரு பிட்டை போட்டு பாத்துறலாமான்னு யோசிச்சிட்டே...சார்...அந்த மாதிரி ஒரு 3 அல்லது 4 பேர் எனக்குத் தெரியும் நான் உங்களுக்கு இமெயில் அனுப்பச் சொல்கிறேன் சார். என்றேன்.

உடனே அவர்,
" சரி பா...ஆனா ஒரே ஒரு கண்டிஷன், அவர் ஐயர் வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மற்ற வகுப்புகள் வேண்டாம்" என்றார்.

ஓகே...நமக்கு பேசிக் தகுதி அவுட்...அது சரி....ஆனால் ஒரு இஸ்லாமிய தொழிலதிபர், தான் தேர்ந்தெடுக்கும் ஒருவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இப்படி சொல்கிறாரே என விழித்தேன். ஆச்சர்யத்தில் விழித்த என்னைப் பார்த்த அவர்,

"கபிலா...உலகத்துலயே ரொம்ப உஷாரான திறமையான அறிவாளியான இனம் எது தெரியுமா?" என்றார்.

"தெரியலிங்க" என்றேன்.

"யூதர்கள். நம் ஊரில் அது போலத் தான் ஐயர் வகுப்பினர். நாம் போடும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் துணிச்சலுடன் சில முடிவுகள் எடுத்து அதன் மூலம் பொருள் ஈட்ட வேண்டும். அந்த விஷயத்தில் ஐயர் தான் டாப்" என்றார்.

சரிங்க...சொல்றேன்...என்று கிளம்பினேன்.

ஐயர் வகுப்பினர் திறமையானவர்கள் என்பதை மறுக்கவில்லை.

ஆனால், சாதியை வைத்து அவன் இப்படித் தான் இருப்பான், இவன் இப்படித் தான் இருப்பான் என்ற நம்பிக்கை உயர் மட்டத்திலும் ஆழமாக இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

என்ன ஒரு ஆறுதல் என்றால், அந்த இஸ்லாமிய தொழிலதிபருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். அந்த தலைமுறையில் இருப்பவர்கள் அப்படித் தான் நினைப்பார்கள் என்று நினைத்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

இப்போதைய தலைமுறை சாதியை வைத்து குணத்தையும், திறமையையும் எடை போடாது என்று நம்பிக்கை கொள்வோம்.

LinkWithin

Blog Widget by LinkWithin