Tuesday, December 12, 2017

ஆதிக்க சாதி வெறியன்னு திட்டிட்டுப் போங்க...!

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை - தீர்ப்பு - எனது பார்வை  (கொஞ்சம் பெரிய பதிவு....ஆதிக்க சாதி வெறியன்னு திட்டிட்டுப் போங்க...)

கோர்ட்...கேஸ்...மரண தண்டனை வேணுமா...இத்தனை பேருக்கு தூக்களிக்கும் அளவுக்கு இது ரொம்ப அரிய வழக்கா என்ற விவாதங்களுக்குள் நான் வரலை. கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கு என்ற வகையில் நீதி நிலை நாட்டப்பட்டிருக்கு என்பது மட்டும் நிஜம். தன் பெண் இப்படி போயிட்டாளே என்ற வேதனை பெற்றோருக்கு இருக்கவே செய்யும்...அதுக்காக கூலிப் படை வைத்து தன் சொந்த மகளையே கொலை செய்ய நினைக்கும் மனநிலை தவறான ஒன்று. யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று...! நிற்க !

இப்போ, தன் பெண்ணை நல்ல வேலையில், நல்ல குடும்பத்தில், நல்ல பழக்க வழக்கங்களுடன் உள்ள ஒருத்தருக்கு திருமணம் செய்யணும் என பெற்றோர் நினைப்பது தவறா என தெரியவில்லை. மணமகனுக்கு படிப்பு, வேலை என எதுவும் இருக்காது, குடும்பத்திலும் சொத்து பத்து இருக்காது, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லாத ஒருவரை நம் பெண் காதலித்தால் நாம் என்ன செய்வோம் ?  சரிம்மா...18 வயசு ஆயிடுச்சு...நீ மேஜர்...காதலிக்குறீங்க.....எவன் கூடன்னாலும் போயிடும்மா...நீ எப்படி போனா எனக்கென்ன..ந்னு எந்த பெற்றோர் சொல்வாங்கன்னு தெரியலை....(வாழ்கைக்கு காதல் மட்டும் இருந்தா போதும்னு சொல்றவங்க லெப்ட்டுக்கா திரும்பி போயிடுங்க..)

இன்றளவும் சொந்த சாதியாக இருந்தாலுமே காதல் எதிர்ப்புகள் இருந்துட்டு தான் இருக்கு.  சொந்த சாதியாகவே இருந்தாலும் இப்படி தங்கள் மகளுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதில்லை. ஏங்க ஒரு 10, 20 பவுன் அதிகம் போட்டு கூட, நல்ல இடமா கொடுக்கணுங்கன்னு அம்மாக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் வீடுகள் ஏராளம். அதே மாதிரி, நல்ல நிலையில் இருக்கும் தலித் சமுதாயத்தவர் எத்தனையோ பேர் தலித் அல்லாத சமுதாயத்தில் பெண் எடுத்து (அதாவது சாதி மறுப்பு திருமணம் செய்து) சந்தோஷமாகத் தான் வாழ்கின்றனர்.

மேல்சாதிப் பெண்ணை பணத்திற்காக திருமணம் செய்து, கடைசியில் பெற்றோரிடம் விலை பேரம் பேசி, பணம் பிடுங்கிய பின் பெண்ணை அனுப்பி வைக்கும் சம்பவங்கள் இங்கு ஏராளம்.  காதல் தோல்வி என்றோ, குடும்பத் தகராறு என்றோ வேறு சில பெயர்கள் சொல்லி சாதிப் பெயர் வராமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. மேலும், மானம் போயிடும்னு இதெல்லாம் ரகசியமா வச்சுக்க வேண்டிய மோசமான கட்டாயத்தில் இருப்பவர்கள் பலர். தர்மபுரி போன்ற வட மாவட்டங்களில் மட்டுமே பெரிதாக இருந்த இந்த விஷயங்கள் தற்போது கோவை திருப்பூர் போன்ற மாவட்டங்களிலும் ஆரம்பித்திருக்கிறது. பெரும்பாலும் இது போன்ற சம்பவங்கள் தான் சாதி மறுப்பு திருமணங்கள் என நீட்டி முழங்கப்படுகிறது.

கலப்புத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் என்ற இரெண்டு சொல்லாடல்களும் ஒரே பொருள் பட தோன்றினாலும், அவைகளுக்கு வித்தியாசம் உண்டு. தலித் அல்லாத பிற சமூகங்களுக்குள் சாதி மாறி நடக்கும் திருமணங்கள் கலப்புத் திருமணங்கள் எனவும் தலித் சமுதாயத்தவர் தலித் அல்லாதவரை திருமணம் செய்வது சாதி மறுப்புத் திருமணங்கள் எனவும் வரையறுக்கப் படுகிறது.

ஆக மொத்தம், டேடி நான் இவனை லவ் பண்றேன்...இவனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நம்ம பொண்ணு வந்து கேட்டா.....காதலன் நல்லவனோ கெட்டவனோ....எதுவும் கண்டுக்காம கண்ணை மூடிட்டு, பெற்றோர்கள் திருமணம் முடித்து வைக்க வேண்டும். இவங்க கணக்குல இது தான் சாதி மறுப்பு திருமணம். மறுத்தால் ஆதிக்க சாதி வெறி பெற்றோராக அடையாளப்படுத்தப்படுவீர்....என்று சொல்லிக்கொண்டு முடிக்கிறேன்..!

இப்படியெல்லாம், அடுத்த சாதிப் பெண்ணை ஏமாற்றி, பெற்றோரை மிரட்டி, வருத்தி, குடும்பத்தை அழித்து, திருமணம் செய்து தான் சாதி ஒழியணும் என்றிருந்தால், அந்த சாதி இருந்துவிட்டு போகட்டும் என்பதே என் பதிலாக இருக்கும்..!

கல்வியும் பொருளாதாரமும் காலத்தோடு இணைந்து பயனிக்கும் போது, இயல்பாக சாதி ஏற்றத் தாழ்வுகள் நீங்கும் !

Saturday, November 23, 2013

இந்த சாதிக்காரன் இப்படித் தான் இருப்பான்...!

சாப்ட்வேர் ப்ராஜெக்ட் சம்பந்தமாக ஒரு தொழிலதிபரிடம் பேச நிகழ்ந்தது. அவர் ஒரு இஸ்லாமியர். பல்வேறு தொழில்களில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொடிகட்டி பறக்கும் அரசியல் செல்வாக்கு மிகுந்த ஒரு விவிஐபி. மிகவும் எளிமையான மனிதர்.

ப்ராஜெக்ட் நிமித்தமாக பேசி முடித்த பிறகு, அவர் ஆரம்பிக்கும் நிறுவனம் பற்றி சொன்னார். பிறகு அதற்கு ஒரு தலைமை செயல் அதிகாரி (CEO) வேண்டும் என்றார்.

"கபிலன், எனக்கு ஒரு நல்ல திறமையான சேல்ஸ் அல்லது மார்கெட்டிங்க் போன்றவற்றில் 15 வருடம் அனுபவமுள்ள, கம்பெனி நிர்வாகம் அறிந்த ஒருவர் இருந்தால் சொல்லுங்கள். மாதம் 10 லட்சம் சம்பளம் தருகிறேன். மற்றும் கார், தங்குவதற்கு பங்களா போன்ற வசதிகளையும் செய்து தருகிறேன். இருந்தால் சொல்லு ப்பா "

அடடா.... 10 லட்சம் சம்பளமா...நம்மலே ஒரு பிட்டை போட்டு பாத்துறலாமான்னு யோசிச்சிட்டே...சார்...அந்த மாதிரி ஒரு 3 அல்லது 4 பேர் எனக்குத் தெரியும் நான் உங்களுக்கு இமெயில் அனுப்பச் சொல்கிறேன் சார். என்றேன்.

உடனே அவர்,
" சரி பா...ஆனா ஒரே ஒரு கண்டிஷன், அவர் ஐயர் வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மற்ற வகுப்புகள் வேண்டாம்" என்றார்.

ஓகே...நமக்கு பேசிக் தகுதி அவுட்...அது சரி....ஆனால் ஒரு இஸ்லாமிய தொழிலதிபர், தான் தேர்ந்தெடுக்கும் ஒருவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இப்படி சொல்கிறாரே என விழித்தேன். ஆச்சர்யத்தில் விழித்த என்னைப் பார்த்த அவர்,

"கபிலா...உலகத்துலயே ரொம்ப உஷாரான திறமையான அறிவாளியான இனம் எது தெரியுமா?" என்றார்.

"தெரியலிங்க" என்றேன்.

"யூதர்கள். நம் ஊரில் அது போலத் தான் ஐயர் வகுப்பினர். நாம் போடும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் துணிச்சலுடன் சில முடிவுகள் எடுத்து அதன் மூலம் பொருள் ஈட்ட வேண்டும். அந்த விஷயத்தில் ஐயர் தான் டாப்" என்றார்.

சரிங்க...சொல்றேன்...என்று கிளம்பினேன்.

ஐயர் வகுப்பினர் திறமையானவர்கள் என்பதை மறுக்கவில்லை.

ஆனால், சாதியை வைத்து அவன் இப்படித் தான் இருப்பான், இவன் இப்படித் தான் இருப்பான் என்ற நம்பிக்கை உயர் மட்டத்திலும் ஆழமாக இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

என்ன ஒரு ஆறுதல் என்றால், அந்த இஸ்லாமிய தொழிலதிபருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். அந்த தலைமுறையில் இருப்பவர்கள் அப்படித் தான் நினைப்பார்கள் என்று நினைத்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

இப்போதைய தலைமுறை சாதியை வைத்து குணத்தையும், திறமையையும் எடை போடாது என்று நம்பிக்கை கொள்வோம்.

LinkWithin

Blog Widget by LinkWithin