Saturday, July 18, 2009

எதையும் ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான்!

ஆபீஸ்ல இருந்து நம்மல Samoa என்கிற நாட்டில் ஒரு ப்ராஜெக்ட் Implementationகாக அனுப்பி இருக்காங்க. ஆஸ்திரேலியவுக்கும், நியூசிலாந்துக்கும் நடுவில் உள்ள ஒரு சிறு தீவு தான் Samoa.

நேரடி விமானம் இல்லாததால், ஆஸ்திரேலியாவிலிருந்து செல்ல வேண்டும். விசா, டிக்கெட், டாடுமென்ட் அது இதுன்னு எல்லா எடுத்துட்டு கிளம்பினோம், நானும் என் அலுவலக நண்பர் சரவணனும்.

இது தான் பயண விவரம். ஆஸ்திரேலியாவிற்கு Single Entry Visa, சமோவிற்கு On Arrivalஇல் Visa.
சென்னை -> ஹாங்காங்க் -> சிட்னி->சமோவா
சமோவா -> சிட்னி ->ஹாங்காங்க்->சென்னை

செக் இன் செஞ்சிட்டு, அடுத்து நம்ம ஊர் Immigration.
ஆபீசர் : நீங்கள் ஆஸ்திரேலியா செல்வது முதல் முறையா?
நம்ம : ஆமாங்க, ஆனா, எங்க வேலை சமோவால..
ஆபீசர் : Western Samoa ? என்ன கேபிடல் அந்த நாட்டுக்கு?
(நல்லா கேக்குறாங்கய்யா...டீடெய்லு...)
நம்ம : ஆமாங்க..கேபிடல் ஆபியா..
(ஆப்பு + ஐயா = ஆப்பையா=> ஆப்பியா மரூஉ மொழி..ஹி ஹி..)


சரின்னு முடிச்சுட்டு அதி காலை 2:45 AM மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டோம். ஹாங்காங்க் வந்து சேர்ந்தோம். பத்து மணி நேரம் கழிச்சு தான் சிட்னிக்கு விமானம். டாலர்ல விலை போட்டு இருந்ததால, அதை நம்ம ஊரு காசுக்கு மாத்தி கணக்கு போட்டு, ஐயோ இவ்வளவா ?அப்படின்னு சொல்லிட்டு, வழக்கம் போல, ட்யூட்டி ஃப்ரீ கடைகள் உள்ள போயிட்டு, எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு, எதுவும் வாங்காம சுத்திக்கிட்டு இருந்தோம். நம்ம ஊர், Old Monkல லைட்டா தண்ணி ஊத்தி வச்சா எப்படி ஒரு கோல்டன் பிரவுன் கலர்ல இருக்குமோ, அதே மாதிரி கலர்ல, அதையே நல்ல பாட்டில்களில் கலர்புல்லா, பேக் செய்து வைத்து மாதிரியான நிறைய பாட்டில்கள்.பெருசு,சிறுசுன்னு பலரும்,அந்தக் கடைகளில் தான் வாங்கிட்டு இருந்தாங்க.


லெப்ட்ல சரவணன், ரைட்ல நான் ஹாங்காங்க் டிரான்சிட்டின் போது....

சரி,நேரம் ஆயிடுச்சு. சிட்னி விமானத்துல ஏறத் தயாராகிக் கொண்டிருந்தோம். கேட் உள்ள வந்துட்டோம். ஒருத்தர் ஓடி வந்து நண்பரிடம் பாஸ்போர்ட் கேட்டார். என்னிடமும் கேட்டு வாங்கிப் பார்த்தார். You have to change your passport, as your foto doesnt resemble you" அப்படின்னாரு அந்த ஜெண்டில்மேன். டேய் ராசா, இது நான் சின்ன வயசுல கோல்ட் ஸ்பாட் குடிச்சிட்டு இருந்த போது எடுத்தது, இப்போ.... முகம் மாறி இருக்காதான்னு சொல்ற மாதிரி சொன்னேன்.(இந்த கோழி சிறுசா இருக்க சொல்ல உறிச்சது இது, இதே கோழி பெருசா இருக்க சொல்லு உறிச்சது அது...ந்னு மகராசன் படத்துல கமலஹாசன் சொல்ற மாதிரி). சரி டா ராசா...கிளம்புங்கோன்னு சொல்லி அனுப்பிட்டாரு...


9 மணி நேரப் பயணத்திற்கு பிறகு ஹாங்காங்கிலிருந்து சிட்னி வந்து சேர்ந்தோம். ஆகா, இப்போ ஆஸ்திரேலியவுல வேற அது இதுன்னு பிரச்சினைன்னு சொல்றாங்களே...நம்ம வேற முதல் முறையா வர்றோம் ஆஸ்திரேலியாக்கு, Immigrationல பிண்ணிப் பெடல் எடுக்கப் போறாங்கன்னு நினைச்சிட்டே போனோம்...நம்ம Triplicane ரத்னா கேப் கேஷியர் மாதிரி, காலை ஆட்டிக் கொண்டு ஒரு ஆபீசர் உட்கார்ந்துட்டு இருந்தார். அவர் கிட்ட போனேன்.ஆனா ஒண்ணுமே சொல்லல, எங்க போறீங்கன்னு கேட்டுட்டு, பட்டுன்னு ஒரு சீல் போட்டுக் கொடுத்துட்டாரு. எல்லாம் முடிஞ்சுதன்னு நினைச்சு பெரு மூச்சு விடுறதுக்குள்ள, அவர் ஒரு அம்மணியை கைக்காட்டி, உங்க பாஸ்போர்ட்டை இவங்க கிட்ட கொடுங்க, சரி பார்த்துட்டு தருவாங்கன்னு சொன்னார். அந்த அம்மணி,நீங்க எங்க போறீங்க, லெட்டர் கொடுங்க, பிசினஸ் கார்டு கொடுங்க அப்படின்னு கேட்டுட்டு, கொஞ்சம் நேரம் காத்து இருக்கச் சொல்லுச்சு. அதானே பார்த்தேன், நம்ம மூஞ்சி தான் லோக்கல் தமிழன் நு எழுதி ஒட்டின மாதிரி இருக்குமே...ஒண்ணுமே கேக்காம விடுறாங்களேன்னு நினைச்சேன்.


கொஞ்சம் நேரம் கழிச்சு அம்மணி வந்துச்சு. எல்லாம் ஓகே. ஆனா, நீங்க எடுத்து இருக்குறது Single Entry Visa. இப்போ ஒரு Entry முடிஞ்சிடுச்சு. அதனால, இதே விசாவை வச்சிட்டு, நீங்க திரும்பி சிட்னிக்கு வர முடியாது. சமோவால போய் டிரான்சிட் விசா எடுத்தால் தான் வர முடியும்னு சொன்னாங்க. நம்ம client கிட்ட இந்த மேட்டரை உடனே சொன்னேன். விசாவை பத்தி எல்லாம் கவலை படாதீங்க...நாங்க பாத்துக்குறோம்னு சொன்னாங்க. சரின்னு கஸ்டம்ஸ் அது இதுன்னு முடிச்சுட்டு வெளியில வந்தோம். வரவேற்க அலுவலகத்துல இருந்து வந்து இருந்தாங்க. இங்கேயே இருக்கீங்களா? இல்லை சாப்பிட போலாமா? இன்னும் 5 மணி நேரம் இருக்கு உங்க விமானத்துக்குன்னு சொன்னார். ஐயா, முதல்ல நாங்க குளிச்சு ரிப்ரேஷ் ஆகணும், அதுக்கு ஏதாச்சும் ஒரு வழி பண்ணுங்கன்னு சொன்னேன். ஆமாங்க, இரண்டு நாள் பயணத்துல, ஒரு சில விஷயங்கள நிம்மதியா கூட பண்ண முடியல : ). அதான். எங்கள் நிலைமையை புரிந்து கொண்ட அந்த நல்ல மனிதர், அவருடைய வீட்டிற்கே அழைத்துச் சென்றார்.

கும்முன்னு ஒரு குளியல் போட்டோம். மீதி இருக்குற நேரத்துல ஷார்ட் டிரைவ் கூட்டிட்டு போறேன்னு ஹார்பர் பிரிட்ஜ்,அது இதுன்னு வேகமாக சுற்றிக் காட்டினார். பல ஊர் போய் இருந்தாலும்,வழக்கம் போல பட்டிக் காட்டான் முட்டாய் கடையை வேடிக்கை பாத்த மாதிரி பாத்துட்டே வந்தேன். அவ்வளவு அருமையான ஊர். கட்டிடங்கள் எல்லாம் எழிலோடும்,பழமையின் சின்னமாகவும் அழகாக இருந்தது. "சிட்னி நகரம் என்பது வந்து நம்ம கை விரல்கள் மாதிரியான தோற்றம். விரல்கள் தான் இடங்கள், அதனுடைய இடைவெளிகள் முழுவதும் கடல்" என நறுக்கென்று விவரித்தார் அந்த ஆஸ்திரேலிய நண்பர்.

இது, நான் தான், ஒரு சுய விளம்பரத்துக்காக எடுத்தது!

எல்லாம் முடிந்து, சமோவா, விமானத்துக்கு செக் இன் செய்ய ஏர்போர்ட் வந்தோம். ராசா, நீங்க சமோவ போறதுக்கு முன்னாடி, டிரான்சிட் விசாவை காண்பித்தால் தான் போர்டிங்க் பாஸ் தருவோம் அப்படின்னு சொல்லுச்சு அந்த விமான அலுவலக பெண்மனி.

சென்னை -> ஹாங்காங்க் -> சிட்னி->சமோவா (இதுலயே ஒரு Entry/Exit முடிஞ்சிடுச்சு..விசா காலி)
சமோவா -> சிட்னி ->ஹாங்காங்க்->சென்னை (விசா முடிஞ்சுப்போச்சே...எப்படிய்யா நீ சமோவவில் இருந்து சிட்னிக்கு திரும்பி வருவே? இது தான் அவங்க கேட்ட கேள்வி)

அங்கே போய் விசா எடுத்துக்குறோம், அது இது...நாங்க எல்லாம் லார்ட் லபக்தாஸ், அப்படி இப்படின்னு கதை விட்டும் ஒன்னும் வொர்க் அவுட் ஆகல. ஓகே வேற வழியே இல்லைன்னு, சிட்னியிலேய ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு கொடுத்துட்டாங்க.

ஐயோ வடை போச்சேன்னு ஒரு புறம் கவலையா இருந்தாலும். கம்பெனி செலவுல சிட்னில நல்லா சுத்திப் பாக்க வாய்ப்பு கிடைச்சுதேன்னு ஒரு சந்தோஷம் தான் ! Multiple Entry Visa நாளைக்கு வந்துடுமாம். ஞாயிறன்று சமோவா கிளம்புற மாதிரி ப்ளான்.

இதுக்கு தான் வடிவேல் சொல்ற மாதிரி, "எந்த ஒரு விஷயத்தையும், ப்ளான் பண்ணாம செய்யக் கூடாது, ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான்.... அஜுக்,பஜக்,புஜுக்....அஜுக்,பஜக்,புஜுக்..."

நெக்ஸ்டு மீட் பண்றேன், சமோவாவில்!

நம்முடைய முதல் பயணக் கட்டுரை, ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லிடுங்க, இதை தொடராம, இனிமே நமக்கு வொர்க் அவுட் ஆகுற மாதிரியே பதிவையே போடுறேன்..!



Monday, July 13, 2009

சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டுமா?


சாதாரணமாவே நம்ம திருமணம், மற்றும் ஷாப்பிங்க் போறதுக்கே, இந்த டிரஸ் மேட்சிங்கா இருக்கா, இதுக்கு ஷூ போடலாமா, செருப்பு போட்டுக்கலாமா ? இப்படி எல்லாம் யோசிப்போம். அதுமட்டுமல்ல, நம்ம நண்பர்கள் கிட்ட பேசும் போது கூட, ஓரளவுக்கு யோசிச்சு, நம்ம சரியா தான் பேசுறோமா? சரியா தான் நடந்துக்குறோமான்னு ரொம்ப கவனமா நடந்துப்போம்.

இதுக்கே இப்படின்னா, பல லட்சம் பேர் நம்மல கவனிச்சு பாக்குறாங்கன்னா, அதற்கு எவ்வளவு முன்னேற்பாடு செய்யனும். இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லாம, நானும் VJ தான்னு வந்து நம்மல பண்ற கொடுமை இருக்கே...சாமி. ஆசையா எதாச்சும் ஒரு பாட்டு கேக்கலாம்னு, மியூசிக் சேனலை வச்சா போதும், லப லபன்னு, என்ன பேசுறோம்னே தெரியாம கத்திட்டு இருப்பாங்க. பொண்ணா இருந்தாலும் சரி, பையனா இருந்தாலும் சரி. இதுல வேற பல நிகழ்ச்சிகளில் இரண்டு VJ. உங்களையும் மதிச்சு ஒருத்தர் போன் பண்றார்னா, அவரிடம் ஒழுங்காக பேசாமல், இவர்களுக்குள்ளேயே கடலை வறுத்துக் கொண்டிருப்பது, இவங்க ஏதோ லார்ட் லபக்தாஸ் மாதிரியும், போன் பண்றவங்க ஏதோ முட்டாள்கள் மாதிரியும் நினைச்சு பேசுற மாதிரியே இருக்கும் இவர்களுடைய தோரணை.


அதுமட்டுமல்ல, போன் செய்ற பெரியவங்க, ரொம்ப ஆசையா, தன் பையன் கிட்ட, பொண்ணு கிட்ட பேசுற மாதிரி அன்பா பேசுவாங்க. அப்படி பேசுறவங்கள இவங்களுக்குள்ளேயே நக்கல் பண்றது,கிண்டல் பண்றது. தன்னுடைய குரல் டிவில கேக்காதாங்கற ஆசையில போன் செய்றவங்களை என்னமா கொடுமை பண்றாங்க இவங்க.


சரி நம்ம மேட்டர்க்கு வருவோம். எத்தனையோ மிகச் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு மத்தியில், இப்படியும் நாலு பேர் இருக்கத் தான் செய்றாங்க. இந்த மாதிரியான ஒரு ஒப்புக்குச் சப்பானி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆக வேண்டுமா ? நீங்களே உங்களை சோதித்துக் கொள்ள எளிய வழிகள் இங்கே!


1.நிகழ்ச்சியின் போது என்ன டிரஸ் போடுவீங்கன்னு தோணுதோ, அந்த டிரஸ்சை போட்டுட்டு, ரோட்டில் போய் நில்லுங்கள். உங்களை குறைந்த பட்சம் 5 நாய்களாவது துரத்தினால், டெஸ்ட் 1 ல நீங்க பாஸ்.


2.நிகழ்ச்சியில் பேசுவதாக நினைத்துக் கொண்டு, உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம், preferably பாட்டியிடம் போய் பேசுங்கள். "ஐயோ, புள்ளைக்கு காத்து கருப்பு ஏதாச்சும் புடிச்சுருச்சா" அப்படின்னு பாட்டி ரியேக்ஷன் கொடுத்தாங்கன்னா நீங்க டெஸ்ட் 2 லயும் பாஸ்.


3.காலையில் இட்லி சாப்பிட்டேன் என்கிற விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு, உங்கள் பெண் நண்பியிடம் 1 மணி நேரம் பேசுபவரா நீங்கள் ? ஆமான்னு தலையை ஆட்டுனீங்கன்னா, ஐயா, மூன்றாவது டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்க.


4. கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்? அல்லது Wrong Number க்கு கால் செய்து அரை மணி நேரம் பேசக் கூடிய திறமை கொண்டவரா நீங்கள்? இதுக்கும் ஓகே சொன்னீங்கன்னா....கிட்ட தட்ட முக்கா கிணறு தாண்டிட்டீங்க நீங்க..


5.நீங்கள் படித்த கல்லூரியிலோ, பள்ளியிலோ, ஆசிரியரிட்ம், உங்களைப் பற்றி கேட்கச் சொல்லுங்கள். "எத்தனையோ பசங்கல பாத்து இருக்கேன். சில பேர் ரொம்ப பழம் மாதிரி இருப்பான், சில பேர் ரொம்ப அரட்டையா இருப்பான். ஆனால் இவன் ஒரு மாதிரி, எப்பவும் மர கழண்ட மாதிரியே சுத்திட்டு இருப்பான்".

இப்படி ஒரு பதில் வந்துச்சுன்னா.....அடேங்கப்பா....நெருங்கிட்டீங்க....ஐந்தாவது டெஸ்டிலும் நீங்க பாஸ்.


6. கடைசியா ஒரு கஷ்டமான கேள்வி. பால் குடிக்கிற குழந்தை என்ன குடிக்குது? இந்த கேள்விக்கு எவ்வளவு யோசிச்சும் உங்களால பதில் சொல்ல முடியலையா? சூப்பர். இந்த டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்க!


அட, எல்லா டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்களா?


Congratulations! நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது. நிச்சயமாக சன் மியூசிக் அல்லது இசையருவியில் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது ! அதே வேகத்தோடு, இதோ இதையும் கொஞ்சம் சொல்லி பழகிக்கோங்க.


"இதுவரைக்கும் நாடோடிகள் படத்துல இருந்து ..பாட்டு பாத்து எஞ்சாய் பண்ணோம். இப்போ அடுத்து நம்ம கிட்ட பேச போற நெக்ஸ்ட் காலர் யார்னு பாக்குறதுக்கு முன்னாடி ஒரு short commercial break.!


டிஸ்க்: இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, பிறரைப் புண்படுத்த அல்ல


Monday, July 6, 2009

மற்றவர்களை புண்படுத்தவது ஒரு கொள்கையா?


தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கருத்து வேறுபாடோ, வெறுப்போ இல்லாத போதும், நமக்கு பிடிச்ச நபர்களையோ,விஷயங்களையோ,நம்பிக்கைகளையோ, மற்றொருவர் கேவலப்படுத்துறார்னு தோன்றும் போது, அதை ஜீரணித்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான். அப்படிப் பட்ட பதிவுகளுக்கு எதிராக நான் , சின்ன சின்ன பின்னூட்டங்கள் இடுவது உண்டு. கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு. இப்படி பிரபல திராவிட இயக்க பதிவரான தமிழ் ஓவியாவிற்கும், நமக்கும் சின்ன சின்ன கருத்து Fight வருவதுண்டு. "மகாவிஷ்ணு இராம அவதாரம் எடுத்தது எதற்கு? -7" என்ற தலைப்பில் நடந்த கருத்துப் பரிமாற்றம்..இங்கே..

தமிழ் ஒவியா :மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டிகாவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

கபிலன்: பூமியின் நிலப்பரப்புகளில் காலா காலமாக Geographical மாற்றம் எப்படி ஏற்பட்டு வந்தது என்பதை Manorama புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு காலத்தில் நிலப்பரப்புகள் பெரும்பாலும் ஒன்றாக இருந்தன. காலப்போக்கில் பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள் காரணமாக நிலப்பரப்புகள் நகர்ந்து(Continental Plates) அதன் பிறகே ஒவ்வொரு கண்டமாக உருவெடுத்தது. அது மட்டுமல்ல, இந்த அவதாரங்கள் எடுத்த காலகட்டத்தில், அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா என்ற ஒன்று இருந்ததா? என்பதே கேள்விக்குறி தான்.

தமிழ் ஓவியா: இப்போது கடவுள்கள் ஏன் அவதாரங்கள் எடுப்பதில்லை.


இந்த கேள்விக்கு, பின்னூட்டத்தில் பதில் சொல்வதை விட, பதிவிலேயே சொல்லி விடலாம். ஏன்னா பதில் கொஞ்சம் பெருசு. ஒரு வேளை, நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனா? பலர் நினைக்கிறாங்க, ஆனா கண்டுக்காம விட்டுடுறாங்களா? என்ன மேட்டர்னு, பலரோட கருத்து தெரிய வரும்.

கபிலன்:

நண்பரே, நிரூபிக்க கூடிய விஷயங்களைக் கொண்டவையை, அறிவியல்(Science) என்போம். உதாரணமாக, Nuclear Science,Computer Science இப்படி. ஆனால் சமயங்களை நம்பிக்கைகள்( Religious Belief) என்று சொல்கிறோம் அதாவது hindu belief, Islam and christian faith என்று சொல்லுவோம். நிரூபிக்கப் படாத விஷயங்கள், மனிதனின் அறிவுக் கண்களுக்கு எட்டாத விஷயங்கள் அனைத்தும் பொய்யாகாது !

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ! ஒவ்வொரு மாதிரியான வழிபாடுகள் ! நம்ம இங்க இட்லி சாப்பிடுறோம், அமெரிக்காவுல பர்கர், பீட்சா சாப்பிடுறாங்க, கொரியாவில் மாமிசத்தை அரை வேக்காட்டில் சாப்பிடுவாங்க...ஏன் நாய்களைக் கூட உணவாக உண்ணும் இடங்கள் உண்டு. வெவ்வேறு உணவாக இருந்தாலும், கடைசியில், அனைத்தும் நம் பசியைத் தீர்க்கத் தான் பயன்படுகிறது. அதே போல தான் சமயங்களும். வெவ்வேறு சமங்களின் வழிபாடுகள், முறைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், அனைவரும் அன்பு செலுத்தி, நல்வழியில் நடந்து, இன்புற வேண்டும் என்பதைத் தான் எல்லா சமயங்களும் வற்புறுத்துகின்றன.

கடவுள் இருக்கிறார். இவ்வாறாக இருக்கிறார். அனைவரையும் நல்வழிப் படுத்துகிறார் என்பது நம்பிக்கை ! நம்முடைய நம்பிக்கைகள் அடுத்தவரை பாதிக்காதவரை, அடுத்தவரை புன்படுத்தாதவரை, நம் நம்பிக்கைளின்படி நடப்பதில் என்ன தவறு இருக்கிறது ?

கடவுளை ஒழித்தால் சாதி ஒழியுமா? ஏற்றத் தாழ்வுகள் நீங்குமா?
மனதில் தோன்றும் பதில் "வாய்ப்பே கிடையாது"

சாதிகள் களையப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. பெரியார் இறந்து, வருடங்கள் பல ஓடியும், சாதி ஒழியவில்லையே ஏன்?

காரணம் நடைமுறைச் சிக்கல்கள். பேச்சளவில் சாதி ஒழிய வேண்டும் என்று கூச்சலிடுவோம். எல்லா விண்ணப்பங்களிலும் சாதி என்ற இடத்தில் நம் சாதியை போட்டுக்கொள்வோம். பிறகு எப்படி சாதி ஒழியும் ? நம்மில் பலருக்கு, முழுமையான சாதிப் பெயர் இப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது தான் தெரியும். சாதிச் சான்றிதழ் வாங்க மணியக்காரிடமும்,தாசில்தாரிடமும் நடையோ நடை நடந்து சாதிச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு தானே இருக்கிறோம்? பேச்சளவில் சாதி இந்தளவு ஒழிந்திருப்பதற்கு பெரியார் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், பேச்சளவில் இருந்த சாதிக்கு, எழுத்து வடிவம் கொடுத்து ஏட்டில் ஏற்றிவிட்டதால், அதனை ஒழிக்க முடியாமல் தவிக்கிறோம்.

தெரியாம தான் கேக்குறேன்...கடவுளை நீங்கள் நம்புவதில்லை, அப்புறம் கடவுள் நல்லவரா இருந்தா, உங்களுக்கு என்ன? அல்லது கெட்டவராக இருந்தால் உங்களுக்கு என்ன? நாங்க கோவிலுக்கு போறதுல, சர்ச்சுக்கு போறதுல, மசூதிக்கு போறதுல உங்களுக்கு என்ன வருத்தம் ?

தங்கள் இயக்கத்தின் கருத்துக்களும், கொள்கைகளும், பல சாதி மக்களிடையே, பல சமய மக்களிடையே வேற்றுமைகளை உருவாக்குகிறது, பகையை வளர்க்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

யாரையாவது எதிர்த்தால் தான் இயக்கம் வலிவடையும் என்பது உண்மை தான். அதற்காக நாட்டின் ஒற்றுமையையும், மதச் சார்பின்மையையும் எதிர்க்க வேண்டாம் !

"நாத்திகனுக்கு இந்து அறநிலையத்துறை"
அடடா...என்னே நம் நிலைமை..!

திராவிட கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும், கடவுள் மட்டும் வேண்டாம், ஆனால் கடவுளின் உண்டியல் மட்டும் வேண்டும்.


என்னே ஒரு கொள்கை!

நான் பிடித்த முயலுக்கு மூணு கால்னு எத்தனை நாள் தான் சொல்லிக் கொண்டே இருக்கப் போகின்றீர்கள்.
மாற்றம் என்பது மானிடத் தத்துவம் !

உங்களை கடவுளை வழிபட அழைக்கவில்லை. கடவுளை நம்புவதோ, நம்பாமலிருப்பதோ அவரவர் தனிப்பட்ட விஷயம்.

அப்படி கடவுள் நம்பிக்கை உள்ள, பல கோடி மக்களின் நம்பிக்கையையும், அவர்களின் மனங்களையும் புன்படுத்தாமலாவது இருங்கள் என்று தான் கேட்கிறோம் !

தமிழ் ஓவியா, இப்படி தான் சொல்லுவார்னு நினைக்கிறேன்..."எங்கள் இயக்கத்தினுடைய, என்னுடைய கருத்தை சொல்வதற்கு எனக்கு முழு உரிமை உண்டு. யாருக்கும் பயப்படத் தேவை இல்லை. நீங்கள் அறியாமையில் பேசுகிறீர்கள். விடயம் தெரியாமல் பேசுகிறீர்கள். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். "

ஆஹா கபிலா....ஜூட்....

கருத்து வேறுபாடுகள் இயல்பு. அதற்கான பதிவு தான் இது. இதில் நண்பர் தமிழ் ஓவியாவின் மீது தனிப்பட்ட வெறுப்புகள் எதுவும் கிடையாது. அவரைப் புன்படுத்துவது இந்தப் பதிவின் நோக்கமல்ல அதற்காக எழுதியவையும் அல்ல.

கடைசியா....

சமுதாயம்ங்கறது ஒரு பாக்கெட் பால் மாதிரிங்க...அதுல நம்மைப் பிரித்து ஆள்வதற்கு ஒரு சில கூட்டங்கள் இருக்கு...அதை மட்டும் சிசர்ஸ் எடுத்து லைட்டா வெட்டி விட்டோம்னா...அன்பு என்கின்ற பால் வெள்ளமாக வழிந்து, சாதி மதச் சண்டைகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன், அமைதியுடன், சந்தோஷமாக வாழலாம்.


(டேய் மாதவா..என்ன என்னமோ பேசுறடா...எப்படிடா இதெல்லாம்...என்னமோ போடா....)

தமிழ் ஓவியாவின் எழுத்துக்கள் இங்கே!
http://thamizhoviya.blogspot.com/2009/07/7.html

அடிவாங்குறதுக்கு முன்னாடி.....குதிச்சுடுறா கைப்புள்ள ..................



Friday, July 3, 2009

நிதி அமைச்சரே, பட்ஜெட்ல இதையும் கவனிச்சுக்கோங்க..!

எந்த சேனல் எடுத்தாலும், பெரிய பெரிய ஆளுங்கள கூப்பிட்டுட்டு வந்து, இந்த பட்ஜெட் எப்படி இருக்கணும், அது இதுன்னு கேள்வி கேக்குறாங்க. நம்ம மனசுல இருக்குறதையும் எங்கேயாச்சும் சொல்லனுமே...அதாங்க இங்க சொல்றேன்...கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் சீரியஸ்...

மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் அவர்களுக்கு,


1. மூன்று வருஷம் ஒழுங்கா வரி செலுத்துறவங்களுக்கு, ஒரு வருஷ வரி விடுமுறை கொடுங்க : ). (பண முதலைகளான, முதலாளிகளுக்கு மட்டும் வரி விடுமுறை விடுறீங்களே, சாதாரண தொழிலாளிங்களுக்கு கொடுங்க)


2.10% மேல Lay-Off பண்ண நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை ரத்து செய்து, புதிய வரியை அமல்படுத்துங்கள் (கொள்ளை லாபம் பார்த்தால் நீங்க அனுபவிப்பீங்க, நஷ்டம்னா நாங்க அனுபவிக்கனுமா? இப்படி பண்ணா தான் எங்க கோவம் தீரும்).


3.ரிசஷன் காரணமாக, வேலை இழந்தவர்களுக்கு, அவர்கள் வாங்கின கடனை எல்லாம், மறு வேலை கிடைக்கிற வரைக்கும், நிறுத்தி வைக்கனும். (இல்லை அரசே அந்த கடனை கட்டினாலும் ஓகே தான் : )).


4.எப்படியெல்லாம் சாதாரம பொது மக்களிடம் இருந்து வரி என்ற பெயரில் பணம் பிடுங்களாம் என்று எண்ணாமல், கருப்பு பணம் வைத்திருக்கும் கோட் சூட்டு போட்ட கொள்ளைக்காரன், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்ட ரவுடி+கொள்ளைக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்யும் வழிகளை தடை செய்யுங்கள்.


5. வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க.



செக்ஷன் 80 C, 80 D ல 1 லட்சம் சேமிக்கணும்னு சொல்லி இருக்கு. இதை எல்லாம் சேமிப்பின்னு சேத்துகிட்டா நல்லா இருக்கும்.


1. பொட்டி கடையில நாங்க வச்சி இருக்குற அக்கவுண்டையும் இந்த செக்ஷனுக்கு கீழ எடுத்துட்டு வரணும்.


2. ஹெல்மட் போடாம, இன்சூரன்ஸ் ரினீவ் பண்ணாம, குடிபோதையில் வண்டி ஓட்டி,சிக்னல் மதிக்காம, நாங்க டிராபிக் போலீஸ்க்கு கட்டின Fine எல்லாம் இந்த செக்ஷன் கீழ எடுத்துட்டு வரணும்.


3.எந்த கடையில எது வாங்கினாலும், கூடவே வரின்னு ஒரு சதவிகிதத்தை பில்லில் சேர்த்து, அதை எங்கள் தலையிலேயே கட்டி விடுகிறீர்கள். ஆகவே, நாங்கள் அப்பொருட்களுக்கு, அந்த பணத்திற்கு வரி செலுத்திவிட்டோம். ஆகையால், இவ்வாறாக செலவு செய்த பணத்திற்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும்.


4.எங்க போனாலும் லஞ்சம் கொடுத்தா தான் வேலை ஆகுற நம்ம இந்தியாவுல, இப்படி நாங்க கொடுக்குற லஞ்சத்தையும் இந்த செக்ஷன் கீழ எடுத்துட்டு வந்து, வரி விலக்கு கொடுக்கணும்.



வரி ரீபண்ட்



1.அடிப்படி இயற்கை வளமான தண்ணீரை கூட, நாள் ஒன்றுக்கு 30 ரூபாய், கொடுத்து தண்ணி கேன் வாங்கி குடிக்கிறோம். மாதத்திற்கு 1000 ரூ, வருடத்திற்கு 12000 ரூபாய். இந்த தொகையை ரீபண்ட் செய்ய வேண்டும்.


2. ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் ஆகுற அத்தியாவசிய செலவுகளான, மருத்துவ செலவு, சுபச்செலவு இவைகளுக்கு எல்லாம் எளிய முறை வகுத்து ரீபண்ட் செய்ய வேண்டும்.


கடைசியா ஒரே ஒரு கோரிக்கை, எந்த ஊர்ல எந்த வங்கில இருக்க கடனை ரத்து செய்ய போறீங்கன்னு எங்களுக்கும் சொன்னீங்கன்னா, நாங்களும் இப்பவே கடன் வாங்கிக்குவோம். உங்க குடும்ப ஆளுங்களுக்கும், கட்சிக்காரங்களும் மட்டும் சொல்லாம எங்களுக்கும் சொல்லிடுங்க, எந்த கடனை ரத்து செய்யப் போறீங்க அமைச்சரே!

நன்றி,

இப்படிக்கு,
ஏமாந்த,ஏமாறப் போகும் பொதுஜனம்.

Wednesday, July 1, 2009

மனசு = அறிவு இல்லாத மூளை !

பொதுவாகவே, நம்ம மூளை ஒன்று சொல்லும், அதற்கு எதிர்மாறாக மனசு ஒன்றைச் சொல்லும். இதையே சில சமயங்களில் நாம் மனசாட்சி என்று சொல்கிறோம்.

நம்ம வழக்குமுறைகளில் கூட மனசுல இருக்குறத அப்படியே சொல்லுங்க என்று தான் சொல்லுவோம். மூளையில இருக்குறத, நல்லா யோசிச்சு சொல்லுங்கன்னு சொல்லுவோம்.


இந்த மாதிரி வேறுபடுத்தி சொல்கிற வழக்கம் நம்ம ஊரில் மட்டுமல்ல..உலகெங்கும் இருக்கற விஷயம் தான். உதாரணமா, காதலுக்கு, இதயத்தை தான், சின்னமாக உலகமே அங்கீகரித்து இருக்கிறது. காதல் வயப்படுபவர்கள் "I have fallen in love" நு தான் சொல்லுவாங்க, "I have decided to love" நு சொல்ல மாட்டாங்க. அறிவைத்(மூளையை) தோற்கடித்து, மனம் வெற்றி பெறுவது தான் காதல். அதே மாதிரி, கல்யாணம்னு வரும்போது "I have decided to marry her " நு சொல்லுவாங்க. இங்க நம்ம ஆளுங்க நிறைய யோசிப்பாங்க. பல ஃபார்முலாக்கள் போட்டு வொர்க் ஒவுட் ஆகுதான்னு பாப்பாங்க. இங்க அறிவு(மூளை) வெற்றி அடைகிறது, மனம் அதனை ஆதரிக்கிறது.

அது என்ன மனசு? எங்கே இருக்கிறது மனசு? நம்மைப் பொறுத்த வரையில், ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு சொல்லணும்னா, நெஞ்சில் கை வைத்து சொல்லுவோம். பெரியவங்க, யாரையாவது வாழ்த்தும் போது கூட மனசார சொல்றேன் மா, நீ ரொம்ப நல்லா இருக்கணும்னு, நெஞ்சில் கை வச்சு சொல்லுவாங்க. மலேசியா போன்ற நாடுகளில் கூட
நாம் கை கொடுக்கும் போது, அவங்க நெஞ்சில் கை வச்சுட்டு, அதுக்கு அப்புறம் தான் கை குலுக்குவாங்க. வெறும் வாய்சொல்லில் மட்டுமல்லாமல், உங்களை மன்சார வரவேற்கிறேன் என்று சொல்லுவதாக அமைகிறது அதன் அர்த்தம்.

இதை எல்லாம் வச்சு பார்க்கும் போது, மனசு என்பதை இதயமாக பாவிக்கிறோம். அறிவு என்பதை மூளையாக பாவிக்கிறோம்.
அறிவியலின் படி பார்த்தால், மனசு என்கிற உணர்வு மூளையில் இருந்து தான் தோன்றுவதாக படிக்கிறோம். இருந்தாலும், நம்ம எல்லோருக்கும் இதை தனி தனியா பாக்குறதுல தான் விருப்பம்.

முதலில் தோன்றிய ஆதாம் ஏவாளுக்கு விதித்த கட்டளை, அந்த பழத்தை( Fruit of Knowledge) மட்டும் உண்ணாதீர்கள். பெரும் துன்பத்திற்கு ஆளாவீர்கள் என்று எச்சரித்ததாக கூறுகிறது பைபிள். அதாவது, மனம் மட்டும் இருந்தால், நல்ல வாழ்க்கையை வாழ முடியும், அறிவை தேடிக் கொண்டால் கஷ்டம் தான் வரும் என்று கூறுவது போல அமைந்து இருக்கிறது.

அப்படி, மூளை என்ன சொல்லும், மனசு என்ன சொல்லும் என்பதற்கான சின்ன உதாரணங்கள்.

காதல்
மூளை: டேய் அந்த பொண்ணு வேணாம்டா...ரொம்ப வசதியான பொண்ணு....வேற சமயத்து பொண்ணு வேற...நம்ம குடும்பத்துக்கு சரி வராதுடா...விட்டுறு டா......
மனசு: இல்லைடா எனக்கு புடிச்சு இருக்கு...எனக்குன்னே பொறந்தவ மாதிரி இருக்கா அவ....யாரு என்ன சொன்னாலும் பரவாயில்ல...நான் அவள தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்...
(அதுக்கு அப்புறம் அவர் படுகிற அவஸ்தை எல்லாம் அனுபவிக்குறவனுக்கு தெரியும்).

கிரிக்கெட் T20 இலங்கை Vs பாகிஸ்தான்
மூளை: கண்ணா, நம்ம எல்லாம் இந்தியர்கள், பாகிஸ்தான் காரன் எவ்ளோ கொடுமை பண்ணி இருக்கான் நம்ம நாட்டுக்கு...அவன் தாண்டா தோத்து போகணும்..
மனசு: பாகிஸ்தான் எதிரி தான்...ஆனா முதல் எதிரி இலங்கை தான்......பாகிஸ்தான் ஜெயிச்சா கூட பரவாயில்லை..இலங்கை ஜெயிக்க கூடாது.....

சரி, எப்பொழுதும் மனம் சொல்படி நடக்கலாமா என்று யோசித்தால், அதுவும் முடியாது. நம்முடைய சமூக அமைப்பை உருவாக்கியது மூளை. அந்த மூளை, நிச்சயம் மனதை வெற்றி பெற விடாது.

என்ன தான்டா சொல்ல வர்றே...சினிமா ஸ்டைல்ல சொல்லணும்னா...

மனசுல இருந்து சொல்றது INNOCENCE
மூளையில இருந்து சொல்றது INTELLIGENCE


நம்ம லெவலுக்கு கொஞ்சம் ஓவரான ஸ்ப்ஜெக்ட் தான்னு தெரியுது, சரி நம்ம எண்ணங்களை மட்டும் பகிர்ந்துக்குவோம்னு சொன்னது மனசு. இதுல கருத்து சொல்ற அளவுக்கோ, முடிவு சொல்ற அளவுக்கோ எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்வது அறிவு.

சரி அதென்ன இப்படி ஒரு பேரு பதிவுக்கு....இதோ வர்றேங்க..

அறிவியலின் படி மனசு என்பது மூளையின் அங்கமே.
அதன்படி,

அறிவு + மனசு = மூளை
மனசு = மூளை - அறிவு
மனசு = அறிவு இல்லாத மூளை

=> மனசு = அறிவு இல்லாத மூளை
(Thus the pythogores theorem has been proved... hehehe)

LinkWithin

Blog Widget by LinkWithin