Monday, August 31, 2009

ஆலோசனை வழங்க போறீங்களா..ஒரு நிமிஷங்க..!


பொதுவாகவே, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்பது நமக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும். தெரியாத்தனமா ஒருத்தர் வந்து நம்ம கிட்ட ஆலோசனை கேட்டார்னா...அவ்ளோ தான், அவரை ஒரு அரை மணி நேரம் மொக்கை போட்டு அனுப்புவோம். அவருக்கு தகுந்த, சரியான ஆலோசனை கிடைத்ததா இல்லையா என்பது மறுபடியும் அவர் நம்மிடம் ஆலோசனை கேட்டு வருகிறாரா, அல்லது நம்மைப் பார்த்த உடனே ஓடுகிறாரா என்பதை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டும்.

அறிவுரை என்பது சான்றோர், எளியவனிடம் வழங்குவது. ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையில் கொடுப்பது தான் அறிவுரை. இன்றைய கால கட்டத்தில் அறிவுரை(Advice) வழங்குவது என்பது, ஆப்பைத் தேடி நாமே உட்காருவதற்கு சமம். ஆனால், ஆலோசனை வழங்கவோ, கேட்கவோ இவை போன்ற பாகுபாடுகள் இல்லை. அதுமட்டுமல்லாமல், அதனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் மனநிலையில் உள்ளது. ஆகையால்,எதைச் சொல்வதானாலும் அதனை ஒரு ஆலோசனையாக(suggestion) சொல்வதே சிறந்தது..

அப்படி ரொம்ப சின்சியரா, நம்ம கிட்ட வந்து ஒருத்தர் ஆலோசனை கேட்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படி ஆலோசனை வழங்கும் போது நாம் கடைபிடிக்கவேண்டிய அத்தியவாசியமான அணுகுமுறைகளை இங்கு பார்ப்போம். அனைவருக்கும் தெரிந்தது விஷயங்கள் தான் என்றாலும் ஒரு சின்ன ரிமைண்டர்.

1. மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முதல் தகுதியே, நாம் , அவருடைய நிலையில் இருந்து பிரச்சினையை யோசிக்க வேண்டும். வருகிறவரின் மனநிலையை நன்கு உணர்ந்தால் தான், அவருக்கு சரியான முறையில் ஆலோசனைகளை எடுத்துச் சொல்ல முடியும்.
ரொம்ப கஷ்டத்தோட ஒருத்தர் அவருடைய வேதனையை நம்மிடத்தில் சொல்லி வழி கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்,

2.அவர் சொல்லுகின்ற விஷயத்தைப் பற்றி தெரிந்தால் மட்டுமே ஆலோசனை வழங்கலாம். தெரியவில்லை என்றால் இதைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது என்று பளிச்சென்று கூறிவிடுவது நல்லது. "அதெப்படி, என் கிட்ட ஒருத்தர் வந்து கேக்குறார்...தெரிலன்னு சொன்னா நல்லாவா இருக்கும்.." என்று நினைக்கக் கூடாது. தவறான ஆலோசனை சொல்வதை விட, ஆலோசனை சொல்லாமல் இருப்பதே மேல்!

3.நம்ம கிட்ட ஒருத்தர் வந்து கேக்குறார்னா....அவரை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும்.நாம் அதனை கவனித்துக் கொண்டு மட்டும் இருக்க வேண்டும், இடையில் குறுக்கிடக் கூடாது. நம்மில் பலர், அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, முந்திக்கொண்டு சொல்யூஷன் சொல்லிடுவாங்க. என்ன சொல்ல வர்றார்னே தெரியாம, கொடுக்குற ஆலோசனை நிச்சயம் utter flop தான்.
ஆசிரியர் கேள்வியை முடிப்பதற்குள், மாணவர்கள் பதிலளித்தல், பள்ளியில் வேண்டுமானால் நமது திறமையை நிரூபிக்கலாம், ஆனால் இங்க அது ஒத்து வராதுங்க.

4.இன்னொரு முக்கியமான மேட்டர். எவ்வளவோ குழப்பத்துக்கு நடுவில், நம்மையும் ஒரு ஆளாக மதித்து, ஒருவர் ஆலோசனை கேட்கிறார். அப்படி வருகிறவரிடம், இது தான்யா சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து, நம்முடைய பொது அறிவையோ, மொழித் திறமையையோ வெளிப்படுத்தி பந்தா காண்பிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி....நெகடிவ் எஃபெக்ட் தாங்க.

5. தவறான விஷயங்களுக்கு ஆலோசனை அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். உலகத்தில் எந்த ஒரு மனிதனும், தவறு செய்வதற்கு முன்னால் எவரிடமாவது நேர்முகமாக, மறைமுகமாகவோ ஆலோசனை பெற்றவர்கள் தான். அதனால, தவறான விஷயங்களுக்கு, இது தவறு என்று புரிய வைத்து, ஸ்ட்ரிக்ட் நோ சொல்லிட வேண்டும்.

6. ஆலோசனை என்கின்ற பெயரில் நம்முடைய கருத்தை மற்றவரிடம் திணிப்பது ரொம்ப அநாகரிகமான மேட்டர். அதனால, இது தான் பிரச்சினையா, இதுக்கு இத்தனை வழிகள் இருக்கு....இந்த வழியில் போன இது நல்லது இது கெட்டது..என பல வழிகளைச் சொல்லி, அதில் அவருக்கு பொருத்தமானவற்றை அவர் தேர்ந்தெடுக்க வழி வகை செய்ய வேண்டும்.

7. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், நம்மிடம் ஆலோசனை கேட்பவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது தான். ஏதோ பிரச்சினைன்னு நம்ம கிட்ட வந்து, அவர்கள் மனதில் உள்ளவற்றை அப்படியே வெளியில் சொல்லும் போதே, பாதி சரி ஆயிடுவாங்க. மனசுல இருக்குற பாரமும் குறைஞ்சுடும். மேற்கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தி, நம்பிக்கை ஏற்படுத்துறதான், ஆலோசனை வழங்குவதன் முக்கிய நோக்கம்.


ஏதாவது முக்கியமான பாய்ன்ட் விடுபட்டிருந்தால்...மறுமொழிகளில் தங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது : )

Friday, August 28, 2009

தாத்தா...தப்புப் பண்ணிட்டேன் தாத்தா...!

தமிழ்நாட்டுல ஒரு ஆம்பளை கூட சரியான ஆண்மைத் தன்மையோட இல்லங்கறது தான் உண்மை. சின்ன வயசுலே இருந்தே அவன் தப்பான பழக்கத்துக்கு ஆளாயிடுறான். சராசரியா, ஒரு பையன், 14,15 வயசுல தப்பு பண்ண ஆரம்பிக்குறான்(என்ன தப்புன்னு எல்லாம் கேக்கக் கூடாது). அவன் பண்ற தப்புல ஒவ்வொரு முறையும் 40 சொட்டு ரத்தம் வீணா போகுது. இப்படி செஞ்சி செஞ்சி, அவன் கல்யாண வயசு வர்றதுக்குள்ள, நாடி நிரம்பெல்லாம் தளர்ந்து போய், எல்லா சக்தியையும் இழந்துட்டு நிக்குறான். அதுக்கு அப்புறம், தாத்தா தப்பு பண்ணிட்டேன் தாத்தா, அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் தாத்தான்னு என் கிட்ட ஓடி வர்றான்....அவனை எல்லாம் பார்த்தா எனக்கு பளார்னு அறையனும் போல இருக்கும்...இந்த நிலைமையில இருக்குற நீ கல்யாணம் பண்ணிக்கலாமா? வீணா கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய நாசம் பண்ணிடாத...உன்ன எல்லாம் என் பேரப்பசங்களா நினைச்சி தான், திரும்பி திரும்பி இதையே சொல்லிட்டு வர்றேன். உங்க அப்பா அம்மா கிட்ட சொல்ல கூச்சப்பட்டீன்னா....நீ மட்டும் தனியா வா...முதல்ல குணம் ஆக்கிட்டு, அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ...ஆசையா வர்ற பொண்ண ஏமாத்தாத....


ஐயா....இதெல்லாம் நான் சொல்லலிங்க....எந்த தமிழ்ச் சேனல் பக்கம் திருப்பினாலும், நம்ம தாத்தா : ) வந்து நம்மல பாடா படுத்துறார். அவர் பேர் சொல்லணும்னு அவசியமே இல்லை...அந்த அளவுக்கு அவர் பாப்புலரான தாத்தா. அவர் சொல்கிற வைத்தியம் உண்மையோ, பொய்யோ , ஆனா, இந்த மாதிரியான எசக்கு சக்கான மேட்டர்ல அப்பாவி பசங்கள பயமுறுத்தி, பணம் பறிக்கும் வேலை மட்டும் நடந்துகிட்டு தான் இருக்கு.


நிஜமாவே, அவர் பேசுறத எல்லாம் பார்த்தா, நல்லா இருக்குறவனுக்கு கூட ஒரு வித பயம் வந்துடும். ஏன்னா, அவர் சொல்ற அறிகுறிகள் பாத்தீங்கன்னா ரொம்ப பொதுவானவை. ஆங்கில மருத்துவத்தில், இதெல்லாம் நார்மல் தான், அனைவருக்கும் இவ்வாரெல்லாம் இருப்பது இயல்பு தான்னு சொன்னாலும், நம்ம தாத்தா விடுற உடான்சும், அவர் சொல்கிற விதமும், (ரொம்ப விறுவிறுப்பாக இருந்தாலும்), அனைவருக்கும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதிலும், இது போன்ற விஷயங்களில் பெரும்பாலும் நம்பி ஏமாறுகிறவர்கள் நன்கு படித்த நல்ல வேலையில் உள்ள இளைஞர்கள் தான்.

பொதுவாகவே, போர் யுக்தி முறைகளில் Psychological Warfare என்ற ஒரு வகை உண்டு. அதாவது எதிரியின் படைகளின் மன வலிமையையும், உற்சாகத்தையும் அழிப்பது. ஆப்கான் போர் தொடங்கிய போதே, அமெரிக்கா ஹெலிகாப்டரின் மூலமாக துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாம். அதில் "அமெரிக்க ராணுவம் பல முக்கிய இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் மற்ற இடங்களையும் பிடித்துவிடுவோம். பல முக்கிய தாலிபான் தலைவர்கள் அவ்ர்களாகவே எங்களிடம் வந்து சரண் அடைந்து வருகின்றனர். நீங்களும் சரண் அடைந்து விடுங்கள். இல்லையேல் எங்கள் போரின் உச்சத்தைப் பார்க்க நேரிடும்." என்பது போல எழுதி வினியோகித்தனர். இப்படி தான் ஒருத்தனை மனதளவுல பலவீனப் படுத்தி, பணத்தை பறிக்க நம்ம ஊர்ல பெரிய கூட்டமே தயாரா இருக்குங்க.

அதே மாதிரி தான் பல சித்த வைத்தியர்கள் இருக்காங்க. இவர் மட்டுமல்ல, இது மாதிரி யுனானின்னு சொல்லி ஏமாத்துறது, ஏன் லேகியம் கூட விக்குறாங்க டிவி மூலமா.

இதுல என்ன காமெடின்னா, தாத்தாவை அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் சரமாரியாக கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனா, நம்ம தாத்தா திடீர்னு "இதோ பாருப்பா, உனக்கும் தான் சொல்றேன், நீயும் என் பேரன் மாதிரி, நீ சின்ன வயசுல நிறைய தப்பு பண்ணி இருந்தா சொல்லிடு, எந்த பிரச்சினை இருந்தாலும் சரி பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ...வீணா ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணாத " அப்படின்னார். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு எப்படி ரியாக்ட் பண்றதுண்ணே தெரியாம வழிஞ்சது சிரிப்போ சிரிப்பு.

எந்தெந்த விஷயங்களை நாம் வெளிப்படையாக பேச கூச்சப்படுகிறோமோ, அதையே மூலதனமாக வைத்து, இவரைப் போல பல வைத்தியர்கள் தங்கள் கஜானாவை நிரப்பி வருகிறார்கள். பணம் மட்டும் விரயமானால் கூட பரவாயில்லை, மனதளவில் தாக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடியவைகளாக இருக்கிறது இவர்களது தந்திர பேச்சுக்கள்.

இதை எல்லாம் தடுக்கணும்னா, எந்த ஒரு விஷயமா இருந்தாலும், பெற்றோர்களிடத்தில் ஆலோசனை கேட்பது தான் மிகச் சிறந்த வழி. பெற்றோர்களும் பிள்ளைகளிடம் எல்லா விஷயங்களையும் மனம்விட்டு பேசத் தொடங்க வேண்டும். முன்பெல்லாம் உடல் சம்பந்தமான, செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை பொதுவாக வெளிப்படையாக பேசமாட்டார்கள். ஆகையால், அன்றைய பெற்றோர்கள், இவற்றை எடுத்தக் கூறவில்லை. ஆனா, இப்போ, தொழில்நுட்பம் வளர்ச்சியின் காரணமாக சகல விஷயங்களும் மிகவும் இளம்பருவத்திலேயே பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால, யாரோ ஒரு மூன்றாவது மனிதர் மூலமாக நம் பிள்ளைகளுக்கு இவைகளை தெரியப்படுத்துவதை விட, நாமே நல்ல விதத்தில் எடுத்துக் கூறுவது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். பிள்ளைகளும் தமக்கு உள்ள பிரச்சினைகளை கூச்சப்படாமல் வெளிப்படையாக பெற்றோர்களிடம் சொல்ல இது வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது !

டேய், இதைப் பற்றி எல்லாம் எப்படிடா பிள்ளைங்க கிட்ட பேச முடியும்னு நீங்க கேக்குறது புரியுது.....

Tuesday, August 25, 2009

டேடி.... உச்சா....உச்சா வருது !

போன வாரம், நான், என் மனைவி,என் பையன் தீபு(2 வயசு ஆகப் போகுது) மூணு பேரும் தி நகர்க்கு ஷாப்பிங்க் கிளம்பினோம். பல்சர எடுத்தேன். டேடி, Frontla, டேடி, Frontlaனு சொல்லி முன்னாடி வந்து உட்கார்ந்துகுட்டு...டுர்ர்...டுர்ர்...ந்னு acceleratora ஒரு சுழட்டு சுழட்டிட்டு கொடுத்தான்.இங்க பாரு மா, கையில பைசா இல்ல, அதனால ஏ டி எம் போயிட்டு, போகலாம்னு வண்டியை நிறுத்தினேன். நான், பணத்தை எடுத்துட்டு வந்துட்டேன். என் மனைவி, பக்க்துல இருக்க மெடிக்கல் ஷாப்ல, என் பையனுக்கு செர்லாக் வாங்க போய்ட்டா. சரின்னு, வண்டியில உட்கார்ந்தபடி வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

திடீர்னு ஒருத்தர் வந்தார். சின்ன பையன் தாங்க..ஒரு 16 வயசு இருக்கும். நெற்றியில விபூதி குங்குமம், தோளில் ஒரு ஜோல்னா பை மாட்டிட்டு இருந்தார்.

சார், நாங்க முருகன் கோவிலுக்கு நடைபயணம் போயிட்டு இருக்கோம், உங்க கையை காட்டுங்க, ஜோசியம் பார்த்து சொல்றேன்னு சொன்னார்.

இல்லை, ராஜா, நான் ஏற்கனவே ஜோசியம் பார்த்து இருக்கேன். வேணாம்பான்னு சொன்னேன். என்னாங்க சார், இத்தனை பேரு இருக்காங்க...அவங்க எல்லாரையும் விட்டுட்டு, உங்க கிட்ட மட்டும் வந்து கேக்குறேன்னா எப்படி...ஆண்டவன் என் மூலமா ஏதோ சொல்லி விட்டுறுக்காருங்க சார்...கொஞ்சம் கேட்டுப் பாருங்க..

அடடா...கடைக்குப் போன மனைவி இன்னும் வரலியே...எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா..முடியாது போல இருக்கேன்னு நினைச்சேன்.
இல்லை ராஜா, வேணாம்பான்னு சொன்னேன். சரிங்க சார், இதை மட்டும் ட்ரை பண்ணுங்க சார்...மனசுல ஏதாச்சும் தலையில் சூடுகிற போடுகிற ஒரு பூவை நினைச்சிக்கோங்க.

சரிப்பா நினைச்சுக்கிட்டேன். (இங்க தான் கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டேன்..)

நீங்க நினைச்ச, பூவை நான் சரியா சொல்லிட்டேன்னா....உங்களுக்கு நான் ஜோசியம் பாக்குறேன்னு சொன்னார் அந்த ஜோல்னா ஜோசியர்.
விட மாட்டாங்க போல இருக்கே....சரிப்பா...சொல்லு...

மல்லிப் பூ....சரியாங்க சார்..

அடங்கொக்கா மக்கா.....கரெக்டா சொல்லிட்டானே.....முருகா...இனிமே இந்தக் கைப்புள்ளையை நீ தான்யா காப்பாத்தணும்......ஆமாம் பா சரியா சொல்லிட்டே..

சரிங்க சார்...வண்டியை விட்டுட்டு கொஞ்சம் இப்படி வாங்க சார்னு கூப்பிட்டு, வழக்கமா சொல்ற கதைகள் ஓரிரு வரிகள் சொல்லிட்டு,உங்க பிடிச்ச தெய்வம் யாருங்க சார் நு கேட்டார்.

சிவபெருமான் பிடிக்கும் பா ந்னு சொன்னேன்.

பாக்கெட்ல இருந்து சிவன்-பார்வதி படத்தை எடுத்து அவர் கையில வச்சார். ஒரு நூறு ரூபாயை இந்தப் படத்துல வையுங்க...திருப்பி கொடுத்துடுறேன்னு சொன்னார். நூறு ரூபாய் இல்லை...ஐநூறு ரூபாயாத் தான் இருக்குன்னு வச்சேன். அந்த ரூபாய் நோட்டை எடுத்து ஏதோ எழுதிட்டு, கையில வச்சு இருந்த சாமி படத்துக்கு கீழ வச்சுட்டார்...

எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு...என்னப்பா ந்னு கேட்டேன்...
இருங்க சார்...வீட்ல வளர்க்கிற ,கோயிலில் இருக்கிற பறவை எதாவது ஒண்ணை நினைச்சுக்கோங்கன்னு சொன்னார். நினைச்சிக்கிட்டேன். என்ன நினைச்சீங்க..சொல்லுங்க...

காக்கா ந்னு சொன்னேன். சார், காக்காவையா வீட்டில வளர்ப்பாங்க...சரி மைனான்னு சொன்னேன். சார், மைனாவா கோயிலில் இருக்கும். சரி, புறா ந்னு சொன்னேன்.

சரிங்க சார். இப்போ நீங்க நினைச்ச புறாவையே இந்த ரூபாய் நோட்டுல நான் எழுதி இருந்தா...இந்த பணம் கோயில் அன்னதானத்துக்கு போயிடும்னு சொல்லிட்டு...அந்த ரூபாய் நோட்டை எடுத்து காட்டினார்...கரெக்டா புறான்னு எழுதி இருந்தது..

நமக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு...ஐநூறு ரூபாயா.....ராஜா...ஒரு நூறு ரூபாய் எடுத்துக்கோ...மிச்சம் கொடுத்துடு.....

தெய்வ குற்றம்,அது இதுன்னு சொல்லி இருநூறு ரூபாய் உருவிட்டார்...
சார், உங்க குடும்பத்துல ஒரு தீராத கஷ்டம் இருக்கு...அதை போக்கணுமா வேணாமா , சொல்லுங்க சார்.

கடைக்குப் போன என் மனைவி வந்துட்டாங்க. என் பையன் ஓடி வந்தான்....டேடி உச்சா....உச்சா வருது....

அப்பாடி இதோட தப்பிச்சடணும்டா சாமி....வேலை இருக்குப்பா..போதும்...கிளம்புறேன்...

சார்...கடைசியா ஒரு கேள்வி சார்....ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து வைங்களேன்...சார்...

ஐயா...போதும்யா....இருநூறு ரூபாயே ரொம்ப ரொம்ப ஓவர்......அப்படின்னு என் பையன் சொன்ன மேட்டரை கவனிக்க போய்ட்டேன்....

ஆனா, ஒண்ணுங்க....என் பையனுக்கு மட்டும் சரியான நேரத்துல உச்சா வரலைன்னா....ஆயிரம் ரூபாயை விட்டு இருப்பேங்க.....

"ஒரு சின்னப் பையன், 10 நிமிஷம் பேசி, இருநூறு ரூபாய் வாங்கிட்டான் பாருங்க...உங்கள எல்லாம்....." என்று மனைவியின் புலம்பல்களோடு, ஷாப்பிங்க் போயிட்டு வந்தோம்...

எப்படி எல்லாம் டெக்னிகல ஏமாத்துறாங்க பாருங்க.....

Tuesday, August 18, 2009

ஆம்பளைங்க ஒண்ணா தங்குறது தப்புங்களா?


சமோவான்னு ஒரு நாடு, ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்துல ஆறு மணி நேரம் பயணம். குட்டி குட்டி தீவுகள் எல்லாம் சேர்ந்தது தான் சமோவா. அதுல முக்கியமான தீவுகள் உபோலு மற்றும் சவாய். மக்கள் கொஞ்சம் அதிகமாக வாழும் தீவு உபோலு அதன் தலைநகரம் ஆபியா. அங்க தான் நம்மல ஒரு ப்ராஜெக்ட் விஷயமா அனுப்பி இருந்தாங்க. நண்பர் சரவணகுமாரும் என்னுடன் வந்திருந்தார்.

அருமையான ஊரு, எங்க பார்த்தாலும் பச்ச பசேல்னு இருக்கு. ரொம்ப மரியாதையான,அன்பான ஜனங்க, நம்ம ஊர் மாதிரியே. பழ வகைகள் எல்லாம் அங்கேயே விளைந்தாலும், உணவுப் பொருட்கள் எல்லாம் பெரும்பாலும் நியூசிலாந்தில் இருந்து தான் இறக்குமதி பண்றாங்க. நல்ல சுற்றூலாத் தளம் சமோவா. ஆனா, மலேசியா, சிங்கப்பூர் மாதிரி ஒரு Lively,ஆரவாரமான ஊர் இல்லை. கொஞ்சம் அமைதியான இடம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருக்கும் பெரியவர்கள் தான் சுற்றுலாவிற்கு பெரும்பாலும் வர்றாங்க. சூரியன் கடைசியாக பார்க்கிற நாடு சமோவா தான்னு சொல்றாங்க. கிட்ட தட்ட ஒரு நாள் time difference இருக்குங்க, இந்தியாவோட ஒப்பிடும் போது.



Weekendல ஊரை சுற்றி காட்டினாங்க. இதோ இது தான் அந்த ஊர்ல இருக்க லால் மானோ பீச். Clear Water Beach ஐ பார்க்குறது நமக்கு இதுவே முதல் முறை, நல்லா ஒரு குளியலை போட்டுட்டு கிளம்பினோம். கிட்ட தட்ட ஒரு 6 மணி நேரத்துல, அந்த தீவை முழுவதுமாக சுற்றி வந்து விட்டோம். வழி நெடுக்க அடர்ந்த மரங்கள், தொடப்படாத இயற்கை என அப்படி ஒரு விருந்து நம் கண்களுக்கு.


அதே மாதிரி அடுத்த வார இறுதியில், மற்றொரு தீவான சவாய்க்கு போக பயண ஏற்பாடு செஞ்சாங்க. ஃபெர்ரி மூலமாகத் அந்த தீவுக்கு போக கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் பிடித்தது. நம்ம ஊர்ல கன்னியாகுமர்ல படகு சவாரி செஞ்சி இருந்தாலும், இவ்வளவு நேரம் கடலில் பயணித்தது கிடையாது. நல்ல அனுபவம்.

இரவு ஏழு மணி இருக்கும் ஒரு ரிசார்ட்க்கு வந்தோம். எனக்கும் சரவணனுக்கும் தனித் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான சாவியைக் கொடுத்தார்கள். சரின்னு, ரூம்க்கு வந்து பார்த்தோம். ரெண்டு மாடி கொண்ட ரூம். கீழ்த்தளத்தில் ஒரு ஹால், அதோடு இணைந்த சமையலரை, அதன் அருகில் குளியலரை. மேல்மாடியில் ஒரு டபுள் பெட், மற்றும், தனியாக ஒரு சிங்கிள் பெட் என பெரிதாக இருந்தது அந்த அறை. நம்ம தான் திருவெல்லிக்கேணி மேன்ஷன்ல எட்டுக்கு எட்டு ரூம்ல 4 பேரு தங்கினவங்க ஆச்சே...அதனால பெரிய லார்ட் லபக்தாஸ் மாதிரி, நம்ம ரெண்டு பேரும் இதே ரூம்லியே இருந்துக்கலாம் சரவணா, எதுக்கு வீணா Client காசை(170$) வீணாக்கனும், இன்னொரு ரூம் சாவியை கொடுத்துடலாம்னு போனோம். ஒரு ரூம் போதுங்க...நாங்க ஒண்ணாவே தங்கிக்கிறோம்னு சொன்னோம். அவ்ளோ தான், எல்லோராட பார்வையும் எங்க பக்கம் திரும்புச்சு...ரிசப்ஷனிஸ்ட் ஒரு மாதிரியா சிரிச்சாங்க..எங்க கூட வந்தவங்களும் ஒரு மாதிரியான நக்கலா பார்த்தாங்க.."உங்க ரெண்டு பேருல யாரு கம்பெனி இல்லாம படுக்க மாட்டீங்கன்னு" கேட்டாங்க. நாங்களும் அசடு வழிய...அப்படி எல்லாம் இல்லைங்க...ரூம் பெருசா இருக்கு..பேச்சுத் துணைக்கு ஆள் வேணும்..ஒரு இரவு தானே ஒண்ணாவே தங்கிக்கிறோம்னு சொன்னேன். ஒரு வழியா ரூம்க்கு வந்துட்டோம்.


ரூம் எதிரிலேயே கடற்கரை, அருமையான் காற்று என அம்சமா இருந்துச்சு. நல்லா தூங்கி எழுந்து அடுத்த நாள் காலை உணவுக்கு போனோம். வழக்கம் போல, தட்டை தூக்கிட்டு பிரட், கார்ன் ப்லேக்ஸ்,முட்டை, மஞ்சள் கலர்ல ஒரு ஜூஸ் எல்லாம் எடுத்துட்டு போய் சாப்பிட்டோம். அங்க ஒரு அம்மணி வந்து காபி வேணுமான்னு கேட்டுச்சு. வேணாங்கன்னு சொன்னோம்..ஒரு நிமிஷம் எங்களை ஒரு மாதிரியா பார்த்துட்டு..

"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு " கேட்டுட்டு நக்கலா சிரிச்சிட்டு போகுது. அட நன்னாரிப் பயலுகளா....ஒண்ணுமே இல்லாத விஷயத்தை, இப்படி கிரி படத்துல வர்ற அக்கா & கணபதி ஐயர் மேட்டர் ரேஜ்சுக்கு, ஊரே நம்மல கிண்டல் பண்ணுதேன்னு நினைச்சிக்கிட்டேன். ரெண்டு பேரும் சாதாரணமா ஒண்ணா தங்கினது அவ்வளவு பெரிய தப்புங்களா..அந்த அளவுக்கு இருக்குங்க....அங்க.... ஆஹா...நம்ம ஊர்லயும் இப்ப சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கைக்கு ஓகே சொல்லிட்டாங்களே...இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம ஊர்லயும் இப்படி தான் பார்ப்பாங்க போல இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.

மேலும் படங்கள்

அந்த ஊர்ல பஸ்

எரிமலையினால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டோம் (நானும், சரவணனும்)

நாங்க தங்கின ரிசார்ட்(ஒரு சின்ன விளம்பரம் கூட இல்லாம எப்படி : ) )

ஒரு வழியா, சுற்றி பார்த்துட்டு, ஆபியாவில் உள்ள எங்க ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரவு 9 மணி, நல்ல கலைப்பு, Buffet க்கு போனோம். அங்க வச்சு இருந்த உணவைப் பாருங்க....பதிவை படிச்ச கலைப்புல இருப்பீங்க...இதையும் கொஞ்சம் சாப்பிட்டுட்டு போங்க... : )

Monday, August 17, 2009

ஷாரூக் :என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட!


ஆகஸ்ட் 15, நம்மோட சுதந்திர தினம். சரி, நாட்டின் கொண்டாட்டங்களை பார்க்கலாமேன்னு ஆங்கில நியூஸ் சேனல்கள் பக்கம் திருப்பினா...BREAKING NEWS: Shah Rukh Khan detained and questioned for 2 hours. எந்த ஆங்கில, இந்தி சேனல்கள் திருப்பினாலும் இதே செய்தி தான். அடப் பாவிகளா, செய்தி போட வேண்டியது தான், அதுக்காக, சுதந்திர தினத்தைப் பற்றி வந்த செய்திகளை விட, முந்தியடித்துக்கொண்ட வெளியில் தெரிந்த செய்தி இது தான்.

சரி, இப்போ மேட்டர். "My Name is Khan" என்கிற அவரது படம் சமீபத்தில் தான் சான் பிரான்சிஸ்கோவில் படமாக்கப்பட்டது. அதன் இயக்குனர் கரன் ஜோகர். இந்த முறை இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை துவக்கி வைக்க, ஷாரூக் கான் அமெரிக்கா சென்றார். அப்போது அவருடைய பேக்கேஜ் காணவில்லை என்று கூறப்படுகிறது. அதனால முதலில் ஷாரூக் கானின் டாகுமெண்ட்சை சரி பார்த்துள்ளனர் அமெரிக்க குடியேற்றத் துறையினர். பிறகு அவரைத் தனி அறைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு முன்னாடி, பலருக்கு விசாரணை செய்ய வேண்டி இருந்ததால்,அங்கு, அவர் வரிசையில் காக்க வைக்கப் பட்டார். பிறகு, அவர் முறை வந்ததும், அவரை விசாரித்திருக்கின்றனர். எங்க, எதுக்கு வந்தீங்க...என்ன பண்றீங்க...இது தானே அவங்க நார்மலா கேக்குற கேள்வி..அதை கேட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். விசாரணை முடிஞ்சதும் அனுப்பிட்டாங்க. இது தான் நடந்தது.

நம்ம ஊர் ராசா தாங்க ஷாரூக் நீங்க...பெரிய நடிகர்....எல்லாம் சரி தாங்க..இன்னொரு நாட்டுக்குப் போறீங்க...அவங்க நாட்டோட பாதுகாப்புக்காக, நாட்டு உள்ள வர்றவங்களை சோதனை செய்ய எல்லா உரிமையும் உண்டு. இது ரொம்ப நியாயமா தானே இருக்கு. இதுக்கு இப்படி ஒரு மீடியா கவரேஜ் தேவையா? அதுவும், சுதந்திர தினச் செய்தியை விட கூடுதல் கவனம் இதுக்கு தேவையா? இதுக்கு போய் ஒரு அரசாங்கம் தலையிடனுமா? என்ன கொடுமை சார் இது..?

அது அமெரிக்கா...நம்ம ஊர் மாதிரி இல்லை...எல்லா குடிமகனையும் ஒரே மாதிரி தான் அங்க பாப்பாங்க...யாராக இருந்தாலும், விதிமுறை ஒன்று தான்...ஏழைக்கு ஒன்னு, பணக்காரனுக்கு ஒன்னு, நடிகனுக்கு ஒன்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அளவுகோல் கிடையாது. இதுல இன்னும் ஒரு காமெடி என்னான்னா...மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, "நாமும் அமெரிக்கர்களிடம் அதே போல நடந்து கொள்ள வேண்டும்(Tit for Tat)" என்பது போல பேசி இருக்காங்க. இது சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு....(கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா...அங்க ஒரு கொடுமை......)

நிஜமா சொல்லணும்னா, நம்ம அரசாங்கம் இதை ஒரு பாடமா எடுத்துக்கணும். எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தணும். நம்ம ஊர் எம்பி க்களுக்கு இந்த மாதிரி சலுகை கொடுத்து, அவங்க பொண்ணுங்களை யாருக்கும் தெரியாம கனடாவுக்கு அனுப்புன கதை எல்லாம் இருக்கு.

இதே மாதிரி நம்ம நாட்டோட முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.அப்துல் கலாமுக்கு நடந்தது. அவரும் அதை பெருசு படுத்தல.

இதுல என்ன தெரியுதுன்னா....சுதந்திர தினத்தன்று, பொதுவா சூடான செய்திகள் இருக்காது, ஏனென்றால், எல்லோரும் கொடியேற்றம், விழான்னு பிசியா இருப்பாங்க. அன்னிக்கு மட்டும் அமைதியா பேசுவாங்க. அதனால, இந்த நியூஸ் மீடியாக்கள் இதை ஒரு மேட்டரா எடுத்து, சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்குறாங்கன்னு தான் தோணுது !

இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் விசாரிக்கப்படும் போது, நமக்கும் இதே போல கோவமும், வெறுப்பும் ஏற்படுவது இயல்பு தான் என்றாலும், அதுக்காக, இனிமேல் நான் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன், அப்படி இப்படின்னு சொல்றது கொஞ்சம் ஓவராத் தான் தோணுது. நாங்க எல்லாம், சட்டத்துக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று மமதையில் கூறுவது போல இருக்குங்க.

உங்களைப் போலவே ஷாரூக் கானை எனக்கும் பிடிக்கும், அதுக்காக கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி தான் "என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட .." என்கிற ரேஞ்சுக்கு குரல் கொடுப்பது, ரொம்ப குழந்தைத் தனமா இருக்குங்க..!

Tuesday, August 11, 2009

முதலாளி Vs தொழிலாளி!

எனக்கே ரொம்ப மொக்கையா இருந்த மாதிரி தெரிஞ்சுது. அதுவுமில்லாம அதுல பல மேட்டர்ல எனக்கு கொஞ்சம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த இடுகையை நீக்கிவிட்டேன். தங்கள் வருகைக்கு நன்றி. மன்னிக்கவும்.

LinkWithin

Blog Widget by LinkWithin