Thursday, March 25, 2010

ECONOMICS -கொஞ்சம் லோக்கலா !

ரொம்ப நாளாவே ECONOMICS பற்றி ஒரு சின்ன பதிவு போடணும்னு நினைச்சிட்டே இருந்தேன். ரொம்ப விரிவா எழுத உள்ள சரக்கு இல்லாத காரணத்தால், பொதுவாக உபயோகப்படுத்தும் ECONOMICS வார்த்தைகளை கொண்டு ஒரு பதிவு இது. அதுவும் கொஞ்சம் லோக்கலா...


பதிவுலகத்துல பல எகனாமிக்ஸ் ஜாம்பவாங்கள் எல்லாம் இருப்பாங்க. எனக்குத் தெரிஞ்ச எகனாமிக்ஸ் சொல்லி இருக்கேன். தவறான புரிதல் இருக்கலாம், ஏன் தப்பாக் கூட சொல்லி இருக்கலாம். குற்றம் குறை இருந்தால் சொல்லுங்க...தெரிஞ்சிக்குறேன்,திருத்திக்குறேன் !

INFLATION :


படிக்குற சமயத்தில் பாக்கெட் மணி 20 ரூ தான். அதுலயே...5 சிகரெட், 3 டீ, 2 வெண்ணை பிஸ்கட், போக வர ப்ஸ் டிக்கெட் என எல்லா செலவுக்கும் போதும். ஆனால், இப்போ அதே 20 ரூபாய்ல 4 சிகரெட் மட்டும் தான் வாங்க முடியும். அதாவது, போன வருஷம் ஒரு ரூபாய்ல இரண்டு கடலை மிட்டாய் வாங்க முடிஞ்சுது, அதே ஒரு ரூபாய்க்கு இந்த வருஷம் ஒரு கடலை மிட்டாய் தான் வாங்க முடியுது. அப்போ கடலை மிட்டாய் INFLATION 50% அதிகரித்தது என்று பொருள். இது தான் INFLATION. ஆனால், இதை எந்தெந்த பொருட்களை வைத்து கணக்கிடுகிறார்கள்...முக்கியமான பொருட்கள் அனைத்து இரண்டு மூன்று மடங்கு விலை உயர Inflation 10% தான் இருக்குதாமே...! அதுமட்டுமல்ல, கடந்த வருடம் INFLATION 0% க்கும் குறைவாக இருந்த போது கூட எல்லாவற்றின் விலையும் உச்சத்திலேயே இருந்துச்சே...அது எப்படி ?


அதனால, என்னைப் பொருத்த வரை, எகனாமிக்ஸ்லியே கிட்ட தட்ட ஒரு டுபாக்கூர் டேட்டா எதுன்னு பார்த்தோம்னா அது INFLATION தான்.


DIVESTMENT


கல்லூரிக் காலங்களில், கையில, கழுத்துல போட்டு இருக்க நகையை அடகு வச்சு,விற்று சரக்கு அடிப்போமே...அதே மாதிரி அரசிடம் உள்ள கம்பெனியின் பங்குகளை விற்று, தற்காலிகமாக துண்டு விழும் தொகையை சமாளிப்பது தான் DIVESTMENT. இந்த துட்டை வச்சிகிட்டு தான் ரோடு, பிரிட்ஜ் கட்டுவாங்களாம் ! நாம கொடுக்குற வரிப்பணம் என்ன ஆச்சுன்னு கேட்கக் கூடாது. உனக்கு economics தெரியாதுன்னு சொல்லிடுவாங்க பொம்மை சிங்கும், ப்ளேனிங்க் கமிஷனும் : ) !


Gross Domestic Product (GDP)


GDP- இதை வச்சி தான் நாட்டோட பொருளாதாரம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிப்பாங்களாம். ஏழை நாடா...வளரும் நாடா, வளர்ந்த நாடா என கண்டுபிடிப்பாங்களாம்.


நாட்டினுடைய Consumption, முதலீடு, ஏற்றூமதி, இறக்குமதி, அரசின் செலவுகள் இதெல்லாம் வச்சி, கூட்டி கழிச்சு இந்த GDP யை கணக்கு செய்றாங்க. GDP நல்லா இருந்தால், அந்த நாட்டு மக்கள் சூப்பரா இருப்பாங்க, கம்மியா இருந்தா கர்ம கொடூரமா இருப்பாங்கன்னு சொல்றது தான் இந்த GDP. நல்ல GDP உள்ள நம்ம நாட்டுல தான், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களே கிட்ட தட்ட 30 சதவிகிதம் மக்கள் என்றால் பார்த்துக்கோங்களேன். (அதாவது ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 25 ரூபாய்க்கும் கம்மியா வருமானம் இருக்கவங்க தான் வறுமைக் கோட்டிற்கு கீழ இருக்கவங்க.)


இது தான் India Growth Story : )


LIBERALISATION / GLOBALISATION


உங்க ஊர்ல நான் கடை போடுவேன்...எங்க ஊர்ல நீ கடை போட்டுக்கோ....இது தான் LIBERALISATION / GLOBALISATION.ஆனால், நம்ம இந்திய அரசு போடுகிற டீல்ஸ் எல்லாம் ரொம்ப வித்யாசமானது. நாமலே....தேடிப் போய் ஆப்பு மேல உட்கார்ந்துக்குற மாதிரியான டீல்கள் தான் பெரும்பாலும். நியூக்ளியர் டீல் இதற்கு உதாரணம். அதாவது, இந்தியாவிற்கு அணுஆயுத தொழில்நுட்பம், மின்சாரம் போன்றவற்றிற்கு நாங்க உதவுகிறோம். ஆனா, சின்ன கண்டிஷன். அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது. எங்க ஊர் கம்பெனிங்க தான் இந்தியாவில் கடை விரிக்கும். அதில் வரும் லாபம் மொத்தம் எங்களுக்கு. ஆனால், அணுஆயுத விபத்து ஏற்பட்டால், நாங்க நஷ்ட ஈடு தரமாட்டோம். அதை இந்தியாவே கொடுக்கணும்...இப்படி ஒரு அதிபுத்திசாலி டீல். இதே மாதிரி தான் பிடி கத்திரிக்காய் கதையும்.


ஆஹா...இந்தியா ஒரு லிபரலைஸ்டு எகானமி : ) !


SUBSIDY


ஹ்ம்....இதை எப்படி சொல்றது..சரி...
உதாரணமா, அரசு, 2500 ரூபாய்க்கு ஷிவாஸ் ரீகல் விஸ்கியை வாங்கி, நம்ம சந்தோஷத்துக்காக 1500 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அதற்கு அரசு வழங்கும் மானியம்1000 ரூபாய். இது தான் SUBSIDY. பெட்ரோலியப் பொருட்களை சர்வதேச விலைக்கு வாங்கி, நம்ம ஊர் மக்கள் வாங்குற அளவுக்கு விலையைக் குறைத்து, அதன் இழப்பை அரசு மானியமாகத் தருகிறது.


இவ்ளோ கஷ்டப்பட்டு அரசு மானியம் கொடுக்குறது சரி...அப்புறம் எதுக்கு, அதே பொருட்களுக்கு மத்திய அரசு தனியா வரி, மாநில அரசு தனியா வரி விதிக்கணும்...அமெரிக்கா போன்ற உலக நாடுகளை விட இந்தியாவில் தான் பெட்ரோலியப் பொருட்கள் விலை அதிகமா இருக்குன்னு நீங்க கேள்வி கேட்டால்.....அதை அப்படியே நம்ம பெட்ரோலியத் துறை அமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் தான் forward பண்ணனும் : )


RATE HIKE:


கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி எகனாமிக் டைம்ஸ் பேப்பர் படிக்குறதுக்கே பயமா இருக்கும். பல வார்த்தைகள் கேள்விப்படாதவைகளாக,தெரியாதவைகளாக இருக்கும். அதுல ஒண்ணு இந்த வட்டி விகித உயர்வு. ஏன் உயர்த்துறாங்க...ஏன் குறைக்குறாங்கன்னு புரியாமலே இருந்துச்சு...


ஆனால், இப்போ சின்னக் குழந்தைங்க கூட கரெக்டா சொல்றாங்க....GDP குறையப் போகுதா.....வட்டியை குறை...நிறையபேரு கடன் வாங்குவான், பணப்புழக்கம் ஏற்படும், எகனாமி வலுவு பெரும்......Inflation ரொம்ப ஜாஸ்தியா போகுதா வட்டியை ஏற்று..எவனும் கடன் வாங்கமாட்டான், பணப்புழக்கம் குறையும்...Inflation உம் குறையும்....இது இரண்டுத்தையும் கரெக்டா பேலன்ஸ் பண்ற வேலையைத் தான் நிதி அமைச்சகம், ப்ளானிங்க் கமிஷன் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா செய்றாங்களாம் !

ஹ்ம்ம்...அதென்னவோ போங்க.....இந்தியாவின் GDP வளரும் போது மட்டும், எங்கள் அரசின் பொருளாதாரத் திட்டத்தில் தான் இத்தனை சதவிகிதம் வளர்ச்சின்னு மார் தட்டுற சிங்கங்கள், விலை ஏற்றம் ஏன் ? என்று கேட்டால் உலகப் பொருளாதார வீழ்ச்சின்னு சொல்ல எப்படித் தான் மனசு வருதோ...தெரியல..

பொள்ளாச்சியில் விளைகிற தக்காளி விலை ஏற்றத்துக்கும், பஞ்சாப்பில் விளைகிற நெல், பருப்பு போன்ற பொருட்களின் விலை ஏற்றத்துக்கும் கூட உலகப் பொருளாதார வீழ்ச்சி தான் காரணம்னு சாமர்த்தியமா எதையாச்சம் சொல்லி, ஜனங்கள நம்பற வைக்கிற, எகனாமிக்ஸ்ட்களின் திறமை நம்ம கிட்ட இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும் !

Friday, March 19, 2010

Pre-KG க்கே கிழியுதே !

"என்னங்க....நம்ம தீபுவுக்கு 2 1/2 வயசு ஆகுது....Pre-KG சேர்க்கணும்...எதாச்சும் ஸ்கூல் பார்த்தீங்களா ? இல்லையா ? நம்ம வீட்ல இருந்து ஒரு கிமீ தூரத்துக்குள்ள இருக்கணும். குழந்தையை நல்லா பார்த்துக்கணும். எத்தனை தடவை சொல்லிட்டே இருக்குறது...பொறுப்பே இல்லாம இருக்கீங்களே...மத்தவங்க எல்லோரும் அவங்க அவங்க பிள்ளைங்களுக்கு எப்படி எல்லாம் தேடுறாங்க...நீங்க மட்டும் ஏங்க இப்படி இருக்கீங்க...." என்று தங்கமணி மறுபடியும் ஒரு அலர்ட் விட்டாங்க.

சரிம்மா. இன்னைக்கே போய் ஒரு நாலு ப்ளே ஸ்கூல் பார்ப்போம். எது நல்லா இருக்குன்னு நீயே முடிவு பண்ணிக்கோ..அதுல சேர்த்துடலாம்.. என்று சொல்லி பையனை கூட்டிட்டு கிளம்பினோம்.

ஏங்க...வெங்கட்நாராயணா ரோட்டுல நான் ஒரு ப்ளே ஸ்கூல் பார்த்தேங்க....நல்லா இருக்க மாதிரி தெரியுது....அதுக்கே முதல்ல போவோம் என்று தங்கமணி ஆணை பிறப்பிக்க, நேராக அந்தப் ப்ளே ஸ்கூல்க்கு போனோம். மாடியில் ஒரு வாடகை வீடு. அது தான் ப்ளே ஸ்கூல். கொஞ்சம் நேரம் கழிச்சு ஒரு பெண்மணி வந்தாங்க. Admission Enquiryக்காக வந்திருக்கீங்களா...இருங்க மேடம் வருவாங்க என்றார்.

சரி. அவங்க வர்றதுக்குள்ள, லைட்டா ஸ்கூல் உள்ள எட்டிப் பார்த்தேன். ஏறக்குறைய 30 பசங்க இருந்தாங்க. 1 சறுக்காமரம்(Slider),1 சீ சா, வீடு முழுக்க ஸ்டிக்கர், ஒரு ஆயா, ஒரு மேடம். ஓஹோ...இது தான் ப்ளே ஸ்கூலா....அட பெரிய முதலீடே இல்லாம, இப்படி ஒரு அருமையான தொழிலா ? என்று நினைச்சிட்டே இருந்தேன். மேடம் வந்துட்டாங்க.

ஒரு சில விசாரிப்புக்களுக்குப் பிறகு, 1 1/2 வயசுக்கு Day Care, 2 வயசு ஆச்சுன்னா ப்ளே ஸ்கூல், 2 1/2 வயசுக்கு Pre-KG, உங்க பிள்ளையை எதுல சேர்க்க வந்திருக்கீங்க என்றார். 2 1/2 வயசு ஆயிடுச்சு...தீபு வை Pre-KGல சேர்க்கணும். என்றோம். என் மகனிடம், பெயர், அப்பா பெயர்,ஊர் பெயர் என அவர்கள் கேட்ட விஷயங்களுக்கு பதில் சொன்னான்.

உங்க பையன் ABCD சொல்லுவானா ? என்று கேட்டாங்க மேடம். உடனே...அபியும் நானும் படம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு...உங்க பொண்ணுக்கு நீச்சல் தெரியுமா? என்று பிரின்சிபல் கேட்பார். இல்லைங்க மேடம்...இப்போ தான் நடக்கவே ஆரம்பிச்சிருக்கா...என்பார் பிரகாஷ்ராஜ். இல்லைங்க மேடம்...இப்போ தான் ABCD சொல்லி கொடுத்துட்டு இருக்கோம். சரி. இங்கிலீஷ் ரைம்ஸ் ஏதாச்சும் சொல்லு தீபு என்றார் என் மகனிடம். நார்மலா ஒண்ணு ரெண்டு வரி ரைம்ஸ் சொல்றவன், அவங்க கேட்டப்ப, வாயே திறக்கல. சரி தீபு, அதோ அது என்ன என்று கையை நீட்டி கேட்டார். அது என்னடான்னு நான் திரும்பி பார்த்தேன். கண்ணன் வெண்ணை சாப்பிடுற மாதிரி ஒரு படம் இருந்துச்சு. தீபு, கண்ணா ஜேஜி சொல்றா என்றேன். "டேடி, வெளியில ஆட்டோ டுர்ர்ர்ன்னு போகுது...டேடி" என்றான் வெளியில் எட்டிப் பார்த்தபடி. அந்த மேடம் குறுக்கிட்டு, அது கேலண்டர் என்றார். அடங்கொய்யால, கண்ணன் படத்தைத் தான் கேட்டாங்கன்னு நினைச்சா...அதுக்கும் கீழ ஒரு கேலண்டர் தொங்கிட்டு இருக்கு. அது, நமக்கே தெரியல.

மேஜையில் ஒரு flower vase வச்சிருந்தாங்க. தீபு, அந்த Flower என்ன கலர் சொல்லு பார்க்கலாம் என்றார் மேடம். Sun Flower என்று சொல்லிவிட்டு, என்னை திரும்பிப் பார்த்தான். டேய் ராசா...எனக்கு அது என்ன பூன்னு தெரியாதுடா...ஆளை விட்டுறுடா என்ற பாணியில் பார்த்தேன். உடனே மேடம் குறுக்கிட்டு...நோ நோ....அது Daisy என்றார். நல்ல வேலை, நம்மல கேட்கல என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். சரி தீபு, மேடம்க்கு ஒரு திருக்குறள் சொல்லுடா என்றதும், தங்கமணி சொல்லிக் கொடுத்த 3 திருக்குறளை அப்படியே சொன்னான். ஹோ...தமிழ் தான் சொல்லிக் கொடுத்திருக்கீங்களா என்றார் மேடம்.

சரிங்க ஃபீஸ் 22000 ரூ. ரிஜிஸ்ட்ரேஷன் 100 ரூ, இன்னைக்கே பண்ணிக்கோங்க. மூன்று நாட்களுக்குள் மொத்த ஃபீஸ் பே பண்ணிடனும் என்று மெயின் மேட்டருக்கு வந்தார். அடேங்கப்பா....22000 ரூபாயா ? Govt பொறியியல் கல்லூரியில், என்னுடைய 4 வருட படிப்பின் மொத்த கட்டணமே 11500 ரூபாய் தானே. Pre-KGக்கே நம்ம ட்ரவுசர் கிழியுதே, அடுத்து ஸ்கூல் காலேஜ்னா....அடேங்கப்பா...சுமாரா வருமானம் வருகிற பொட்டி தட்டுற வேலையில இருக்க நமக்கே இப்படின்னா....குறைவா வருமானம் இருக்கவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க... என்று நினைத்துக் கொண்டேன்.

தங்கமணி, ஸ்கூல் டைமிங்க்ஸ் பற்றி விசாரிச்சாங்க. இந்த வருஷம் 9 AM -12 AM, ஆனா, இப்போ syllabus அதிகப் படுத்துறாங்க....நிறைய montessori materials கொடுக்குறாங்க...அதனால 9 AM -1:30 AM வரைக்கும் ஸ்கூல் இருக்கும் என்றார். தங்கமணிக்கு ஒரே ஷாக்...ஐயோ...குழந்தையை 4 1/2 மணி நேரம் தனியா விடணுமா...என்று யோசனையில் மூழ்கினார். சரிங்க மேடம், நாளைக்கு வந்து சொல்றோம் என்று கிளம்பினோம். மேடம் குறுக்கிட்டார். எவ்வளவோ சமாளித்துப் பார்த்தாலும், ரிஜிஸ்ட்ரேஷன் இன்னைக்கே பண்ணிக்கோங்க...என்று ஒற்றைக் காலில் நின்றார். மேடம், அவ்ளோ காசு என்னால உடனே புரட்ட முடியாது என சொல்லி எஸ்கேப் ஆனோம்.

அது என்னவோ, தங்கமணிக்கு அந்த ஸ்கூல் பிடிக்கல.அதன் பிறகு, இன்னும் இரண்டு ப்ளே ஸ்கூல் போய் பார்த்தோம். அதே வாடகை வீடு, அதே சருக்காமரம், அதே மாதிரி மேடம், அதே மாதிரி கட்டணம். வீட்டில் இருப்பதற்கும், பள்ளிக்கு அனுப்புவதற்கும் பெரிதாக வேறுபாடு இருக்க மாதிரி தெரியல. ஏன்மா...பேசாம, டைரக்டா அடுத்த வருஷமே LKG சேர்த்துடலாமே... .இல்லைன்னா...2 or 3 months மட்டும் நம்ம பக்கத்து வீட்ல சின்னதா ஒரு ப்ளே ஸ்கூல் இருக்கே...அதுல சேர்த்துடலாமா? சும்மா போய் விளையாடிட்டு வரட்டும்... நம்ம குழந்தைப் பருவ காலங்களில் எல்லாம், நல்லா விளையாடுவோம். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் திருடன் போலீஸ், கண்ணாமூச்சி என நமக்கெல்லாம் நல்லா விளையாடும் வாய்ப்புக்கள் இருந்துச்சு. ஆனா, இப்போ, குழந்தைகளை வெளியில் விளையாட விடுறோமா ? அக்கம் பக்கத்துல யாரு இருக்காங்கன்னே நமக்கு தெரியாது. குழந்தையும் நம்ம மூஞ்சியையே 24 மணி நேரமும் பார்த்துட்டு இருக்கு. டேய்...அதைப் பண்ணக் கூடாது, அந்தத் தண்ணியை குடிக்கக் கூடாது, அதைத் தொடக் கூடாது, அதுல ஜெர்ம்ஸ் இருக்கு...இதுல பேக்டீரியா இருக்கு...இதைத் தொட்டா ஜூரம் வரும். இப்படி, இதையெல்லாம் கேட்டு கேட்டு குழந்தைங்க மனசுக்குள்ள நம்மல பச்சை பச்சையா திட்டுற மாதிரியே எனக்கு ஒரு பீலிங்க் : ) ..இதற்கு ஒரு வ்டிகாலாகத் தான், பிள்ளைகளை ப்ளே ஸ்கூல் அனுப்பணும்குறது என்னுடைய கருத்து. என்னம்மா சொல்ற...என்றேன்.

நீங்க வேற, உங்களுக்கு ஒண்ணுமே தெரிய மட்டேங்குது... LKG சேர்க்கும் போது, Pre-KG அனுப்பினீங்களா இல்லையான்னு கேட்பாங்க......இதெல்லாம் LKG admissionக்கு ரொம்ப முக்கியம். உங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியும். தமிழ்மணத்துல,தமிழிஷ்ல இன்னைக்கு யார் அதிக ஓட்டு வாங்கி இருக்காங்க...யார் இந்த வார நட்சத்திரம்.....எந்த ப்ளாக்ல சண்டை ஓடுது....நீங்க அடிச்ச கமெண்ட்டுக்கு யார் உங்களை திட்டி இருக்காங்க....அதையேப் போய் பாருங்க.... என்றார் ஒரு கொதிப்புடன்.

தேடல் தொடரும் : ) !

LinkWithin

Blog Widget by LinkWithin