Thursday, November 19, 2009

Curly Hair,Very Fair -RHYMES நமக்காகவா?


"ஏங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க அங்க....எப்ப பார்த்தாலும் டிவி முன்னாடி உட்கார்ந்துட்டு நியூஸ் பாக்குறதே வேலையா போச்சு......இங்க வாங்க, நம்ம பையன் ரைம்ஸ் சொல்றான், இங்க வந்து கேளுங்க...." என தங்கமணி சவுண்ட் விட, நானும் போனேன்.
"தீபு, டேடிக்கு RHYMES சொல்லி காமி டா..." என்றாள்.

Chubby Cheeks,Dimple Chin

Rosy Lips,Teeth within

Curly Hair,Very Fair

Eyes are blue,Lovely Too

Mummy's pet, is that you? Yes...Yes...Yes...

Very Good..Super da கண்ணா...என பாராட்டிவிட்டு, டிவி பார்க்க திரும்பினேன். அப்போ தான் யாரோ டார்ட்டாய்ஸ் கொசு வத்தியை முகத்துக்கு முன்னாடி சுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்க். ஆமாங்க ஃப்ளாஷ் பாக் தான். ஆஹா...நம்மளும் இப்படி தானே பாடியிருப்போம். என் பையன் பரவாயில்லை கொஞ்சம் கலர். நானெல்லாம், கிட்ட தட்ட தார் கலர் ஆச்சே. நம்ம கூட இந்த பாட்டை சிரிக்காம பாடியிருக்கோமேன்னு தோணுச்சு. குழந்தைங்க என்ன செஞ்சாலும், எது பாடினாலும் ரசிக்கும் படியாகத் தான் இருக்கும் என்பது வேறு விஷயம். இருந்தாலும் அந்த பாடலின் அர்த்தத்தை நினைத்துப் பார்க்கும் போது, இந்தப் பாடல், நம்ம நாட்டு குழந்தைகளுக்கு ஏற்புடையதான்னு யோசிக்கத் தோணுச்சு.

ஆரம்பப் பள்ளிக் காலங்களில், காலம் காலமாக நாம் பயின்று வரும் ஆங்கில RHYMES என்கிற பாடல்கள் நமக்கு ஏற்ற மாதிரி இருக்கான்னு ஒரு சின்ன அலசல். முதலில் இந்தப் பாடலையே எடுத்துப்போம்.

"chubby cheeks"
ஒரு வேளை உணவிற்கே வழியில்லாமல், குழந்தைகளை வேலைக்கு அனுப்பினாங்க பெத்தவங்க..."சாப்பிட சோறே இல்லாத போது எந்தக் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவாங்க பெத்தவங்க...இலவசமா பள்ளிக் கூடத்துல சாப்பாடு போடுங்க....கல்வியும் கொடுங்க..." என சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து கல்விப் புரட்சியைத் தொடக்கியவர் காமராஜர். இப்படி கன்னம் ஒட்டி போய், மெலிந்து வரும் குழந்தைகள் பாடும் பாட்டைப் பாருங்க... Chubby Cheeks

"Rosy Lips, Teeth within...Curly Hair,Very Fair"
இது அதைவிட மோசம். நம்ம ஊர்ல முக்கால்வாசி பேரு கருப்பு தான். இந்த பாடலை நானும் குழந்தைப் பருவத்தில ஆர்வமா கை கால் ஆட்டி பாடி காட்டியிருப்பேன். எங்க வீட்லயும், ரசிச்சு பார்த்திருப்பாங்க. கொஞ்சம் அர்த்தம் தெரிஞ்ச பிறகு, கன்னங்கரேல் நு இருந்துட்டு, சுத்தமா சம்பந்தமே இல்லாம, இப்படி ஒரு பாட்டு பாடி இருக்கனேன்னு சிரிப்பு தாங்க வருது.

இந்த மேட்டர்களுக்கு நம்ம அரசியல் கும்பல்கள் என்ன மாதிரி கருத்து தெரிவிப்பாங்கன்னு ஒரு கற்பனை.
London Bridge is Falling down,...falling down...falling down......on my Fair Lady.

திராவிடர் கழக பிட்டு : "Fair Lady". இந்தப் பாடல் வெள்ளை ஆரியனை உயர்த்தி, கருப்புத் திராவிடனை தாழ்த்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட ஒரு பார்ப்பனீயச் சிந்தனை. இத்தகைய மூடப் பாடல்களைத் சமுதாயத்தில் இருந்து அகற்றுவதே திராவிடர் கழகத்தின் முதல் வேலை. அதற்கு பதிலாக
Rain Rain Go away styleல..
"God God where are you?
Come to me, if you are true..."

கலைஞர் பிட்டு: லண்டன் பிரிட்ஜ் என்பது நம்மில் பெரும்பாலானோர் பார்க்காத ஒரு பாலம். அது விழுவதாக பாடல் வரிகளில் வருவதில் நம் ஊரில் எந்த அரசியலும் இல்லை. ஆனால், இதையே கத்திப்பாறா பிரிட்ஜ் என்றோ வேறு ஒரு மேம்பாலம் என்றோ குறிப்பிட்டால், நான் கட்டிய பாலம் எப்படி உடைந்து விழும் என அம்மையார் சண்டைக்கு வருவார். ஆகையால், யாரும் பார்க்காத ஒரு பாலம் விழுவதாகவே பாடலில் இருத்தல் நலம். வேண்டுமென்றால், இல்லாத பாலமான ராமர் பாலம் விழுவதாக வேண்டுமானால் மாற்றுங்கள், சேதுவிற்காவது வழி பிறக்கட்டும்.

அடுத்தது இந்தப்பாடல்,
"Hot Cross Buns, Hot Cross Buns
One a Penny, two a Penny
Hot Cross Buns..."
பிஜெபி பிட்டு : Bun என்பது சரி. அது என்ன அந்த ரொட்டி மீது ஒரு கிராஸ். ஆங்கிலேயன் கிறித்துவத்தை பரப்புவதற்காக ரொட்டி மீது கிராஸ் போட்டு நம்மிடம் திணித்த பாடல் இது. இது நம் இறையாண்மைக்கு எதிரான பாடல்.

கம்யூனிச பிட்டு : Bun என்கின்ற உணவு ஆங்கிலேயன், அவனுடைய பொருட்களை சந்தை செய்ய இந்தியாவிற்கு இறக்குமதி செய்த ஒன்று. ஆரம்பக்கல்வியிலேயே அவனுடைய ஏகாதிபத்யத்தை செலுத்தியதால், இன்று Bun வளர்ந்து Pizza வாக உருவெடுத்து பிசாசாக நிற்கிறது உலகமயமாக்கல். இதற்கு முடிவு கட்டும் முதல் முயற்சியாக இப்பாடலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

சரி, என்ன தான் வெள்ளைக்காரன் நம்முடைய கல்வி வாய்ப்பை திறந்து விட்டாலும், அதுக்காக எத்தனை வருஷமா நமக்கு சுத்தமா சம்பந்தமே இல்லாத பாடல்களை, தேவை இல்லாத பாடல்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கோம்னு தோணுதுங்க.. தமிழ் ரைம்ஸ் பாடல்கள் கலக்கலா இருக்குங்க...புதுசா புதுசா அருமையான பாடல்கள் வந்த வண்ணம் இருக்கு...அதுல சந்தேகமே இல்லை. ஆனா ஆங்கில பாடல்கள் இன்னும் அதே தேய்ஞ்ச ரிக்கார்டு மாதிரியே பாடிட்டு இருக்கோம். நம்ம நாட்டுக்கு, ஊருக்கு ஏத்த மாதிரி சொந்தமா ஆங்கில ரைம்ஸ் பாடல்களை நம்முடைய குழந்தைகள் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோன்னு தோணுதுங்க..

என்ன தான் இந்த மேட்டரை, நம்ம கிண்டலா சொன்னாலும், இட்லி-சாம்பார் பத்தியோ, பொங்கல் வடை பத்தியோ, போண்டா- பஜ்ஜி ,முறுக்கு போன்ற நம்ம ஊர் ஐட்டங்களைப் பற்றி, நம்ம குழந்தைகளுக்கு பழகிய ஒன்றைப் பற்றி ஆங்கில ரைம்சுகள் ஒன்றில் கூட வராதது கொஞ்சம் வருத்தம் தான். (அட நன்னாரிப் பயலே...கடைசியிலே உன் புத்திய காட்டிட்டியே டா... : ) ) இங்கு விற்கப்படும் ABCD புத்தகங்களில் கூட பெரும்பாலும், நமக்கு கிடைக்காத பழவகைகள், பார்த்திராத மிருகங்கள், கேள்விப் படாத பறவைகள் போன்றவைகள் தான் இருக்குங்க. என் பையன் அதை எல்லாம் பார்த்துட்டு, டால்பின் பாக்கணும் டேடி...போலார் பியர் பாக்கணும் டேடி...சீல் பாக்கணும் டேடி, SpoonBill பாக்கணும் டேடி, Iquana பாக்கணும் டேடி ந்னு சொல்றான்....இதுக்கெல்லாம் நான் எங்க போறது....டேய் நானே இதெல்லாம் பார்த்தது கிடையாதுடா....ஏதோ, என்னால முடிஞ்ச காக்கா குருவி,குதிரை வேணும்னா காட்டுறேன்..வாடா...ஒரு கதை சொல்றேன்...ஒரு பாட்டி வடை சுட்டுன்னு இருந்தாங்களாம்......@#$%^&*() : )

டேய் இந்த ரைம்ஸ் மேட்டருக்கு, இவ்வளவு பெரிய ஒப்பாரியா டா ந்னு நீங்க கேக்குறது புரியுது...என்னமோ போங்க... : )

Sunday, November 8, 2009

"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்?

என்னடா, இவனுக்கு இதைப் பத்தி ஒரு ஆராய்ச்சின்னு நீங்க நினைக்கலாம். பல சமயங்களில் கவனிச்ச ஒன்று தாங்க இது.நிறைய பேரு நின்னுட்டு டீ குடிச்சிட்டு இருப்பாங்க, சமோசா, பஜ்ஜி சாப்பிட்டுட்டு இருப்பாங்க. ஆனா, அவங்க எல்லாம் பிச்சைக்காரர்களுக்கு முதல் டார்கெட் கிடையாது. யாரு சிகரெட் புடிச்சிட்டு இருக்காங்களோ, அவங்கள தான் முதல்ல அட்டாக் பண்ணுவாங்க. அதுவும் பல தடவை, இல்லைமா, போயிட்டு வாங்க...அப்படின்னு சொன்னாலும் போக மாட்டாங்க. எந்த பக்கம் மாறி மாறி நின்னாலும், எதிர்ல வந்து நின்னு, காசு கொடுக்குற வரைக்கும் விட மாட்டாங்க.

சரி, அப்படி என்ன தான்யா தம் அடிக்கிறவங்க கிட்ட இருக்கு. எதுக்கு அவங்கள எல்லா பக்கமும் அணை கட்டுற மாதிரி, சுத்தி சுத்தி வந்து பிச்சை கேக்குறாங்கன்னு, கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சு பார்த்தபோது தான் தோணுச்சு, சரி இதைப் பற்றியே ஒரு பதிவு போட்டுறலாம்.

எல்லாப் பிச்சைக்காரர்களும் ஒரே மாதிரி இல்லைங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையா இருப்பாங்க.சிலர் வீடு வீடாக சென்று உணவு வாங்கிச் செல்பவர்கள், சிலர் சிக்னலில் பிச்சை எடுப்பவர்கள், சிலர் பொட்டிக் கடை,டீக்கடை அருகில் பிச்சை எடுப்பவர்கள், சிலர் கோவில் வாயிலில் பிச்சை எடுப்பவர்கள் என பல வகைகள் உண்டு.

ஆனா, என்ன தான் பிச்சைக்காரர்களாக இருந்தாலும், யாரிடத்தில், எப்பொழுது, எப்படி பிச்சைக் கேட்டால் பிச்சை கிடைக்கும் என்பதை சரியாக தெரிந்து வைத்திருப்பார்கள்.இந்த சூழ்நிலையில் பிச்சைக் கேட்டால், அவனால மறுக்கவே முடியாது என்பதை அறிந்து ஒரு Clear Strategy யுடன் பிச்சை எடுப்பவர்கள் பலர். அப்படி ரொம்ப டெக்னிகலா ப்ளான் பண்ணி பிச்சை எடுப்பவர்களிடம் எந்த மாதிரியான சூழ்நிலைகள்ல, நாம எப்படியெல்லாம் மாட்டிக்கிறோம்னு இப்போ பார்ப்போம்.

சூழ்நிலை 1: வேலை செய்கிற,30 வயதுடைய ஒருவர் தம் அடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பிச்சை கேட்பதின் நோக்கம்.

ஐயா, நல்லா இருக்க உடம்பை கெடுத்துக்குறதுக்கே நீங்க ரூ.4.50 செலவு பண்றீங்களே, நாங்கல்லாம் சோத்துக்கே வழி இல்லாம இருக்கோமே, எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன் என்று சொல்வது போல இருக்கும் அவர்களின் பாவணை.

பல சமயங்களில் நமக்கே ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படும்...என்னடா நம்ம சிகரெட் பிடிக்க இவ்ளோ செலவு பண்றோம், ஆனா அவங்க சாப்பாட்டுக்கே வழி இல்லாம காசு கேக்குறாங்களே.....கிட்ட தட்ட ஒரு குற்ற உணர்ச்சி மாதிரி தோணும். சரி, கொடுத்துடுவோம்னு பெரும்பாலான தம் பிரியர்கள் நினைக்குறாங்க.


சூழ்நிலை 2 : கல்லூரி வளாகத்தின் வெளியே ஒரு மாணவன், புகை வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

ராசா, உங்களப் பெத்தவங்க, படிக்கக் கொடுத்த காசை, புகையையாய் எறிச்சுத் தள்ளுறீங்க. கஷ்டப்பட்டு அப்பா அனுப்புற காசை மொத்தமும் ஊதி அழிக்காம, எங்களுக்கும் கொடுத்தீங்கன்னா புண்ணியமாவது வந்து சேரும் ராசா...

நம்மாளு வேற வழி இல்லாம 50 காசோ, 1 ரூபாயோ போட்டு அனுப்புவார்.

சூழ்நிலை 3: காதலனும் காதலியும் தனிமையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஒருவர் பிச்சைக் கேட்கிறார்.

சாதாரண சமயங்களில், எச்சைக் கையில் காக்கா கூட ஓட்டாதவராக இருக்கும் காதலன், காதலியுடன் இருப்பதால், உடனே பர்சை எடுத்து டகால்னு ஒரு 5 ரூபாய் எடுத்துக் கொடுப்பார்(1 ரூபாய் 2 ரூபாய் சில்லரை இருக்கும்). "என்னாங்க...பிச்சைக்காரனுக்கு போய் 5 ரூபாய் போடுறீங்க..இதெல்லாம் டூ மச் ங்க..." என்பாள் காதலி. "இல்லம்மா ...சேஞ் இல்லை..its OK." என்று பொய் சொல்லி, தன் இமேஜை கொடை வள்ளல் ரேஞ்சுக்கு டெவலப் செய்து கொள்வான் காதலன்.

சூழ்நிலை 4: கல்யாண வயசுல இருக்க பெண்ணை அழைத்துக்கொண்டு, குடும்பத்தோட கோவிலுக்குப் போறாங்க. அங்க, கோவில் வாசலில்
ஒருவர் பிச்சைக் கேட்க அமர்ந்திருக்கிறார்.

"அம்மா, இது உங்க பொண்ணுங்களா அம்மா. எம்பெருமான் அருளால, பொண்ணுக்கு சீக்கிரமா ஒரு வரன் அமையும். சந்தோஷமா கோயிலுக்குப் போயிட்டு வாங்க..."

அடடா.....நம்ம நினைச்சுட்டு வந்த விஷயத்தை அப்படியே சொல்றாரே...நுழையும் போதே நல்ல வார்த்தை சொல்றாரே...இவர் வாக்கு பளிக்கனும்னு நினைச்சு...அவர் தட்டுல ஒரு கணிசமான தொகை விழுறது நிச்சயம்.

சூழ்நிலை 5: பிளாட்பார்ம் கடையில இட்லி சாப்பிட்டுட்டு இருப்போம். அப்போ ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்கிறார்.

"சாரி பா சேஞ்ச் இல்லை" என்று சொல்லிவிட்டு கடையில் பணம் கொடுக்கிறார். மிச்சம் சில்லரையை கொடுக்கிறார் கடைக்காரர்.

இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் அதே பிச்சைக்காரர் மறுபடியும் கேட்கிறார் : )

இந்த மாதிரி பல சூழ்நிலைகளில், பிச்சைக்காரர்களை தவிர்ப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷய்ம் தான்.

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவதிலேயே நமக்குள்ள பல பாலிசிகள் இருக்கும். சின்ன பசங்களுக்கு பிச்சை போடக்கூடாது. உடல் குறைபாடுகள் இருக்கவங்களுக்கோ, முதியவர்களுக்கோ பிச்சை போடலாம்.இப்போதெல்லாம், பிச்சை என்பது பணம் புழங்கும் பெரிய தொழிலாகி விட்டது. இப்படியெல்லாம் சொல்லுவோம்.

இப்படி என்ன தான் காரணங்கள் சொன்னாலும், அவர்களுடைய வயிற்றுப் பசியின் கோரம், விகாரமாக ஒலித்தும் ,நம் மூளை அதனை நிராகரிப்பது என்பது பல சமயங்களில் வருத்தமான மேட்டராவே இருக்குங்க : (

Wednesday, November 4, 2009

வந்தே மாதரம் பாடலுக்கு ஃபத்வா !

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் வங்காள தேசத்தில், துணை ஆட்சியாளராக திகழ்ந்தவர் பக்கிம் சந்திர சேட்டர்ஜி. அவர் ஒரு நாள், ராமகிருஷ்ணரை பார்க்கச் சென்றிருந்தார்.

அப்போது ராமகிருஷ்ண்ர் "உன் பெயர் என்ன?" என்று வினவினார். பக்கிம் சந்திர சேட்டர்ஜி என்றார் அவர்.

அதற்கு ராமகிறுஷ்ண்ர் "பக்கிம் என்றால் வலைந்த என்று பொருள். சந்திர என்பது சந்திரன். ஆக, வலைந்த சந்திரன் என்பது உமக்கு பொருத்தமான பெயர் தான். ஆங்கிலேயனுக்கு வேலை செய்து, பூட்ஸ் காலில் அடிப்பட்டு வலைந்து போகிறாய். உமக்கு இந்தப் பெயர் பொருத்தமான பெயர் தான்" என்று வேடிக்கையாகச் சொன்னாராம்.

ஆங்கிலேயனுக்கு வேலை செய்வது அடிமைத்தனம். இந்த அடிமைத்தனத்தை இவ்வளவு நாள் செய்துவிட்டோமே என்று எண்ணி, தன் வேலையை ராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில் இறங்கினார் பக்கிம் சந்திர சேட்டர்ஜி.

தேசப்பற்றை வளர்க்கும் பல நூல்களை எழுதினார். அதில் "ஆனந்தமடம்" என்ற நூலும் ஒன்று. அதிலிருந்து எடுக்கப்பட்டது தான் "வந்தே மாதரம்". இந்திய மக்களை, ஆங்கிலேயனுக்கு எதிராக ஒன்று கூட்டி போராடச் செய்த பாடல் அது. எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள், அடித்து கொல்லப்பட்ட போது, தூக்கிலிட்ட போது மரணப்பிடியில் இருந்தும் கூட உணர்ச்சிபொங்க, வீரம் ததும்ப சொன்ன வார்த்தைகள் இது "வந்தே மாதரம்".

அப்படியாப்பட்ட ஒரு பாடலை முஸ்லிம்கள் பாடக்கூடாது என ஃபத்வா போட்டிருக்கிறது, ஜமாத் இ உலீமா ஹிந்த் என்கின்ற ஒரு அமைப்பு. என்னய்யா...என்ன பிரச்சினை உங்களுக்கு அதுல...அப்படின்னு கேட்டா. அல்லாவைத் தவிர யாரையும் முஸ்லிம்கள் வணங்கக் கூடாது. வந்தே மாதரம் பாடலில் தாய் மண்ணை வணங்குவதாக சொல்கிறதாம். என்ன கொடுமைங்க இது. அந்தப் பாடல் தமிழில் தாய் மண்ணே வணக்கம் என்று தாங்க வருது. ஒரு தாயை, தாய் மண்ணுக்கு வணக்கம் கூறுவதில் என்ன கெட்டுப் போச்சு ?

சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலான அபுல் கலாம் ஆசாத் ஒரு மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர். அவரே வந்தே மாதரம் பாடலை வழிமொழிந்திருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய சுன்னி உலீமா பேரவை, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பாகங்களை முஸ்லிம்கள் பாடலாம் என ஃபத்வா போட்டது. தாயின் காலில் தலை தாழ்த்துவது என்பது வழிபாடு அல்ல அது ஒரு மரியாதையாக கருத வேண்டும் என அந்தப் பேரவையின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருதீன் குவாத்ரி அஜீலானி கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்தப் பாடலைப் பாட வேண்டும் என்று யாரும், யாரையும் வற்புறுத்தவில்லை. இப்படி இருக்க எதுக்காக இப்போ இந்த கும்பல், இதை ஆரம்பிக்குறாங்க....ஒண்ணுமே புரியல....

தேசப்பற்று மிக்க இந்தப் பாடலுக்கு மதச்சார்பான அர்த்தம் கற்பிப்பது, நம் நாட்டி ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயலாகவே கருதப்படும். இதை ஒரு காரணமாக வைத்து, அண்ணன் தம்பியா இருக்க மக்களை சண்டை போட வைக்கணும் அல்லது பல இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் ஜமாத் இ உலீமா ஹிந்த் தான் உண்மையான இயக்கம் என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி ஆள் சேர்க்க வேண்டும் என்பது தான் இது போன்ற இயக்கங்களுடைய நோக்கமாகத் தெரிகிறது. எது எப்படியோ,

வீட்டில் இந்துவாய் இரு
வீட்டில் கிறித்துவனாய் இரு
வீட்டில் இஸ்லாமியனாய் இரு
நாட்டில் இந்தியனாய் இரு.

அப்படின்னு குன்றக்குடி அடிகளார் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது.

வந்தே மாதரம் !

Monday, October 12, 2009

அருள்வாக்கு ஜெக்கம்மா - ஒரு கற்பனை!


அருள்வாக்கு கேட்க, ஜெக்கம்மாவிடம் வரும் சிலருக்கு, அவர்எப்படி அருள் வாக்கு கூறுவார் என்று சின்ன கற்பனை.இதை கொஞ்சம் அருள்வாக்கு கொடுக்குறவங்க ஸ்டைல்ல படிக்கவும்...

சிஷ்யர் : ஜெக்கம்மா....நம்ம கம்பூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக் கண்ணு வந்திருக்காரும்மா அருள் வாக்கு கேக்க...என்ன சொல்லப் போற..

ஜெக்கம்மா : டேய்....ஏகாதிபத்யம்..ஏகாதிபத்யம் னு சொல்றீங்களே...அது என்ன பத்தியம் டா........என் கிட்ட இல்லாத பத்தியமா....டா....ஜெய்ய்ய்ய் ஜெக்கமாஆஆ..........4 1/2 வருஷம் கூடவே இருந்து ஆதரவு கொடுத்து குப்பை கொட்டிட்டு, வெளியே வந்து விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம்னு ஓட்டுக் கேட்ட இல்லை....குத்தனாங்க பாருங்க ஜனங்க...ஓட்டு இல்லை...உங்களுக்கு ஆப்பு.......இனிமேலாவது நல்ல புள்ளையா இரு...போ......ஜெய்ய் ஜெக்கம்மா...

சிஷ்யர்: ஜெக்கம்மா தாயே...நம்ம வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஷஷி தரூர் வந்திருக்காரு மா...

ஜெக்கம்மா : வாய்யா...ஷஷி தரூர்....ஒரு மனுஷனுக்கு ஜாதகத்துல ஒரு கட்டத்துல தான் சனி இருப்பார்....ஆனா உனக்கு எல்லா கட்டத்துலயும் சனி சப்பலங்கால் போட்டு உட்காந்துட்டு இருக்காருடா.........இனிமேல், ட்விட்டர்ல திட்டும் போது...ச்சே...ட்விட்டும் போது, அருள்வாக்கு ஜெக்கம்மா துணைன்னு போட்டுட்டு, அப்புறம் ட்விட்டு பண்ணு....எல்லாப் பிரச்சினையும் போயிடும் டா...ஜெய்ய் ஜெக்கம்மாஆஆ....

சிஷ்யர்: அருள்வாக்குத் தாயே....அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வந்திருக்கார் மா...அருள்வாக்கு கேட்க...

ஜெக்கம்மா : வாய்யா.....ஒபாமா...உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு டா...என் பேரு ஜெக்-கம்-மா....உன் பேரு ஒ-பா-மா. ஒரு நல்ல காரியத்துக்கு குடும்பத்தோட போகும் போது, ஜெக்கம்மாவுக்கு கடா வெட்டி, பொங்கல் வைக்கணும்னு கூட தெரியாதாடா ? நீயெல்லாம் எப்படி அமெரிக்க ஜனாதிபதி ஆன? அப்படி மதிக்காமப் போனீயே, ஒலிம்பிக்ல சிகாகோ பிட்....என்னாச்சு...? நோபல் பரிசு கிடைச்சும், அது உனக்கு தகுதியான்னு உலகமே பேசுறத கவனிச்சியா...? இனிமேலாவது ஜாக்கிரதையா நடந்துக்கோ....ஹெல்த் கேர் பில் பாஸ் ஆகணும்னா...உன் கோட் பாக்கெட்ல ஒரு எலுமிச்சம் பழத்தை எப்பவும் வச்சிக்கோ.....ஜெக்கம்மா சொல்றா...ஒபாமா செய்றான்....ஜெய்ய்ய் ஜெக்கம்மாஆஆ....

சிஷ்யர்: எல்லோருக்கும் அருள்வாக்கும் சொல்லும் அருள்வாக்கு அம்மா, உங்களைப் பார்க்க பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வந்திருக்காரும்மா...அவரே ஏதோ கேக்கணுமாம் தாயே...

ஜெக்கம்மா : ஜெய்ய்ய்ய் ஜெக்கம்மா......டேய்...ஆசிப் அலி சர்தாரி...பாகிஸ்தான்ல நீயே ஒரு டம்மி பீசு.....நீ எதுக்குடா வந்தே.....நீ போயிட்டு ராணுவத் தளபதி பர்வேஸ் கியானியை வரச் சொல்லுடா....அவன் தாண்டா எல்லாமே.......சரி இவ்ளோ தூரம் வந்துட்ட பரவாயில்ல கேளு.
ஆசிப் அலி சர்தாரி :
ஜெக்கம்மா தாயே...பாகிஸ்தான்ல தீவிரவாதம் எப்பம்மா போகும்.....

ஜெக்கம்மா : ஹ்ம்ம்ம்ம்...... உலக அமைதிக்கு வாக்கு சொல்லட்டா அல்லது உங்க நாட்டுக்கு மட்டும் நல்லது உலகுக்கே கெட்டது.... அந்த வாக்குச் சொல்லட்டா...

ஆசிப் அலி சர்தாரி: எங்க நாட்டு நல்லதுக்கு மட்டும் சொல்லு தாயி...உலகம் கெட்டாலும் பரவயில்லை...

ஜெக்கம்மா : அதான பார்த்தேன்...எங்க இருந்து புத்தி வந்துருச்சோன்னு நினைச்சேன்.. ஜெய்ய்ய் ஜெக்கம்மா.......உங்க நாட்டோட GDP யே தீவிரவாதத்தை நம்பித் தாண்டா இருக்கு....அது மட்டும் இல்லைன்னா...ஒரு நாய் கூட உங்க ஊரை சீண்டாது...தீவிரவாதி இல்லைன்னா...அமெரிக்க காரன் பைசா கொடுக்க மாட்டான்...இந்தியாவை எதிர்க்கிற தீவிரவாதி இல்லைன்னா...சீனாக் காரன் ஆயுதம் கொடுக்க மாட்டானே டா..........தீவிரவாதம் இல்லைன்னா பாகிஸ்தான் ராணுவம் என்னடா பண்ணும்...அவனுங்க வேலையே அது தானே...? தீவிரவாதம் இல்லைன்னா உங்க நாட்டு மக்களுக்கு என்ன வேலை வாய்ப்புடா கொடுக்க முடியும்...? ஹ்ம்..... கம்முனு போய் அமெரிக்கனுக்கு கால் அமுக்குற வேலையையே கண்டின்யூ பண்ணுடா...அதான் உங்க நாட்டுக்கு சரி...ஜெய்ய்ய் ஜெக்கம்மா....ஹ்ம்ம்ம்....

சிஷ்யர் : இது வரைக்கும் பார்த்த எல்லாரையும் விட ரொம்ப டேஞ்சரான ஆள் ஒருத்தர் வராரு மா....ஜெக்கம்மா...

ஜெக்கம்மா : ஹ்ம்ம்....டேய்....யாருடா அவன்.....நமக்கே டேஞ்சரான ஆளு யாருடா அவன்....

சிஷ்யர் : வலையுலகத்துல பதிவராம். ப்ளாக்ஸ் எல்லாம் எழுதுவாராம்...ஏதோ கேக்கணும்னு வந்திருக்காரு...

ஜெக்கம்மா : ஐயோ ஜெக்கம்மா.....வலைப்பதிவரா.....எதுக்கெடுத்தாலும் கேள்வி கேப்பானே டா அவன்....சும்மா நின்னுட்டு இருக்கும் போதே....ஏன்மா நிக்குற அங்க தான் நாற்காலி இருக்கே..ஏன் உட்காரல?ந்னு கேப்பான். சரின்னு உட்கார்ந்த உடனே....என்னா ஜெக்கம்மா நாற்காலி கிடைச்ச உடனே உட்கார்ந்துடுவியான்னு இன்னொருத்தன் கேப்பான்.....அவனை அப்படியே கிளம்பச் சொல்லு.....நம்மால முடியாதுடா.....ஜெய்ய்ய் ஜெக்கம்மா....

சிஷ்யர் : அருள்வாக்குத் தாயே..உங்கள பாத்துட்டுத் தான் போகணும்னு அடம்பிடிக்கிறாருங்க அந்தப் பதிவர்..

ஜெக்கம்மா : சரி வரச் சொல்லு....ஹ்ம்ம்ம்ம்ம்

பதிவர் : ஜெக்கம்மா தாயே...ஒரே ஒரு கேள்வி தான்மா உங்கிட்ட...எப்படிம்மா ஹிட்ஸ் வாங்குறது...

ஜெக்கம்மா : ஜெய்ய் ஜெக்கம்மாஆஆஆ......இது ரொம்ப சிம்பிள்டா.....நாலு பேரு வலைத்தளத்துக்கு போயி, பதிவைக் கூட படிக்காமல், திட்டிட்டு வரணும். அதற்கு பதிலாக, அந்த நாலு பேரு, நாற்பது பேரை கூட்டிட்டு வந்து உங்க வலைத்தளத்துல திட்டுவாங்க...இப்படியே கண்டின்யூ பண்ணீங்கன்னா....ரேங்கிங்க்ல உன் சைட் கூடிய சீக்கிரம் வந்துடும் டா.......ஜெய்ய்ய் ஜெக்கம்மாஆஆஆ...

பதிவர் : நன்றிம்மா...கடைசியா ஒரே ஒரு குட்டிக் கேள்வி...பதிவுலகத்துல இருக்க சண்டை எப்பம்மா முடியும்...?

ஜெக்கம்மா : ஹ்ம்ம்ம்...டேய் சிஷ்யா....கேட்டான் பாருடா கேள்வியை....வலைஉலகமா...கொக்கான்னானாம்....இந்தக் கேள்விக்கு பதில் சொல்ற சக்தி என் கிட்ட இல்லைடா........ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா டா...ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா...ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா.....

கைதுறப்பு : சிரிப்புக்காக மட்டும் : )

Wednesday, October 7, 2009

உங்களுக்கெல்லாம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கிடையாதுங்க..!

"என்னங்க...உங்களைத்தான்...இன்னைக்கு கிருத்திகை, கடைக்கு போய் இலை, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் எல்லாம் வாங்கிட்டு வாங்க....அப்படியே இந்தப் பையனையும்(என் மகன் தீபு) கூடவே கூட்டிட்டி போய்ட்டு வாங்க" என தங்கமணி ஆர்டர் போட்டாங்க. ஆபீஸ்க்கு வேற ரொம்ப நேரமாச்சு..ஹ்ம்ம்..சரி என சொல்லி, எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்துட்டு, அவசர அவசரமா ஆபீஸ் கிளம்பினேன்.

தெரு முனையில், பயங்கர மக்கள் கூட்டம். ஒவ்வொருவர் கையிலும், ரேஷன் அட்டை, மற்றும் ஒரு விண்ணப்பத் தாள் இருந்தது. அதோடு, கருப்பு சிவப்பு கரை வேட்டித் தொண்டர்களும், திமுகவின் கட்சிக் கொடிகளும் ஒரு புறம் என ஏரியாவே கலை கட்டியிருந்தது. அடடா....இந்த மாதிரி, நாம கடைசியா பார்த்தது வெள்ள நிவாரண நிதி கொடுத்த போதும், தேர்தலுக்கு முந்தைய நாள் பைசா கொடுத்த போது தானே. இப்போ என்னவா இருக்கும்னு நினைச்சிட்டே இருந்தேன்.


சரி, திமுக நிர்வாகியிடம் கேப்போம். என்ன எல்லாரும் ரேஷன் கார்டுடன் நிக்குறாங்கன்னு கேட்டேன்.


"கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவு செஞ்சிட்டு இருக்காங்க...அதாங்க" என்றார் திமுக கட்சி நிர்வாகி.


"என்ன திட்டம், அதுக்கு நான் என்ன செய்யணும்" நு கேட்டேன்.

"அதாவது, இதயம், கர்பப்பை, சிறுநீரகம் கோளாறுன்னால நடக்குற ஆபரேஷன் செலவு, கேன்ஸ்ர் போன்ற நோய் வந்துச்சுன்னா அதுக்கான ம்ருத்துவசிகிச்சைக்காக, எங்கள் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு, ரூ 1 லட்சம் ரூபாய் வரைக்கும் காப்பீடு தர்றாங்க...இது தான் உயிர் காக்கும், உயர்சிகிச்சைக்காக கலைஞரின் காப்பீட்டுத் திட்டம். நீங்க போய் உங்க ரேஷன் கார்டு எடுத்துட்டு வாங்க...அதுல இருக்க நபர்களை கூட்டிட்டு வாங்க....இங்க பதிவு செய்த பிறகு, அதோ அந்த பள்ளிக்கூடத்துல போய் ஒரு போட்டோ எடுத்துக்கோங்க...அவ்ளோ தான்....சீக்கிரம் போய் கூட்டிட்டு வாங்க சார்....", என்றார் அவர்.


தங்கமணிக்கு உடனே ஒரு போன். ஏன்மா, உடனே நீயும், பையனும் ரெடி ஆவுங்க....இன்சூரன்ஸ் திட்டத்துக்காக போட்டோ எடுக்கறாங்களாம். கொஞ்சம் போயிட்டு வந்துறுவோம் என்றேன். அவசர அவசரமா கிளம்பி வந்தோம். விண்ணப்பம் வாங்குற இடத்துலயும் சரி, போட்டோ எடுக்குற வரிசையிலும் சரி, மிக நீண்ட வரிசை. நம்ம தான் பயங்கரமா ப்ளான் போடுவோமே... "தங்கமணி, நீ அந்த ஸ்கூல்ல போய் போட்டோ எடுக்குற வரிசையில போய் நில்லு....நான் விண்ணப்பம் பதிவு பண்ணுற வரிசையில போய் நிக்குறேன்...கரெக்டா இருக்கும்" என்றேன்.


வெகுநேரக் காத்திருத்தலுக்கு பிறகு, நான் பதிவு செய்யும் முறை வந்தது. ரேஷன் கார்டை கொடுத்தேன். வெள்ளை கார்டு. அப்படியே ஒரு லுக் விட்டுட்டு, "என்ன வேலை செய்றீங்க", என்றார் அங்கிருந்து ஒரு பெண் அலுவலர்.

"சாப்ட்வேர்ல இருக்கேங்க", என்றேன்

"எவ்ளோ சம்பளம் வாங்குவீங்க...." என்றார் அலுவலர்.

என்ன சொல்றதுன்னு யோசிச்சிட்டே நின்னுட்டு இருந்தேன்..

"இங்க பாருங்க சார்...தங்களுடைய உடம்பை சரியா பாத்துக்கக் கூட வசதியில்லாத, ரொம்ப ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்றவங்க போன்றவர்களுக்கு அரசாங்கம் கொடுக்குற காப்பீட்டுத் திட்டம் தான் இது. உங்களுக்கு எல்லாம் நீங்க வேலை பாக்குற கம்பெனியிலேயே கொடுத்திருப்பாங்க....ஆனா இவங்களுக்கு அதெல்லாம் கிடையாதுங்களே.... வருட வருமானம் ரூ 72,000 த்துக்கும் கம்மியா இருக்கவங்களுக்குத் தான் இந்த திட்டம். உங்களுக்கு எல்லாம் இந்த திட்டம் இல்லைங்க..." என சொல்லி முடித்தார் அந்த அலுவலர்.


அட எல்லா விவரத்தையும் சொன்ன அந்த கரைவேட்டிக்காரர், இந்த மேட்டர சொல்லாம விட்டுட்டாரேன்னு நினைச்சேன்.


கைப்பேசி அலறியது, மறுமுனையில் தங்கமணி "ஏங்க....சீக்கிரம் வாங்க....அடுத்து நம்ம தான் போட்டோ எடுக்கணும்" என்றார். "இல்லைம்மா...நமக்கெல்லாம் கிடையாதாம்மா.." என்றேன். "இது முதலிலேயே தெரியாதா? உங்களை எல்லாம் என்னா தான் சொல்றதுன்னே தெரியல" என்று புலம்பல்களை கேட்டுக் கொண்டே கிளம்பினேன்.


இதுல என்ன மேட்டர்னா. ஒபாமாவின் ஹெல்த் கேர் பில் க்கு இன்னும் முழு ஒப்புதலே கிடைக்காத நிலையில், நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு அருமையான திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்பது சந்தோஷத்தைத் தருகிறது.


என்ன தான் கும்பல் கூடி பதிவுகளில் கலைஞரை விமர்சித்தாலும், மக்களின் வாழ்வில், எதிர்பாராத விதமான,தவிர்க்க முடியாத செலவான மருத்துவச் செலவிற்கு காப்பீடு வழங்கும் கலைஞர் அரசுக்கு நிச்சயம் ஒரு Very Good சொல்லியே ஆக வேண்டும்.

Saturday, October 3, 2009

பெண்களின் சுகமான திருமண வாழ்க்கைக்கு சில யோசனைகள் !

திருமண வாழ்க்கை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, ஒவ்வொரு எதிர்ப்பார்ப்பு இருப்பது சகஜம். ஆனால், திருமணம் முடிஞ்ச ஒன்றிரண்டு மாதங்களிலேயே, "அவர் நம்ம நினைச்ச மாதிரி இல்லயே..." என்று நினைக்கத் தோன்றுவது மிக இயல்பு. இது ரொம்ப பொதுவான மேட்டர். இதுல காதல் திருமணங்களும் விதி விலக்கல்ல. காதலில், காதலர்கள் நல்ல குணங்களை மட்டுமே வெளிப்படுத்துவர், மற்றவரை கவருவதற்காக. ஆனால் கல்யாணத்திற்கு பிறகு உண்மைக் குணம் வெளியில் வரும். அந்த உண்மைக் குணம், பத்து வருஷ உண்மைக் காதலிலும் வெளிவந்திருக்காது. என்னைப் பொருத்தவரை ஒருவரை ஒருவர் மனதார புரிந்து கொண்டு தான் காதலிக்கிறோம் என்பதே ஒரு பொய்.

கொஞ்சம் விட்டுக் கொடுத்து, கொஞ்சம் புரிந்து கொண்டு நடந்தால், இவை எல்லாவற்றையும் தகர்த்து, நல்ல அமைதியான, சுகமான திருமண வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இந்த காலத்து இந்தியப் பெண்களுக்கு, ஏதோ நமக்கு தெரிஞ்ச யோசனைகள் இங்கே !

1. கல்யாணம் முடிந்து புகுந்த வீடு போகும் போது, புது இடம், எல்லாமே புது உறவுகள். கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கும். சாதாரணமா அன்பா பேசுறாங்களா, திட்றாங்களா, கிண்டல் பண்றாங்களான்னு புரியவே கொஞ்ச நாள் ஆகும். நிலைமை இப்படி இருக்க, நீங்க அவங்கள நல்லா புரிஞ்சுக்குற வரைக்கும், அனைவரிடமும் சிரித்த முகத்துடன்,கலகலன்னு,அன்பா பேசுவது தான் முதல் படி. இதை பார்த்ததும், உங்க ஆளு உச்சி குளிர்ந்து, அன்பு மழையைப் பொழிவார்.

புகுந்த வீடு செல்வதும், முதல் நாள் கல்லூரிக்கும் செல்வதும் கிட்ட தட்ட ஒரே மாதிரி தான். சீனியர்சின் ரேக்கிங்க் இருக்கும், கிண்டல் இருக்கும், நான் தான் பெரிய ஆள் ந்னு நிறைய பேரு காமிச்சிக்க முயற்சி செய்வாங்க. எல்லார் கிட்டயும் சரிங்க சார், செய்றேன் சார்ன்னு சொல்றதில்லை? அதே மாதிரி. ஆனா போகப் போக, அப்படி ரேக்கிங்க் செய்தவர்களே நமக்கு உதவும் சிறந்த நண்பர்களாக மாறுவர். அதே போலத் தான் புகுந்த வீடும்.

இல்லை. அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி, புகுந்த வீட்டில் கால் எடுத்து வச்ச உடனே, ஒரு கை பாத்துடுவோம்னு களத்தில் இறங்குவது என்பது...

கிரிக்கெட்டில், Opening Batsman, அவர் முதல் முறையாக விளையாடும் கிரவுண்டில், பிட்ச் ரிப்போர்ட் கூட பாக்காம, Helmet,Guard என எந்த கவசமும் அணியாமல், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே, Brett Leeயின் முதல் பந்தை சிக்சர் அடிக்க முய்ற்சி செய்ற மாதிரி, ரொம்ப ஆபத்தா தான் முடியும்..

2. கணவர் செய்கிற, ஒண்ணுத்துக்கும் உதவாத வேலையா இருந்தாலும், அப்ப, அப்ப சின்ன சின்ன பாராட்டுதல்கள் (appreciation) சொல்றது நிறைய சமயங்களில் நல்லா வொர்க் அவுட் ஆகும். இதுல ஒண்ணும் இமேஜ் டேமேஜ் ஆகப் போறதில்லையே : )

பொதுவாகவே, பெண்களுக்கு எப்படி அழகையும் வயதையும் புகழ்வது பிடிக்குமோ, அதே போல ஆண்களுக்கு அவர் செய்யும் வேலைகளை பாராட்டுவதைப் பெரிதும் ரசிப்பர்.

உதாரணத்துக்கு, என்னங்க, நேத்து நீங்க வாங்கிட்டு வந்த தக்காளி அவ்ளோ சுப்பரா இருந்துச்சுங்க...எங்க வாங்கிட்டு வந்தீங்க..... அப்படின்னு சொல்லலாம்.

இதுக்கு பெங்களூர் தக்காளி எப்படி இருக்கும், நாட்டுத் தக்காளி எப்படி இருக்கும்னே தெரியாது...அதுமட்டுமல்ல, இதை எப்படியும் அவர் பொறுக்கி போட்டு வாங்கி வந்திருக்கமாட்டார், கடைக்காரரே எடுத்துக் கொடுத்திருப்பார் என்று நன்றாக தெரிந்தாலும், இப்படி சொல்றதால, அடுத்த முறை கடைக்கு போகச் சொன்னா சந்தோஷமா ஓடி ஓடி போவார் பாருங்க : )

3. இரு வீட்டாரிடமும் ஒரே மாதிரியான மரியாதையும்,அன்பையும் வெளிப்படுத்துறது ரொம்ப முக்கியம். இதை செஞ்சாலே பல பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம்.

மனைவி :ஏங்க, இன்னைக்கு மதியம், எங்க பெரியப்பா பையன் வந்திருந்தாருங்க... ஆஸ்திரேலியாவில் இருந்து ஹாரி பாட்டர் டிவிடி வாங்கிட்டு வந்தாருங்க...
கணவன் :அப்படியா...சரி வேற யாரு வந்தாங்க...
மனைவி : ஹ்ம்ம்...வேற யாரு...உங்க அக்கா தான்...சரவணா ஸ்டோர்ஸ்ல இருந்து ஒரு ஓட்டை சோனி டிவிடி ப்ளேயர் வாங்கிட்டு வந்தாங்க...

இந்த மாதிரி விஷயங்கள் நம்ம ஆளை ரொம்ப கடுப்பேத்துற மேட்டர். நம்ம ஆளு,அப்ப, அமைதியா தலையை ஆட்டிப்பார். ஆனா, இன்னொரு சான்ஸ் வரும் பாருங்க...

மனைவி : ஏங்க இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்குங்க...?
கணவன் : உனக்கு ரொம்ப நல்லா இருக்கு மா...
மனைவி : எங்க அம்மா எடுத்து கொடுத்ததுங்க...
கணவன் : நெனச்சேன்...ரெங்கநாதன் தெரு பிளாட்பார்ம்ல விற்கிற சுரிதார் பிட்டை, அந்த தெரு சந்துல இருக்க டைலர் கிட்ட கொடுத்து ஒரு மணி நேரத்துல தச்சு வாங்கிட்டு வந்த மாதிரியே இருந்தப்பவே நினைச்சேன்...

இப்படித் தான் நம்மாளு கிட்ட இருந்து பதில் வரும். இதை எல்லாம், இருவீட்டாரிடமும ஒரே மாதிரி நடந்துகிட்டா வராது. உள்ளுக்குள்ள யாரு வீட்டுக்கு வேணும்னா சப்போர்ட் பண்ணிக்கோங்க...வெளியில எஃஸ்போஸ் பண்ணாதீங்க...

4. நம்மாளு அலுவலகத்திலிருந்து எப்படி வர்றார்னு, அவருடைய Moodஐ புரிஞ்சுக்கோங்க. முகம் லைட்டா நம்ம மூஞ்சூர் மாதிரி இருந்துச்சுன்னா...அல்ர்ட் ஆயிடுங்க. மாமா வொர்க் டென்ஷன்ல இருக்கார். மெதுவா விசாரிச்சுப் பாருங்க. பெரிய ரெஸ்பான்ஸ் இல்லைன்னா அவரை அப்படியே விட்டுறுங்க. அரை மணி நேரத்துல தானா நார்மல் நிலைமைக்கு திரும்பி வந்துருவார். நம்மல கண்டுக்கவே இல்லைன்னு, ஒரு மூளைல மூஞ்சைச் தூக்கிக் கொண்டு உட்கார்ந்து, இன்னொரு மூஞ்சூராக மாறுவதை தவிர்க்கவும் : ) .

பொதுவாகவே பிரச்சினைன்னு வந்தா, பெண்களுக்கு அதைப் பற்றி பேசுவதில் தான் திருப்தி இருக்கும். ஆனால், ஆண்களுக்கு அந்தப் பிரச்சினைகளை யாரிடமும் சொல்லாமல் தானே சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பிரச்சினையில் இருந்து வெளிவர தன்னை ஒரு குகையில் தனியாக விட்டுவிடுவதையே ஆண்கள் விரும்புவர்.(Men are from Mars, Women are From Venus - John Gray என்கிற புத்தகத்திலிருந்து சுட்ட கருத்து.

5. திருமண வாழ்க்கையில சின்ன சின்ன சண்டை வருவது ரொம்ப சாதாரணம். அந்தச் சண்டையை யார் ஆரம்பித்தாலும், அதில் உணர்ச்சிவசப்பட்டு, வாதத்தை வளர்த்து பெரும் சண்டையாக மாற்றி விடுவது பெரும்பாலும் பெண்கள் தான். அதனால, காதலன் சங்கர் ஸ்டையில்ல, கோபமோ சோகமோ துக்கமோ ஒரு 10 நிமிஷம் தள்ளி போடுங்க மேடம். அப்புறம் 15 ஆவது நிமிடத்துல சண்டை ஆட்டோமேட்டிக்கா போயிடும். இன்னும் கொஞ்சம் டெக்னிக்கலா ஹேண்டில் பண்ணா, ஊடலாகவே மாறிடும் வாய்ப்புகள் அதிகம்.
மனைவி : உன்னைப் போல் ஒருவன் ரொம்ப நல்ல படம்.
கணவன் : யார் சொன்னது அது ஒரு மொக்கை படம்.
மனைவி : கமல், எனக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சு வேணும்னே சொல்றீங்களா?
கணவன் : கமல், அதுல ஒரு பாசிச கருத்தை சொல்லி இருக்கார்...அது மோசமான படம்...
மனைவி: இதையே தான் கொஞ்சம் வேற விதமா இந்தியன்ல சொல்லி இருக்காங்க, அப்புறம் அன்னியன்ல சொல்லி இருக்காங்க...அப்போ எல்லாம் , பூச்சி போறது கூட தெரியாம,ஆ ன்னு வாயை திறந்துட்டுப் பார்த்தீங்க...ஹீரோயின் இடுப்பை காட்டிட்டு ஆட்டம் போடலைன்னா உங்களுக்கெல்லாம் எந்தப் படமும் பிடிக்காதே....

ஸ்டாப்.....10 நிமிஷம் பிரேக் கொடுங்க...(Have a Kit kat..)

மனைவி : சரி, அதை விடுங்க....வாங்க நம்ம கோலங்கள் சீரியல் பார்க்கலாம். அதுல தோழரை, தில்லா அடித்துக் கொண்டிருக்கிறார்..
கணவன் : அடடே...ஆமா..மா...இந்த சமயத்துல அந்த தொல்காப்பியன் எங்க போய் தொலைஞ்சான்...
: )

6. SEX.
சாதாரணமாவே, நம்மாளு ஒரு கல்லுளி மங்கன் மாதிரி. அன்பு, பாசம், காதல் எல்லாம் டின் டின்னா டப்பால இருந்தும்,அதை வெளிப்படுத்தவே மாட்டார். ஆனா, இந்த சமயத்துல, காதல் வசனங்களை அள்ளி வீசுவார். உடல்கள் இணைவது மட்டுமல்ல, அந்த சமயத்தில் மனங்களும் இணையும் அதுவே தாம்பத்யம். கணவன் மனைவியரிடம் தோன்றும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் பாம்பன் பாலமாக இருப்பது இந்த மேட்டர் தான்.
(டேய்...டேய்...போதும்டா...நிறுத்து...)

7. அன்பு. இந்த விஷயத்தில் பெண்களை அடிச்சிக்க ஆள் இல்லை. அதனால இதுல எந்த யோசனையும் கிடையாது. நம்மாளு அன்பை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், அன்பை வெளிப்படியாக பெருவதில் பெரு மகிழ்ச்சி அடைவார். அதைக் கூட வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் : )

8. மருமகள், மாமியார் - சிறு சிறு சண்டைகள் வருவது இயல்பு. இதைப் பெரிதுபடுத்தி, நம்ம ஜெண்டில்மேன் கிட்ட போய் சொன்னீங்கன்னா, ஒரு ரெஸ்பான்சும் பண்ண மாட்டார். எவ்வளவோ ப்ரூவ் பண்ண நினைச்சாலும், அதை ஒப்புக் கொள்ளவே மாட்டார். அட நம்ம அம்மாவை வில்லியாக சித்தரிக்க முயற்சி செய்றாளே, என உங்களைத் தான் வில்லியாக நினைப்பார். ஏன்னா, எப்பேற்பட்ட, தில்லாலங்கடியா இருந்தாலும், இந்த விஷயத்துல பெரும்பாலான ஆண்கள் ஒரே மாதிரி தான். அப்படி ஒரு நினைப்பை வளர விட்டால், உங்கள் மேல் செலுத்தும் அன்பு அரை குறையான அன்பாகவே கருதப்படும். அதுமட்டுமல்ல, பெண் வீட்டாரிடம் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதும் இதில் இருக்கிறது.


இதுல மட்டும் சீரியசா இல்லைன்னா, நம்ம ஜெண்டில்மேன் WWF ல நடக்கும் குத்துச் சண்டை வீரர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொள்ளும் Referee வேலையையே, வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டி வரும். அன்பிற்கு நேரம் இருக்காது : )

இதெல்லாம் கொஞ்சம் adjust பண்ணி, ஒரு இரண்டு வருடம் பின்பற்றினால், அப்புறம் என்ன எல்லாமே சூப்பர் தான். ஜெண்டில்மேன் மட்டும் இல்ல, அந்த மொத்த குடும்பமே உங்களை மகாராணியா தூக்கி வைத்து கொண்டாடும். பிறகென்ன, கணவனும்,மனைவியும், டிவி விளம்பரத்தில் வரும் சன்ரைஸ் ஜோடி மாதிரி ஒருவொருவருக்கொருவர் அன்பாகவும்,சந்தோஷமாகவும் காபி குடிச்சே காலத்தை ஓட்டலாம் : )

கைதுறப்பு: நகைச்சுவைக்காக எழுதியவையே, யாரையும் புன்படுத்தும் நோக்கம் அல்ல.

Tuesday, September 29, 2009

குடி போதையில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?


குடிப்பதே தவறு : ) அதிலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது மகா மோசமான தவறு என்பதை சமீபத்தில் தான் புரிந்து கொண்டேன். இது உண்மையாக நடந்த சம்பவம்.

இரவு சுமார் 9:00 மணிக்கு, கைப்பேசி அலறியது. எடுத்து பேசினேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் அழுகுரல், "ஏன் பா, ரமேஷ்க்கு Accident ஆயிடுச்சு பா....அவன் போன காரை ஒரு லாரி மோதிடுச்சாம் பா...தலையில அடியாம், ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போயிட்டு இருக்காங்களாம்.....போலீஸ் கேஸ் அது இதுன்னு சொல்றாங்கப்பா...எங்களுக்கு ஒண்ணுமே புரியல கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர்றீயா பா..". இதோ உடனே வர்றேங்க...நீங்க பயப்படாதீங்க..தைரியமா இருங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன். விபத்து நடந்த இடம் சென்னையில் இருந்து 3 மணிநேரப் பயணம். நானும் எனது நண்பரும் காரில் புறப்பட்டோம்.

அதிகாலை சுமார் 1:30 மணிக்கு விபத்து நடந்த பகுதிக்கு வந்தடைந்தோம். புத்தம் புது கார். மூன்று நாட்களுக்கு முன்பு தான் ரமேஷ்,அந்த காரை எடுத்தார். நம்பர் இடப்பட்டிருந்தது, ஆனால் RC புத்தகம் வரவில்லை. காரின் வலது புறம் முற்றிலும் நொறுங்கி இருந்தது. லாரி இடித்த வேகத்தில், கார் கிட்டத் தட்ட 160 டிகிரி சுழன்று சாலையில் இருந்தது. அங்கு நடந்த சம்பங்களைப் பார்த்த போது, தவறு நம்ம ரமேஷ் மீது தான் என்பது தெளிவாக தெரிந்தது.

பிறகு, ரமேஷின் உடல்நிலை விசாரித்தோம். "தலையில் லேசாக அடி மற்றபடி ஒன்றுமில்லை. ஆனால்,Drink and Drive கேஸ் புக் பண்ணி, FIR போட்டாச்சாம். லாரி ஸ்டேஷன்ல இருக்காம். காரையும் tow பண்ணி ஸ்டேஷனுக்கு தான் கொண்டு போகணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க போய் கொஞ்சம் ஸ்டேஷன்ல பார்த்து பேசுறீங்களா...அவரை கைது பண்ணி ஜெயில்ல வச்சுடப் போறாங்க..கொஞ்சம் பார்த்துக்கோங்க..." என்றார் ரமேஷின் மனைவி.

ஓகே. சரியான ஆளு கிட்ட தான் கேட்டு இருக்கீங்க. நம்ம்லே இது வரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் ஏறினது கிடையாது. சட்டமும் தெரியாது. கிழிஞ்சது கிருஷணகிரின்னு நினைச்சுகிட்டேன். சரி, முதல்ல காரை ஸ்டஷ்னுக்கு எடுத்துட்டு போகணும். Tow செய்கிற வண்டியை வரவழைத்தோம். சுமார் ஒரு கிமீ தூரத்துல இருக்க ஸ்டேஷன்ல விட 3500 ரூ. அந்த நேரத்துல விலை பேச முடியல. ஆளும் கிடைக்கல. மெதுவா ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம். அங்க ஆம்புலன்சுக்கு 1500 ரூபாய்.

வேற ஏதோ பிரச்சினைகளில் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. பலரும் கை கால்களில் பேண்டேஜ்களுடன் போலீசாருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். மெதுவா உள்ளே போனோம்.

"என்னப்பா..என்னா" என்றார் அங்கிருந்த ஏட்டு.

"சார்...இந்த கார் Accident சம்பந்தமா..." என்று இழுத்தேன்.

"ஓஹோ...அந்த Drink and Drive கேசா? நீங்க யார்..என்ன பண்றீங்க.." என்றார்.

"அவரோட சொந்தக்காரர் சார்...சென்னையில கம்புயூட்டர்ல வேலை செய்றேன்.." என்றேன்.

"ஏன்யா...குடிங்க வேணாம்னு சொல்லல....குடிச்சுட்டு எதுக்குய்யா வண்டியை ஓட்டுறீங்க...லாரிக்காரன் பிரேக் பிடிச்சி இருக்கார்....அவன் தான்யா மப்புல வந்து இடிச்சு இருக்கான்...சொல்லுங்க...என்ன பண்ணனும்.." என்றார்.

"சார்..எப்படியாச்சும் கேஸ் போடாம விட்டுற்ங்க சார்...லாரிக்காரரோட சமாதானம் பேசிக்கலாம்" என்றேன்.

"ஆமாம்யா...இப்போ சொல்லுங்க இதை....அப்பவே சொல்லி இருந்தா பேசி முடிச்சு இருக்கலாம்..யாருமே சொல்லலியே...சரக்குல இருந்த பார்ட்டி கூட சொல்லலியே...இப்போ FIR எல்லாம் ரிஜிஸ்டர் பண்ணி ஆச்சு...அது முடியாது...கேஸ் போட்டா தான்யா வண்டிக்கு இன்சுயூரன்ஸ் கொடுப்பான்...உங்களுக்கு நல்லது அது தான்" என்றார்.

(எம்டன் மகன்ல வடிவேலு சொல்ற மாதிரி...முன்ன பின்ன செத்தாத் தான் சுடுகாடு தெரியும்னு சொல்லுவாங்க...சரியாப் போச்சே...அப்பா...நீ எங்க இருக்க அப்பா...)

"சார்...Drink & Driveனு கேஸ் போடாம விபத்துன்னு மாத்திடுங்களேன்" என்றேன்."எல்லாமே ரொம்ப லேட்டாவே சொல்றீங்களே...படிச்ச பசங்க மாதிரி இருக்கீங்க...இதை முதல்லேயே சொல்லி இருந்தீங்கன்னா...அவரை GHக்கு கொண்டு போகாம தனியார் ம்ருத்துவமனைக்கு கொண்டு போய் இருப்போம். இப்போ டாக்டர் ரிபோர்ட்ல , ரமேஷ் குடிச்சுட்டு தான் வண்டி ஓட்டினார்னு எழுதிட்டாரே..இனிமே Hit & Runனு மாற்றம் செய்ய முடியாது " என்றார்.

"சரிங்க சார்...இப்போ என்ன தான் வழி...நாங்க என்ன பண்ணனும்... அவ்வளவா...இதை பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது சார்...நீங்களே சொல்லுங்களேன்..." என்றேன்.

"நாளைக்கு ரமேஷை எல்லா ஒரிஜினல் டாகுமெண்டையும் எடுத்துட்டு வரச் சொல்லுங்கள்,கைது செஞ்சி, ஸ்டேஷன் பெயிலில் உடனே விட்டுறுவோம். எப்பொழுது ஆஜராகச் சொல்றோமோ...அப்போ வந்து கோர்ட்ல 750 ரூ ஃபைன் கட்டிருங்க..அவ்ளோதான்...காரைப் பொறுத்த வரை, ஆர் டி ஒ க்ளியரன்ஸ் கொடுக்கணும். ஆர் டி ஓ பொதுவா இங்க வரமாட்டாங்க....கொஞ்சம் கவனிச்சீங்கன்னா...இங்க வருவாங்க...அவங்க க்ளியரன்ஸ் கொடுத்த உடனே, எங்க கிட்ட FIR காபி வாங்கிட்டு இன்சுயூரன்ஸ் க்ளைம் க்கு போங்க....அதுக்கு முன்னாடி, இன்சுயூரன்ஸ் கம்பெனிக்காரங்கள வந்து வண்டியை ஒரு போட்டோ எடுத்துக்க சொல்லுங்க...அவ்ளோதான்..." என்றார்.

(ஆஹா....இப்பவே கண்ண கட்டுதே....டேய் ரமேஷ்....கம்முன்னு குவார்ட்டரை அடிச்சுட்டு குப்புற படுத்திருந்தா...இவ்ளோ கஷ்டம் வந்திருக்காதே.....)

"அவ்ளோ தானா சார்...ரொம்ப தேங்க்ஸ் சார்..." என எழுந்தேன்.

"அப்புறம், அதோ இருக்கார் பாருங்க கான்ஸ்டபிள், அவர் கிட்ட போங்க...Formalities எல்லாம் சொல்லுவார்...முடிச்சிட்டு போங்க..." என்றார்.

(ஹ்ம்ம்....லஞ்சத்துக்குப் பேரு Formalities ங்களா ஐயா?...ஓகே... )

2500 ரூபாய் கொடுத்தேன்.

"சரிப்பா....எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்...நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க..." என சொல்லி அனுப்பி வைத்தார். மணி காலை 5:30. மறுநாள் ஆர்.டி.ஓ 2000 ரூபாய், காரை சர்வீஸ் செண்டர்க்கு விட 2500 ரூபாய் என காந்தி பறந்துகொண்டிருந்தார். மொத்தம் கிட்ட தட்ட 12000 ரூபாய் செலவு. பண விரயத்தை விடுங்க, ரமேஷ்க்கு ஒண்ணும் அடி படாம இருக்கே...அதுவே ரொம்ப நல்லதுன்னு நினைச்சுட்டு வந்துட்டேன்.

இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா...

1. இவ்வளவு கஷ்டங்களுக்கும், பண விரயத்துக்கும், அலைச்சலுக்கும் வொர்த்தா குடிபோதையில் வண்டி ஓட்டுவது.
(12000 ரூபாய், புது கார் நொறுங்கி கிடக்குது,லேசா அடி வேற பட்டு இருக்கு, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்..ஃபைன்...அப்பப்பா...நிச்சயமா...அவ்ளோ வொர்த் கிடையாது....)

2. நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா...நம்மை விட, நம் டாகுமெண்ட்ஸ் தான் பேசும். அதை பத்திரப் படுத்தி பாதுகாக்க வேண்டியது ரொம்ப அவசியம். ஒரிஜினல் டாகுமெண்ட் இல்லைன்னா....பல செக்ஷன்ல கேஸ் போட்றுவாங்க. பெரிய வெயிட் கையா இருந்தா சமாளிக்கலாம்...நம்மல மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்.

(தங்கமணி, என் டிகிரி சர்டிபிகேட் எந்த பரணை மேல இருக்கு...கொஞ்சம் தேடிக் கொடுக்குறீயா...)

3. சரக்கு அடிச்சீங்கன்னா...வண்டி எடுக்காதீங்கோ.....ஏன்னா, நம்மாளுடைய Split Personality, மது உள்ள போன பிறகு தான் தெரியவரும்.

(வடிவேலு பாணியில், ஆமா....அது வேற வாயி....இது நார்ற வாயி...)

4. அதெல்லாம் இருக்கட்டும், ரமேஷ் வீட்டில் குடிக்க முடியாததால் தானே வெளியில் போய் குடித்துவிட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வீட்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தால், இவை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாமல்லவா...?

(அட நன்னாரிப் பயலே இதெல்லாம் ஒரு வாதமா? )

இவ்வளவும் நடந்த பிறகு என்னுடன் வந்த நண்பன்..."டேய் ரமேஷ், இவ்ளோ பிரச்சினையை இவன் நல்லா சமாளிச்சிட்டான் டா...ஊருக்கு வந்த உடனே, தி.நகர் அருணா பார்ல ஒரு பார்ட்டி வச்சிரு மச்சான்..."

Friday, September 18, 2009

பிரபலங்களின் வேண்டுதல்கள் !


பொதுவாகவே கோவிலுக்கு போயிட்டு வரும்போது மனசு ரொம்ப நிம்மதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். இதுக்கு ஒரு முக்கிய காரணம், நம்ம மனசுல இருக்குறது அப்படியே இன்னொருத்தர் கிட்ட சொன்ன திருப்தி கிடைக்குறது தான் இந்த நிம்மதிக்கு முக்கிய காரணமாக தெரியுது.

சரி. இந்த மாதிரி நம்முடைய பிரபலங்கள் இப்ப இருக்க நிலைமையில தங்கள் மனசுல இருக்குறத கடவுள் கிட்ட சொல்ற மாதிரி இருந்தா...என்ன சொல்லுவாங்க...என்ன கேப்பாங்கன்னு ஒரு கற்பனை தான், சீரியசா எடுத்துக்காதீங்க : )

சோனியா காந்தி : கடவுள்ஜி, எப்படியாவது என் மகன் ராகுலை பிரதமர் ஆக்கிடுங்கஜி. இப்போ, லுதியானாவிலிருந்து டில்லிக்கு ரயிலில் அனுப்பி வச்சது போல, தில்லியிலிருந்து திருப்பதிக்கு நடை பயணம் அனுப்பி, மொட்டை அடிச்சு காது குத்துறேன் பெருமாள் ஜி...!


கருணாநிதி : என் சொத்தினும் மேலாக நான் மதிப்பு கொடுக்கும் தெருப்பிள்ளையாரே, என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும், கழகம் வெல்வதற்கு தேவையான பணத்தை மத்திய அமைச்சர்கள் எப்படியாவது பெற்றுத் தர வழி வகை செய் ! அடுத்த முறையும் தமிழக மக்கள் காசு வாங்கிக் கொண்டு எங்களுக்கே ஓட்டளிக்க ஆவன செய் பிள்ளையாரே ! பணம் மூன்றேழுத்து, சொத்து மூன்றெழுத்து, பதவி மூன்றெழுத்து, கொள்ளை மூன்றெழுத்து, அதனால் நாங்கள் அனுபவிக்கும் சுகம் மூன்றெழுத்து, உனக்கு அளிக்கப் போகும் நன்றி யும் முன்றெழுத்து!

(கடவுள் : ஈழம் மூன்றெழுத்து,வன்னி மூன்றெழுத்து,முகாம் மூன்றெழுத்து, நினைவிருக்கிறதா கலைஞரே!)


ஜெயலலிதா :
என்னுடைய பிரதமர் ஆசையை கூட விட்டுடுறேன்....ஆனா, எப்படியாவது இந்த மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சியை டிஸ்மிஸ் செஞ்சுடு.

(கடவுள்: என்னம்மா....என்னிடமும் மைனாரிட்டி திமுக அரசு அடைமொழி தேவையாம்மா?)

விஜய் : என்னங்க ஆண்டவரே நீங்க.... சும்மா ஹீரோயின்களோட ஜாலியா ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்... என்னை ஏன் இப்படி அரசியல் அது இதுன்னு கொடுமை பண்றீங்க.......இனிமேலாவது எங்கப்பாவுக்கு ஒரு ஐடியாவும் வராம நீங்க தான் பாத்துக்கணும் ! இதை மட்டும் நீங்க கரெக்டா செஞ்சிங்கன்னா...அடுத்த படத்துல Intro songla உங்க படத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போடுற மாதிரி சீன் வைக்கச் சொல்றேன்...!


கி.வீரமணி : முருகா நான் திருந்திட்டேன் முருகா...கடவுள் இல்லைன்னு கூட்டத்துல பேசுறத பார்த்து தப்பா நினைச்சுக்காத முருகா....அதெல்லாம் சும்ம லுலுலாயிக்கு....திராவிட கழகத்தின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன, ஆனால் இயக்கத்தில் இருக்கும் தொண்டர்கள் குறைந்து கொண்டே போகிறார்களே.....கல்வியறிவு படைத்தவரிடம் நம் கொள்கையை விற்று காசாக்க முடியவில்லையே....ஆகையால், சாமானிய மக்களுக்கு கல்வி அறிவை கொஞ்சம் பொறுமையாகவே கொடு, பதவியையும் பணத்தையும் மட்டும் எங்களுக்கு உடனே அள்ளிக் கொடு !

(கடவுள்: உங்களுக்கு எல்லாம் இதே வேலையா போச்சு. ரத்தம் சூடா இருக்க வரைக்கும் ஆட வேண்டியது, அதுக்கு அப்புறம் ஆன்மீகம் பக்கம் ஓடி வர வேண்டியது. சரி வாங்க...வந்து பஞ்சாமிர்தம் சாப்பிடுங்க..! )

விஜய டி.ஆர் : வேலாயுதா, லட்சிய திமுக ஆரம்பிச்சு கிட்ட தட்ட 5 வருஷம் ஆகப் போகுது, ஆனா, போன தேர்தல்ல என் பையன் கூட என் கட்சிக்கு ஓட்டு போடல. என் குடும்பத்துல இருக்கவங்க மட்டுமாவது எனக்கு ஓட்டு போட வச்சுடு. டண்டனக்கா...டனக்கனக்கா....

அழகிரி : எப்படியோ தேர்தலில் தோற்ற பி.சிதம்பரத்தை, அவங்கள மிரட்டி, இவங்கள மிரட்டி ரிசல்டையே மாத்திட்டேன். இதுக்கெல்லாம் உன்னோட தயவு தான் காரணம். இனிமேல் எந்த கேஸ்லியும் சிபிஐ என் பக்கம் வராம பண்ணதுக்கு ரொம்ப நன்றிப்பா ஆண்டவா...கடைசியா ஒண்ணே ஒண்ணு, எப்படியாச்சும் மதுரையை அமெரிக்க தலைநகரமா மாத்திடு பா...வெள்ளை மாளிகையை மாட்டுத் தாவணி பஸ்டாண்ட் பக்கத்துல கொண்டு வந்துடு ஆண்டவா...

மன்மோகன் சிங் : My God, People of India, Love you . Ho, GOD, Inflation, GDP, Consumer Price Index, Fiscal deficit, 123 Agreement..........( கடவுள்: ஹலோ மன்மோகன், ஜனங்களுக்கு புரியுற மாதிரி பேசலைன்னா கூட பரவாயில்லை....எனக்கு புரியுற மாதிரியாவது பேசுறீங்களா?)

Monday, August 31, 2009

ஆலோசனை வழங்க போறீங்களா..ஒரு நிமிஷங்க..!


பொதுவாகவே, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்பது நமக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும். தெரியாத்தனமா ஒருத்தர் வந்து நம்ம கிட்ட ஆலோசனை கேட்டார்னா...அவ்ளோ தான், அவரை ஒரு அரை மணி நேரம் மொக்கை போட்டு அனுப்புவோம். அவருக்கு தகுந்த, சரியான ஆலோசனை கிடைத்ததா இல்லையா என்பது மறுபடியும் அவர் நம்மிடம் ஆலோசனை கேட்டு வருகிறாரா, அல்லது நம்மைப் பார்த்த உடனே ஓடுகிறாரா என்பதை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டும்.

அறிவுரை என்பது சான்றோர், எளியவனிடம் வழங்குவது. ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையில் கொடுப்பது தான் அறிவுரை. இன்றைய கால கட்டத்தில் அறிவுரை(Advice) வழங்குவது என்பது, ஆப்பைத் தேடி நாமே உட்காருவதற்கு சமம். ஆனால், ஆலோசனை வழங்கவோ, கேட்கவோ இவை போன்ற பாகுபாடுகள் இல்லை. அதுமட்டுமல்லாமல், அதனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் மனநிலையில் உள்ளது. ஆகையால்,எதைச் சொல்வதானாலும் அதனை ஒரு ஆலோசனையாக(suggestion) சொல்வதே சிறந்தது..

அப்படி ரொம்ப சின்சியரா, நம்ம கிட்ட வந்து ஒருத்தர் ஆலோசனை கேட்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படி ஆலோசனை வழங்கும் போது நாம் கடைபிடிக்கவேண்டிய அத்தியவாசியமான அணுகுமுறைகளை இங்கு பார்ப்போம். அனைவருக்கும் தெரிந்தது விஷயங்கள் தான் என்றாலும் ஒரு சின்ன ரிமைண்டர்.

1. மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முதல் தகுதியே, நாம் , அவருடைய நிலையில் இருந்து பிரச்சினையை யோசிக்க வேண்டும். வருகிறவரின் மனநிலையை நன்கு உணர்ந்தால் தான், அவருக்கு சரியான முறையில் ஆலோசனைகளை எடுத்துச் சொல்ல முடியும்.
ரொம்ப கஷ்டத்தோட ஒருத்தர் அவருடைய வேதனையை நம்மிடத்தில் சொல்லி வழி கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்,

2.அவர் சொல்லுகின்ற விஷயத்தைப் பற்றி தெரிந்தால் மட்டுமே ஆலோசனை வழங்கலாம். தெரியவில்லை என்றால் இதைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது என்று பளிச்சென்று கூறிவிடுவது நல்லது. "அதெப்படி, என் கிட்ட ஒருத்தர் வந்து கேக்குறார்...தெரிலன்னு சொன்னா நல்லாவா இருக்கும்.." என்று நினைக்கக் கூடாது. தவறான ஆலோசனை சொல்வதை விட, ஆலோசனை சொல்லாமல் இருப்பதே மேல்!

3.நம்ம கிட்ட ஒருத்தர் வந்து கேக்குறார்னா....அவரை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும்.நாம் அதனை கவனித்துக் கொண்டு மட்டும் இருக்க வேண்டும், இடையில் குறுக்கிடக் கூடாது. நம்மில் பலர், அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, முந்திக்கொண்டு சொல்யூஷன் சொல்லிடுவாங்க. என்ன சொல்ல வர்றார்னே தெரியாம, கொடுக்குற ஆலோசனை நிச்சயம் utter flop தான்.
ஆசிரியர் கேள்வியை முடிப்பதற்குள், மாணவர்கள் பதிலளித்தல், பள்ளியில் வேண்டுமானால் நமது திறமையை நிரூபிக்கலாம், ஆனால் இங்க அது ஒத்து வராதுங்க.

4.இன்னொரு முக்கியமான மேட்டர். எவ்வளவோ குழப்பத்துக்கு நடுவில், நம்மையும் ஒரு ஆளாக மதித்து, ஒருவர் ஆலோசனை கேட்கிறார். அப்படி வருகிறவரிடம், இது தான்யா சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து, நம்முடைய பொது அறிவையோ, மொழித் திறமையையோ வெளிப்படுத்தி பந்தா காண்பிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி....நெகடிவ் எஃபெக்ட் தாங்க.

5. தவறான விஷயங்களுக்கு ஆலோசனை அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். உலகத்தில் எந்த ஒரு மனிதனும், தவறு செய்வதற்கு முன்னால் எவரிடமாவது நேர்முகமாக, மறைமுகமாகவோ ஆலோசனை பெற்றவர்கள் தான். அதனால, தவறான விஷயங்களுக்கு, இது தவறு என்று புரிய வைத்து, ஸ்ட்ரிக்ட் நோ சொல்லிட வேண்டும்.

6. ஆலோசனை என்கின்ற பெயரில் நம்முடைய கருத்தை மற்றவரிடம் திணிப்பது ரொம்ப அநாகரிகமான மேட்டர். அதனால, இது தான் பிரச்சினையா, இதுக்கு இத்தனை வழிகள் இருக்கு....இந்த வழியில் போன இது நல்லது இது கெட்டது..என பல வழிகளைச் சொல்லி, அதில் அவருக்கு பொருத்தமானவற்றை அவர் தேர்ந்தெடுக்க வழி வகை செய்ய வேண்டும்.

7. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், நம்மிடம் ஆலோசனை கேட்பவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது தான். ஏதோ பிரச்சினைன்னு நம்ம கிட்ட வந்து, அவர்கள் மனதில் உள்ளவற்றை அப்படியே வெளியில் சொல்லும் போதே, பாதி சரி ஆயிடுவாங்க. மனசுல இருக்குற பாரமும் குறைஞ்சுடும். மேற்கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தி, நம்பிக்கை ஏற்படுத்துறதான், ஆலோசனை வழங்குவதன் முக்கிய நோக்கம்.


ஏதாவது முக்கியமான பாய்ன்ட் விடுபட்டிருந்தால்...மறுமொழிகளில் தங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது : )

Friday, August 28, 2009

தாத்தா...தப்புப் பண்ணிட்டேன் தாத்தா...!

தமிழ்நாட்டுல ஒரு ஆம்பளை கூட சரியான ஆண்மைத் தன்மையோட இல்லங்கறது தான் உண்மை. சின்ன வயசுலே இருந்தே அவன் தப்பான பழக்கத்துக்கு ஆளாயிடுறான். சராசரியா, ஒரு பையன், 14,15 வயசுல தப்பு பண்ண ஆரம்பிக்குறான்(என்ன தப்புன்னு எல்லாம் கேக்கக் கூடாது). அவன் பண்ற தப்புல ஒவ்வொரு முறையும் 40 சொட்டு ரத்தம் வீணா போகுது. இப்படி செஞ்சி செஞ்சி, அவன் கல்யாண வயசு வர்றதுக்குள்ள, நாடி நிரம்பெல்லாம் தளர்ந்து போய், எல்லா சக்தியையும் இழந்துட்டு நிக்குறான். அதுக்கு அப்புறம், தாத்தா தப்பு பண்ணிட்டேன் தாத்தா, அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் தாத்தான்னு என் கிட்ட ஓடி வர்றான்....அவனை எல்லாம் பார்த்தா எனக்கு பளார்னு அறையனும் போல இருக்கும்...இந்த நிலைமையில இருக்குற நீ கல்யாணம் பண்ணிக்கலாமா? வீணா கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய நாசம் பண்ணிடாத...உன்ன எல்லாம் என் பேரப்பசங்களா நினைச்சி தான், திரும்பி திரும்பி இதையே சொல்லிட்டு வர்றேன். உங்க அப்பா அம்மா கிட்ட சொல்ல கூச்சப்பட்டீன்னா....நீ மட்டும் தனியா வா...முதல்ல குணம் ஆக்கிட்டு, அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ...ஆசையா வர்ற பொண்ண ஏமாத்தாத....


ஐயா....இதெல்லாம் நான் சொல்லலிங்க....எந்த தமிழ்ச் சேனல் பக்கம் திருப்பினாலும், நம்ம தாத்தா : ) வந்து நம்மல பாடா படுத்துறார். அவர் பேர் சொல்லணும்னு அவசியமே இல்லை...அந்த அளவுக்கு அவர் பாப்புலரான தாத்தா. அவர் சொல்கிற வைத்தியம் உண்மையோ, பொய்யோ , ஆனா, இந்த மாதிரியான எசக்கு சக்கான மேட்டர்ல அப்பாவி பசங்கள பயமுறுத்தி, பணம் பறிக்கும் வேலை மட்டும் நடந்துகிட்டு தான் இருக்கு.


நிஜமாவே, அவர் பேசுறத எல்லாம் பார்த்தா, நல்லா இருக்குறவனுக்கு கூட ஒரு வித பயம் வந்துடும். ஏன்னா, அவர் சொல்ற அறிகுறிகள் பாத்தீங்கன்னா ரொம்ப பொதுவானவை. ஆங்கில மருத்துவத்தில், இதெல்லாம் நார்மல் தான், அனைவருக்கும் இவ்வாரெல்லாம் இருப்பது இயல்பு தான்னு சொன்னாலும், நம்ம தாத்தா விடுற உடான்சும், அவர் சொல்கிற விதமும், (ரொம்ப விறுவிறுப்பாக இருந்தாலும்), அனைவருக்கும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதிலும், இது போன்ற விஷயங்களில் பெரும்பாலும் நம்பி ஏமாறுகிறவர்கள் நன்கு படித்த நல்ல வேலையில் உள்ள இளைஞர்கள் தான்.

பொதுவாகவே, போர் யுக்தி முறைகளில் Psychological Warfare என்ற ஒரு வகை உண்டு. அதாவது எதிரியின் படைகளின் மன வலிமையையும், உற்சாகத்தையும் அழிப்பது. ஆப்கான் போர் தொடங்கிய போதே, அமெரிக்கா ஹெலிகாப்டரின் மூலமாக துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாம். அதில் "அமெரிக்க ராணுவம் பல முக்கிய இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் மற்ற இடங்களையும் பிடித்துவிடுவோம். பல முக்கிய தாலிபான் தலைவர்கள் அவ்ர்களாகவே எங்களிடம் வந்து சரண் அடைந்து வருகின்றனர். நீங்களும் சரண் அடைந்து விடுங்கள். இல்லையேல் எங்கள் போரின் உச்சத்தைப் பார்க்க நேரிடும்." என்பது போல எழுதி வினியோகித்தனர். இப்படி தான் ஒருத்தனை மனதளவுல பலவீனப் படுத்தி, பணத்தை பறிக்க நம்ம ஊர்ல பெரிய கூட்டமே தயாரா இருக்குங்க.

அதே மாதிரி தான் பல சித்த வைத்தியர்கள் இருக்காங்க. இவர் மட்டுமல்ல, இது மாதிரி யுனானின்னு சொல்லி ஏமாத்துறது, ஏன் லேகியம் கூட விக்குறாங்க டிவி மூலமா.

இதுல என்ன காமெடின்னா, தாத்தாவை அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் சரமாரியாக கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனா, நம்ம தாத்தா திடீர்னு "இதோ பாருப்பா, உனக்கும் தான் சொல்றேன், நீயும் என் பேரன் மாதிரி, நீ சின்ன வயசுல நிறைய தப்பு பண்ணி இருந்தா சொல்லிடு, எந்த பிரச்சினை இருந்தாலும் சரி பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ...வீணா ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணாத " அப்படின்னார். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு எப்படி ரியாக்ட் பண்றதுண்ணே தெரியாம வழிஞ்சது சிரிப்போ சிரிப்பு.

எந்தெந்த விஷயங்களை நாம் வெளிப்படையாக பேச கூச்சப்படுகிறோமோ, அதையே மூலதனமாக வைத்து, இவரைப் போல பல வைத்தியர்கள் தங்கள் கஜானாவை நிரப்பி வருகிறார்கள். பணம் மட்டும் விரயமானால் கூட பரவாயில்லை, மனதளவில் தாக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடியவைகளாக இருக்கிறது இவர்களது தந்திர பேச்சுக்கள்.

இதை எல்லாம் தடுக்கணும்னா, எந்த ஒரு விஷயமா இருந்தாலும், பெற்றோர்களிடத்தில் ஆலோசனை கேட்பது தான் மிகச் சிறந்த வழி. பெற்றோர்களும் பிள்ளைகளிடம் எல்லா விஷயங்களையும் மனம்விட்டு பேசத் தொடங்க வேண்டும். முன்பெல்லாம் உடல் சம்பந்தமான, செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை பொதுவாக வெளிப்படையாக பேசமாட்டார்கள். ஆகையால், அன்றைய பெற்றோர்கள், இவற்றை எடுத்தக் கூறவில்லை. ஆனா, இப்போ, தொழில்நுட்பம் வளர்ச்சியின் காரணமாக சகல விஷயங்களும் மிகவும் இளம்பருவத்திலேயே பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால, யாரோ ஒரு மூன்றாவது மனிதர் மூலமாக நம் பிள்ளைகளுக்கு இவைகளை தெரியப்படுத்துவதை விட, நாமே நல்ல விதத்தில் எடுத்துக் கூறுவது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். பிள்ளைகளும் தமக்கு உள்ள பிரச்சினைகளை கூச்சப்படாமல் வெளிப்படையாக பெற்றோர்களிடம் சொல்ல இது வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது !

டேய், இதைப் பற்றி எல்லாம் எப்படிடா பிள்ளைங்க கிட்ட பேச முடியும்னு நீங்க கேக்குறது புரியுது.....

Tuesday, August 25, 2009

டேடி.... உச்சா....உச்சா வருது !

போன வாரம், நான், என் மனைவி,என் பையன் தீபு(2 வயசு ஆகப் போகுது) மூணு பேரும் தி நகர்க்கு ஷாப்பிங்க் கிளம்பினோம். பல்சர எடுத்தேன். டேடி, Frontla, டேடி, Frontlaனு சொல்லி முன்னாடி வந்து உட்கார்ந்துகுட்டு...டுர்ர்...டுர்ர்...ந்னு acceleratora ஒரு சுழட்டு சுழட்டிட்டு கொடுத்தான்.இங்க பாரு மா, கையில பைசா இல்ல, அதனால ஏ டி எம் போயிட்டு, போகலாம்னு வண்டியை நிறுத்தினேன். நான், பணத்தை எடுத்துட்டு வந்துட்டேன். என் மனைவி, பக்க்துல இருக்க மெடிக்கல் ஷாப்ல, என் பையனுக்கு செர்லாக் வாங்க போய்ட்டா. சரின்னு, வண்டியில உட்கார்ந்தபடி வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

திடீர்னு ஒருத்தர் வந்தார். சின்ன பையன் தாங்க..ஒரு 16 வயசு இருக்கும். நெற்றியில விபூதி குங்குமம், தோளில் ஒரு ஜோல்னா பை மாட்டிட்டு இருந்தார்.

சார், நாங்க முருகன் கோவிலுக்கு நடைபயணம் போயிட்டு இருக்கோம், உங்க கையை காட்டுங்க, ஜோசியம் பார்த்து சொல்றேன்னு சொன்னார்.

இல்லை, ராஜா, நான் ஏற்கனவே ஜோசியம் பார்த்து இருக்கேன். வேணாம்பான்னு சொன்னேன். என்னாங்க சார், இத்தனை பேரு இருக்காங்க...அவங்க எல்லாரையும் விட்டுட்டு, உங்க கிட்ட மட்டும் வந்து கேக்குறேன்னா எப்படி...ஆண்டவன் என் மூலமா ஏதோ சொல்லி விட்டுறுக்காருங்க சார்...கொஞ்சம் கேட்டுப் பாருங்க..

அடடா...கடைக்குப் போன மனைவி இன்னும் வரலியே...எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா..முடியாது போல இருக்கேன்னு நினைச்சேன்.
இல்லை ராஜா, வேணாம்பான்னு சொன்னேன். சரிங்க சார், இதை மட்டும் ட்ரை பண்ணுங்க சார்...மனசுல ஏதாச்சும் தலையில் சூடுகிற போடுகிற ஒரு பூவை நினைச்சிக்கோங்க.

சரிப்பா நினைச்சுக்கிட்டேன். (இங்க தான் கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டேன்..)

நீங்க நினைச்ச, பூவை நான் சரியா சொல்லிட்டேன்னா....உங்களுக்கு நான் ஜோசியம் பாக்குறேன்னு சொன்னார் அந்த ஜோல்னா ஜோசியர்.
விட மாட்டாங்க போல இருக்கே....சரிப்பா...சொல்லு...

மல்லிப் பூ....சரியாங்க சார்..

அடங்கொக்கா மக்கா.....கரெக்டா சொல்லிட்டானே.....முருகா...இனிமே இந்தக் கைப்புள்ளையை நீ தான்யா காப்பாத்தணும்......ஆமாம் பா சரியா சொல்லிட்டே..

சரிங்க சார்...வண்டியை விட்டுட்டு கொஞ்சம் இப்படி வாங்க சார்னு கூப்பிட்டு, வழக்கமா சொல்ற கதைகள் ஓரிரு வரிகள் சொல்லிட்டு,உங்க பிடிச்ச தெய்வம் யாருங்க சார் நு கேட்டார்.

சிவபெருமான் பிடிக்கும் பா ந்னு சொன்னேன்.

பாக்கெட்ல இருந்து சிவன்-பார்வதி படத்தை எடுத்து அவர் கையில வச்சார். ஒரு நூறு ரூபாயை இந்தப் படத்துல வையுங்க...திருப்பி கொடுத்துடுறேன்னு சொன்னார். நூறு ரூபாய் இல்லை...ஐநூறு ரூபாயாத் தான் இருக்குன்னு வச்சேன். அந்த ரூபாய் நோட்டை எடுத்து ஏதோ எழுதிட்டு, கையில வச்சு இருந்த சாமி படத்துக்கு கீழ வச்சுட்டார்...

எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு...என்னப்பா ந்னு கேட்டேன்...
இருங்க சார்...வீட்ல வளர்க்கிற ,கோயிலில் இருக்கிற பறவை எதாவது ஒண்ணை நினைச்சுக்கோங்கன்னு சொன்னார். நினைச்சிக்கிட்டேன். என்ன நினைச்சீங்க..சொல்லுங்க...

காக்கா ந்னு சொன்னேன். சார், காக்காவையா வீட்டில வளர்ப்பாங்க...சரி மைனான்னு சொன்னேன். சார், மைனாவா கோயிலில் இருக்கும். சரி, புறா ந்னு சொன்னேன்.

சரிங்க சார். இப்போ நீங்க நினைச்ச புறாவையே இந்த ரூபாய் நோட்டுல நான் எழுதி இருந்தா...இந்த பணம் கோயில் அன்னதானத்துக்கு போயிடும்னு சொல்லிட்டு...அந்த ரூபாய் நோட்டை எடுத்து காட்டினார்...கரெக்டா புறான்னு எழுதி இருந்தது..

நமக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு...ஐநூறு ரூபாயா.....ராஜா...ஒரு நூறு ரூபாய் எடுத்துக்கோ...மிச்சம் கொடுத்துடு.....

தெய்வ குற்றம்,அது இதுன்னு சொல்லி இருநூறு ரூபாய் உருவிட்டார்...
சார், உங்க குடும்பத்துல ஒரு தீராத கஷ்டம் இருக்கு...அதை போக்கணுமா வேணாமா , சொல்லுங்க சார்.

கடைக்குப் போன என் மனைவி வந்துட்டாங்க. என் பையன் ஓடி வந்தான்....டேடி உச்சா....உச்சா வருது....

அப்பாடி இதோட தப்பிச்சடணும்டா சாமி....வேலை இருக்குப்பா..போதும்...கிளம்புறேன்...

சார்...கடைசியா ஒரு கேள்வி சார்....ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து வைங்களேன்...சார்...

ஐயா...போதும்யா....இருநூறு ரூபாயே ரொம்ப ரொம்ப ஓவர்......அப்படின்னு என் பையன் சொன்ன மேட்டரை கவனிக்க போய்ட்டேன்....

ஆனா, ஒண்ணுங்க....என் பையனுக்கு மட்டும் சரியான நேரத்துல உச்சா வரலைன்னா....ஆயிரம் ரூபாயை விட்டு இருப்பேங்க.....

"ஒரு சின்னப் பையன், 10 நிமிஷம் பேசி, இருநூறு ரூபாய் வாங்கிட்டான் பாருங்க...உங்கள எல்லாம்....." என்று மனைவியின் புலம்பல்களோடு, ஷாப்பிங்க் போயிட்டு வந்தோம்...

எப்படி எல்லாம் டெக்னிகல ஏமாத்துறாங்க பாருங்க.....

Tuesday, August 18, 2009

ஆம்பளைங்க ஒண்ணா தங்குறது தப்புங்களா?


சமோவான்னு ஒரு நாடு, ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்துல ஆறு மணி நேரம் பயணம். குட்டி குட்டி தீவுகள் எல்லாம் சேர்ந்தது தான் சமோவா. அதுல முக்கியமான தீவுகள் உபோலு மற்றும் சவாய். மக்கள் கொஞ்சம் அதிகமாக வாழும் தீவு உபோலு அதன் தலைநகரம் ஆபியா. அங்க தான் நம்மல ஒரு ப்ராஜெக்ட் விஷயமா அனுப்பி இருந்தாங்க. நண்பர் சரவணகுமாரும் என்னுடன் வந்திருந்தார்.

அருமையான ஊரு, எங்க பார்த்தாலும் பச்ச பசேல்னு இருக்கு. ரொம்ப மரியாதையான,அன்பான ஜனங்க, நம்ம ஊர் மாதிரியே. பழ வகைகள் எல்லாம் அங்கேயே விளைந்தாலும், உணவுப் பொருட்கள் எல்லாம் பெரும்பாலும் நியூசிலாந்தில் இருந்து தான் இறக்குமதி பண்றாங்க. நல்ல சுற்றூலாத் தளம் சமோவா. ஆனா, மலேசியா, சிங்கப்பூர் மாதிரி ஒரு Lively,ஆரவாரமான ஊர் இல்லை. கொஞ்சம் அமைதியான இடம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருக்கும் பெரியவர்கள் தான் சுற்றுலாவிற்கு பெரும்பாலும் வர்றாங்க. சூரியன் கடைசியாக பார்க்கிற நாடு சமோவா தான்னு சொல்றாங்க. கிட்ட தட்ட ஒரு நாள் time difference இருக்குங்க, இந்தியாவோட ஒப்பிடும் போது.Weekendல ஊரை சுற்றி காட்டினாங்க. இதோ இது தான் அந்த ஊர்ல இருக்க லால் மானோ பீச். Clear Water Beach ஐ பார்க்குறது நமக்கு இதுவே முதல் முறை, நல்லா ஒரு குளியலை போட்டுட்டு கிளம்பினோம். கிட்ட தட்ட ஒரு 6 மணி நேரத்துல, அந்த தீவை முழுவதுமாக சுற்றி வந்து விட்டோம். வழி நெடுக்க அடர்ந்த மரங்கள், தொடப்படாத இயற்கை என அப்படி ஒரு விருந்து நம் கண்களுக்கு.


அதே மாதிரி அடுத்த வார இறுதியில், மற்றொரு தீவான சவாய்க்கு போக பயண ஏற்பாடு செஞ்சாங்க. ஃபெர்ரி மூலமாகத் அந்த தீவுக்கு போக கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் பிடித்தது. நம்ம ஊர்ல கன்னியாகுமர்ல படகு சவாரி செஞ்சி இருந்தாலும், இவ்வளவு நேரம் கடலில் பயணித்தது கிடையாது. நல்ல அனுபவம்.

இரவு ஏழு மணி இருக்கும் ஒரு ரிசார்ட்க்கு வந்தோம். எனக்கும் சரவணனுக்கும் தனித் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான சாவியைக் கொடுத்தார்கள். சரின்னு, ரூம்க்கு வந்து பார்த்தோம். ரெண்டு மாடி கொண்ட ரூம். கீழ்த்தளத்தில் ஒரு ஹால், அதோடு இணைந்த சமையலரை, அதன் அருகில் குளியலரை. மேல்மாடியில் ஒரு டபுள் பெட், மற்றும், தனியாக ஒரு சிங்கிள் பெட் என பெரிதாக இருந்தது அந்த அறை. நம்ம தான் திருவெல்லிக்கேணி மேன்ஷன்ல எட்டுக்கு எட்டு ரூம்ல 4 பேரு தங்கினவங்க ஆச்சே...அதனால பெரிய லார்ட் லபக்தாஸ் மாதிரி, நம்ம ரெண்டு பேரும் இதே ரூம்லியே இருந்துக்கலாம் சரவணா, எதுக்கு வீணா Client காசை(170$) வீணாக்கனும், இன்னொரு ரூம் சாவியை கொடுத்துடலாம்னு போனோம். ஒரு ரூம் போதுங்க...நாங்க ஒண்ணாவே தங்கிக்கிறோம்னு சொன்னோம். அவ்ளோ தான், எல்லோராட பார்வையும் எங்க பக்கம் திரும்புச்சு...ரிசப்ஷனிஸ்ட் ஒரு மாதிரியா சிரிச்சாங்க..எங்க கூட வந்தவங்களும் ஒரு மாதிரியான நக்கலா பார்த்தாங்க.."உங்க ரெண்டு பேருல யாரு கம்பெனி இல்லாம படுக்க மாட்டீங்கன்னு" கேட்டாங்க. நாங்களும் அசடு வழிய...அப்படி எல்லாம் இல்லைங்க...ரூம் பெருசா இருக்கு..பேச்சுத் துணைக்கு ஆள் வேணும்..ஒரு இரவு தானே ஒண்ணாவே தங்கிக்கிறோம்னு சொன்னேன். ஒரு வழியா ரூம்க்கு வந்துட்டோம்.


ரூம் எதிரிலேயே கடற்கரை, அருமையான் காற்று என அம்சமா இருந்துச்சு. நல்லா தூங்கி எழுந்து அடுத்த நாள் காலை உணவுக்கு போனோம். வழக்கம் போல, தட்டை தூக்கிட்டு பிரட், கார்ன் ப்லேக்ஸ்,முட்டை, மஞ்சள் கலர்ல ஒரு ஜூஸ் எல்லாம் எடுத்துட்டு போய் சாப்பிட்டோம். அங்க ஒரு அம்மணி வந்து காபி வேணுமான்னு கேட்டுச்சு. வேணாங்கன்னு சொன்னோம்..ஒரு நிமிஷம் எங்களை ஒரு மாதிரியா பார்த்துட்டு..

"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு " கேட்டுட்டு நக்கலா சிரிச்சிட்டு போகுது. அட நன்னாரிப் பயலுகளா....ஒண்ணுமே இல்லாத விஷயத்தை, இப்படி கிரி படத்துல வர்ற அக்கா & கணபதி ஐயர் மேட்டர் ரேஜ்சுக்கு, ஊரே நம்மல கிண்டல் பண்ணுதேன்னு நினைச்சிக்கிட்டேன். ரெண்டு பேரும் சாதாரணமா ஒண்ணா தங்கினது அவ்வளவு பெரிய தப்புங்களா..அந்த அளவுக்கு இருக்குங்க....அங்க.... ஆஹா...நம்ம ஊர்லயும் இப்ப சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கைக்கு ஓகே சொல்லிட்டாங்களே...இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம ஊர்லயும் இப்படி தான் பார்ப்பாங்க போல இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.

மேலும் படங்கள்

அந்த ஊர்ல பஸ்

எரிமலையினால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டோம் (நானும், சரவணனும்)

நாங்க தங்கின ரிசார்ட்(ஒரு சின்ன விளம்பரம் கூட இல்லாம எப்படி : ) )

ஒரு வழியா, சுற்றி பார்த்துட்டு, ஆபியாவில் உள்ள எங்க ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரவு 9 மணி, நல்ல கலைப்பு, Buffet க்கு போனோம். அங்க வச்சு இருந்த உணவைப் பாருங்க....பதிவை படிச்ச கலைப்புல இருப்பீங்க...இதையும் கொஞ்சம் சாப்பிட்டுட்டு போங்க... : )

Monday, August 17, 2009

ஷாரூக் :என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட!


ஆகஸ்ட் 15, நம்மோட சுதந்திர தினம். சரி, நாட்டின் கொண்டாட்டங்களை பார்க்கலாமேன்னு ஆங்கில நியூஸ் சேனல்கள் பக்கம் திருப்பினா...BREAKING NEWS: Shah Rukh Khan detained and questioned for 2 hours. எந்த ஆங்கில, இந்தி சேனல்கள் திருப்பினாலும் இதே செய்தி தான். அடப் பாவிகளா, செய்தி போட வேண்டியது தான், அதுக்காக, சுதந்திர தினத்தைப் பற்றி வந்த செய்திகளை விட, முந்தியடித்துக்கொண்ட வெளியில் தெரிந்த செய்தி இது தான்.

சரி, இப்போ மேட்டர். "My Name is Khan" என்கிற அவரது படம் சமீபத்தில் தான் சான் பிரான்சிஸ்கோவில் படமாக்கப்பட்டது. அதன் இயக்குனர் கரன் ஜோகர். இந்த முறை இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை துவக்கி வைக்க, ஷாரூக் கான் அமெரிக்கா சென்றார். அப்போது அவருடைய பேக்கேஜ் காணவில்லை என்று கூறப்படுகிறது. அதனால முதலில் ஷாரூக் கானின் டாகுமெண்ட்சை சரி பார்த்துள்ளனர் அமெரிக்க குடியேற்றத் துறையினர். பிறகு அவரைத் தனி அறைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு முன்னாடி, பலருக்கு விசாரணை செய்ய வேண்டி இருந்ததால்,அங்கு, அவர் வரிசையில் காக்க வைக்கப் பட்டார். பிறகு, அவர் முறை வந்ததும், அவரை விசாரித்திருக்கின்றனர். எங்க, எதுக்கு வந்தீங்க...என்ன பண்றீங்க...இது தானே அவங்க நார்மலா கேக்குற கேள்வி..அதை கேட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். விசாரணை முடிஞ்சதும் அனுப்பிட்டாங்க. இது தான் நடந்தது.

நம்ம ஊர் ராசா தாங்க ஷாரூக் நீங்க...பெரிய நடிகர்....எல்லாம் சரி தாங்க..இன்னொரு நாட்டுக்குப் போறீங்க...அவங்க நாட்டோட பாதுகாப்புக்காக, நாட்டு உள்ள வர்றவங்களை சோதனை செய்ய எல்லா உரிமையும் உண்டு. இது ரொம்ப நியாயமா தானே இருக்கு. இதுக்கு இப்படி ஒரு மீடியா கவரேஜ் தேவையா? அதுவும், சுதந்திர தினச் செய்தியை விட கூடுதல் கவனம் இதுக்கு தேவையா? இதுக்கு போய் ஒரு அரசாங்கம் தலையிடனுமா? என்ன கொடுமை சார் இது..?

அது அமெரிக்கா...நம்ம ஊர் மாதிரி இல்லை...எல்லா குடிமகனையும் ஒரே மாதிரி தான் அங்க பாப்பாங்க...யாராக இருந்தாலும், விதிமுறை ஒன்று தான்...ஏழைக்கு ஒன்னு, பணக்காரனுக்கு ஒன்னு, நடிகனுக்கு ஒன்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அளவுகோல் கிடையாது. இதுல இன்னும் ஒரு காமெடி என்னான்னா...மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, "நாமும் அமெரிக்கர்களிடம் அதே போல நடந்து கொள்ள வேண்டும்(Tit for Tat)" என்பது போல பேசி இருக்காங்க. இது சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு....(கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா...அங்க ஒரு கொடுமை......)

நிஜமா சொல்லணும்னா, நம்ம அரசாங்கம் இதை ஒரு பாடமா எடுத்துக்கணும். எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தணும். நம்ம ஊர் எம்பி க்களுக்கு இந்த மாதிரி சலுகை கொடுத்து, அவங்க பொண்ணுங்களை யாருக்கும் தெரியாம கனடாவுக்கு அனுப்புன கதை எல்லாம் இருக்கு.

இதே மாதிரி நம்ம நாட்டோட முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.அப்துல் கலாமுக்கு நடந்தது. அவரும் அதை பெருசு படுத்தல.

இதுல என்ன தெரியுதுன்னா....சுதந்திர தினத்தன்று, பொதுவா சூடான செய்திகள் இருக்காது, ஏனென்றால், எல்லோரும் கொடியேற்றம், விழான்னு பிசியா இருப்பாங்க. அன்னிக்கு மட்டும் அமைதியா பேசுவாங்க. அதனால, இந்த நியூஸ் மீடியாக்கள் இதை ஒரு மேட்டரா எடுத்து, சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்குறாங்கன்னு தான் தோணுது !

இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் விசாரிக்கப்படும் போது, நமக்கும் இதே போல கோவமும், வெறுப்பும் ஏற்படுவது இயல்பு தான் என்றாலும், அதுக்காக, இனிமேல் நான் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன், அப்படி இப்படின்னு சொல்றது கொஞ்சம் ஓவராத் தான் தோணுது. நாங்க எல்லாம், சட்டத்துக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று மமதையில் கூறுவது போல இருக்குங்க.

உங்களைப் போலவே ஷாரூக் கானை எனக்கும் பிடிக்கும், அதுக்காக கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி தான் "என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட .." என்கிற ரேஞ்சுக்கு குரல் கொடுப்பது, ரொம்ப குழந்தைத் தனமா இருக்குங்க..!

Tuesday, August 11, 2009

முதலாளி Vs தொழிலாளி!

எனக்கே ரொம்ப மொக்கையா இருந்த மாதிரி தெரிஞ்சுது. அதுவுமில்லாம அதுல பல மேட்டர்ல எனக்கு கொஞ்சம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த இடுகையை நீக்கிவிட்டேன். தங்கள் வருகைக்கு நன்றி. மன்னிக்கவும்.

Saturday, July 18, 2009

எதையும் ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான்!

ஆபீஸ்ல இருந்து நம்மல Samoa என்கிற நாட்டில் ஒரு ப்ராஜெக்ட் Implementationகாக அனுப்பி இருக்காங்க. ஆஸ்திரேலியவுக்கும், நியூசிலாந்துக்கும் நடுவில் உள்ள ஒரு சிறு தீவு தான் Samoa.

நேரடி விமானம் இல்லாததால், ஆஸ்திரேலியாவிலிருந்து செல்ல வேண்டும். விசா, டிக்கெட், டாடுமென்ட் அது இதுன்னு எல்லா எடுத்துட்டு கிளம்பினோம், நானும் என் அலுவலக நண்பர் சரவணனும்.

இது தான் பயண விவரம். ஆஸ்திரேலியாவிற்கு Single Entry Visa, சமோவிற்கு On Arrivalஇல் Visa.
சென்னை -> ஹாங்காங்க் -> சிட்னி->சமோவா
சமோவா -> சிட்னி ->ஹாங்காங்க்->சென்னை

செக் இன் செஞ்சிட்டு, அடுத்து நம்ம ஊர் Immigration.
ஆபீசர் : நீங்கள் ஆஸ்திரேலியா செல்வது முதல் முறையா?
நம்ம : ஆமாங்க, ஆனா, எங்க வேலை சமோவால..
ஆபீசர் : Western Samoa ? என்ன கேபிடல் அந்த நாட்டுக்கு?
(நல்லா கேக்குறாங்கய்யா...டீடெய்லு...)
நம்ம : ஆமாங்க..கேபிடல் ஆபியா..
(ஆப்பு + ஐயா = ஆப்பையா=> ஆப்பியா மரூஉ மொழி..ஹி ஹி..)


சரின்னு முடிச்சுட்டு அதி காலை 2:45 AM மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டோம். ஹாங்காங்க் வந்து சேர்ந்தோம். பத்து மணி நேரம் கழிச்சு தான் சிட்னிக்கு விமானம். டாலர்ல விலை போட்டு இருந்ததால, அதை நம்ம ஊரு காசுக்கு மாத்தி கணக்கு போட்டு, ஐயோ இவ்வளவா ?அப்படின்னு சொல்லிட்டு, வழக்கம் போல, ட்யூட்டி ஃப்ரீ கடைகள் உள்ள போயிட்டு, எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு, எதுவும் வாங்காம சுத்திக்கிட்டு இருந்தோம். நம்ம ஊர், Old Monkல லைட்டா தண்ணி ஊத்தி வச்சா எப்படி ஒரு கோல்டன் பிரவுன் கலர்ல இருக்குமோ, அதே மாதிரி கலர்ல, அதையே நல்ல பாட்டில்களில் கலர்புல்லா, பேக் செய்து வைத்து மாதிரியான நிறைய பாட்டில்கள்.பெருசு,சிறுசுன்னு பலரும்,அந்தக் கடைகளில் தான் வாங்கிட்டு இருந்தாங்க.


லெப்ட்ல சரவணன், ரைட்ல நான் ஹாங்காங்க் டிரான்சிட்டின் போது....

சரி,நேரம் ஆயிடுச்சு. சிட்னி விமானத்துல ஏறத் தயாராகிக் கொண்டிருந்தோம். கேட் உள்ள வந்துட்டோம். ஒருத்தர் ஓடி வந்து நண்பரிடம் பாஸ்போர்ட் கேட்டார். என்னிடமும் கேட்டு வாங்கிப் பார்த்தார். You have to change your passport, as your foto doesnt resemble you" அப்படின்னாரு அந்த ஜெண்டில்மேன். டேய் ராசா, இது நான் சின்ன வயசுல கோல்ட் ஸ்பாட் குடிச்சிட்டு இருந்த போது எடுத்தது, இப்போ.... முகம் மாறி இருக்காதான்னு சொல்ற மாதிரி சொன்னேன்.(இந்த கோழி சிறுசா இருக்க சொல்ல உறிச்சது இது, இதே கோழி பெருசா இருக்க சொல்லு உறிச்சது அது...ந்னு மகராசன் படத்துல கமலஹாசன் சொல்ற மாதிரி). சரி டா ராசா...கிளம்புங்கோன்னு சொல்லி அனுப்பிட்டாரு...


9 மணி நேரப் பயணத்திற்கு பிறகு ஹாங்காங்கிலிருந்து சிட்னி வந்து சேர்ந்தோம். ஆகா, இப்போ ஆஸ்திரேலியவுல வேற அது இதுன்னு பிரச்சினைன்னு சொல்றாங்களே...நம்ம வேற முதல் முறையா வர்றோம் ஆஸ்திரேலியாக்கு, Immigrationல பிண்ணிப் பெடல் எடுக்கப் போறாங்கன்னு நினைச்சிட்டே போனோம்...நம்ம Triplicane ரத்னா கேப் கேஷியர் மாதிரி, காலை ஆட்டிக் கொண்டு ஒரு ஆபீசர் உட்கார்ந்துட்டு இருந்தார். அவர் கிட்ட போனேன்.ஆனா ஒண்ணுமே சொல்லல, எங்க போறீங்கன்னு கேட்டுட்டு, பட்டுன்னு ஒரு சீல் போட்டுக் கொடுத்துட்டாரு. எல்லாம் முடிஞ்சுதன்னு நினைச்சு பெரு மூச்சு விடுறதுக்குள்ள, அவர் ஒரு அம்மணியை கைக்காட்டி, உங்க பாஸ்போர்ட்டை இவங்க கிட்ட கொடுங்க, சரி பார்த்துட்டு தருவாங்கன்னு சொன்னார். அந்த அம்மணி,நீங்க எங்க போறீங்க, லெட்டர் கொடுங்க, பிசினஸ் கார்டு கொடுங்க அப்படின்னு கேட்டுட்டு, கொஞ்சம் நேரம் காத்து இருக்கச் சொல்லுச்சு. அதானே பார்த்தேன், நம்ம மூஞ்சி தான் லோக்கல் தமிழன் நு எழுதி ஒட்டின மாதிரி இருக்குமே...ஒண்ணுமே கேக்காம விடுறாங்களேன்னு நினைச்சேன்.


கொஞ்சம் நேரம் கழிச்சு அம்மணி வந்துச்சு. எல்லாம் ஓகே. ஆனா, நீங்க எடுத்து இருக்குறது Single Entry Visa. இப்போ ஒரு Entry முடிஞ்சிடுச்சு. அதனால, இதே விசாவை வச்சிட்டு, நீங்க திரும்பி சிட்னிக்கு வர முடியாது. சமோவால போய் டிரான்சிட் விசா எடுத்தால் தான் வர முடியும்னு சொன்னாங்க. நம்ம client கிட்ட இந்த மேட்டரை உடனே சொன்னேன். விசாவை பத்தி எல்லாம் கவலை படாதீங்க...நாங்க பாத்துக்குறோம்னு சொன்னாங்க. சரின்னு கஸ்டம்ஸ் அது இதுன்னு முடிச்சுட்டு வெளியில வந்தோம். வரவேற்க அலுவலகத்துல இருந்து வந்து இருந்தாங்க. இங்கேயே இருக்கீங்களா? இல்லை சாப்பிட போலாமா? இன்னும் 5 மணி நேரம் இருக்கு உங்க விமானத்துக்குன்னு சொன்னார். ஐயா, முதல்ல நாங்க குளிச்சு ரிப்ரேஷ் ஆகணும், அதுக்கு ஏதாச்சும் ஒரு வழி பண்ணுங்கன்னு சொன்னேன். ஆமாங்க, இரண்டு நாள் பயணத்துல, ஒரு சில விஷயங்கள நிம்மதியா கூட பண்ண முடியல : ). அதான். எங்கள் நிலைமையை புரிந்து கொண்ட அந்த நல்ல மனிதர், அவருடைய வீட்டிற்கே அழைத்துச் சென்றார்.

கும்முன்னு ஒரு குளியல் போட்டோம். மீதி இருக்குற நேரத்துல ஷார்ட் டிரைவ் கூட்டிட்டு போறேன்னு ஹார்பர் பிரிட்ஜ்,அது இதுன்னு வேகமாக சுற்றிக் காட்டினார். பல ஊர் போய் இருந்தாலும்,வழக்கம் போல பட்டிக் காட்டான் முட்டாய் கடையை வேடிக்கை பாத்த மாதிரி பாத்துட்டே வந்தேன். அவ்வளவு அருமையான ஊர். கட்டிடங்கள் எல்லாம் எழிலோடும்,பழமையின் சின்னமாகவும் அழகாக இருந்தது. "சிட்னி நகரம் என்பது வந்து நம்ம கை விரல்கள் மாதிரியான தோற்றம். விரல்கள் தான் இடங்கள், அதனுடைய இடைவெளிகள் முழுவதும் கடல்" என நறுக்கென்று விவரித்தார் அந்த ஆஸ்திரேலிய நண்பர்.

இது, நான் தான், ஒரு சுய விளம்பரத்துக்காக எடுத்தது!

எல்லாம் முடிந்து, சமோவா, விமானத்துக்கு செக் இன் செய்ய ஏர்போர்ட் வந்தோம். ராசா, நீங்க சமோவ போறதுக்கு முன்னாடி, டிரான்சிட் விசாவை காண்பித்தால் தான் போர்டிங்க் பாஸ் தருவோம் அப்படின்னு சொல்லுச்சு அந்த விமான அலுவலக பெண்மனி.

சென்னை -> ஹாங்காங்க் -> சிட்னி->சமோவா (இதுலயே ஒரு Entry/Exit முடிஞ்சிடுச்சு..விசா காலி)
சமோவா -> சிட்னி ->ஹாங்காங்க்->சென்னை (விசா முடிஞ்சுப்போச்சே...எப்படிய்யா நீ சமோவவில் இருந்து சிட்னிக்கு திரும்பி வருவே? இது தான் அவங்க கேட்ட கேள்வி)

அங்கே போய் விசா எடுத்துக்குறோம், அது இது...நாங்க எல்லாம் லார்ட் லபக்தாஸ், அப்படி இப்படின்னு கதை விட்டும் ஒன்னும் வொர்க் அவுட் ஆகல. ஓகே வேற வழியே இல்லைன்னு, சிட்னியிலேய ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு கொடுத்துட்டாங்க.

ஐயோ வடை போச்சேன்னு ஒரு புறம் கவலையா இருந்தாலும். கம்பெனி செலவுல சிட்னில நல்லா சுத்திப் பாக்க வாய்ப்பு கிடைச்சுதேன்னு ஒரு சந்தோஷம் தான் ! Multiple Entry Visa நாளைக்கு வந்துடுமாம். ஞாயிறன்று சமோவா கிளம்புற மாதிரி ப்ளான்.

இதுக்கு தான் வடிவேல் சொல்ற மாதிரி, "எந்த ஒரு விஷயத்தையும், ப்ளான் பண்ணாம செய்யக் கூடாது, ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான்.... அஜுக்,பஜக்,புஜுக்....அஜுக்,பஜக்,புஜுக்..."

நெக்ஸ்டு மீட் பண்றேன், சமோவாவில்!

நம்முடைய முதல் பயணக் கட்டுரை, ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லிடுங்க, இதை தொடராம, இனிமே நமக்கு வொர்க் அவுட் ஆகுற மாதிரியே பதிவையே போடுறேன்..!Monday, July 13, 2009

சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டுமா?


சாதாரணமாவே நம்ம திருமணம், மற்றும் ஷாப்பிங்க் போறதுக்கே, இந்த டிரஸ் மேட்சிங்கா இருக்கா, இதுக்கு ஷூ போடலாமா, செருப்பு போட்டுக்கலாமா ? இப்படி எல்லாம் யோசிப்போம். அதுமட்டுமல்ல, நம்ம நண்பர்கள் கிட்ட பேசும் போது கூட, ஓரளவுக்கு யோசிச்சு, நம்ம சரியா தான் பேசுறோமா? சரியா தான் நடந்துக்குறோமான்னு ரொம்ப கவனமா நடந்துப்போம்.

இதுக்கே இப்படின்னா, பல லட்சம் பேர் நம்மல கவனிச்சு பாக்குறாங்கன்னா, அதற்கு எவ்வளவு முன்னேற்பாடு செய்யனும். இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லாம, நானும் VJ தான்னு வந்து நம்மல பண்ற கொடுமை இருக்கே...சாமி. ஆசையா எதாச்சும் ஒரு பாட்டு கேக்கலாம்னு, மியூசிக் சேனலை வச்சா போதும், லப லபன்னு, என்ன பேசுறோம்னே தெரியாம கத்திட்டு இருப்பாங்க. பொண்ணா இருந்தாலும் சரி, பையனா இருந்தாலும் சரி. இதுல வேற பல நிகழ்ச்சிகளில் இரண்டு VJ. உங்களையும் மதிச்சு ஒருத்தர் போன் பண்றார்னா, அவரிடம் ஒழுங்காக பேசாமல், இவர்களுக்குள்ளேயே கடலை வறுத்துக் கொண்டிருப்பது, இவங்க ஏதோ லார்ட் லபக்தாஸ் மாதிரியும், போன் பண்றவங்க ஏதோ முட்டாள்கள் மாதிரியும் நினைச்சு பேசுற மாதிரியே இருக்கும் இவர்களுடைய தோரணை.


அதுமட்டுமல்ல, போன் செய்ற பெரியவங்க, ரொம்ப ஆசையா, தன் பையன் கிட்ட, பொண்ணு கிட்ட பேசுற மாதிரி அன்பா பேசுவாங்க. அப்படி பேசுறவங்கள இவங்களுக்குள்ளேயே நக்கல் பண்றது,கிண்டல் பண்றது. தன்னுடைய குரல் டிவில கேக்காதாங்கற ஆசையில போன் செய்றவங்களை என்னமா கொடுமை பண்றாங்க இவங்க.


சரி நம்ம மேட்டர்க்கு வருவோம். எத்தனையோ மிகச் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு மத்தியில், இப்படியும் நாலு பேர் இருக்கத் தான் செய்றாங்க. இந்த மாதிரியான ஒரு ஒப்புக்குச் சப்பானி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆக வேண்டுமா ? நீங்களே உங்களை சோதித்துக் கொள்ள எளிய வழிகள் இங்கே!


1.நிகழ்ச்சியின் போது என்ன டிரஸ் போடுவீங்கன்னு தோணுதோ, அந்த டிரஸ்சை போட்டுட்டு, ரோட்டில் போய் நில்லுங்கள். உங்களை குறைந்த பட்சம் 5 நாய்களாவது துரத்தினால், டெஸ்ட் 1 ல நீங்க பாஸ்.


2.நிகழ்ச்சியில் பேசுவதாக நினைத்துக் கொண்டு, உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம், preferably பாட்டியிடம் போய் பேசுங்கள். "ஐயோ, புள்ளைக்கு காத்து கருப்பு ஏதாச்சும் புடிச்சுருச்சா" அப்படின்னு பாட்டி ரியேக்ஷன் கொடுத்தாங்கன்னா நீங்க டெஸ்ட் 2 லயும் பாஸ்.


3.காலையில் இட்லி சாப்பிட்டேன் என்கிற விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு, உங்கள் பெண் நண்பியிடம் 1 மணி நேரம் பேசுபவரா நீங்கள் ? ஆமான்னு தலையை ஆட்டுனீங்கன்னா, ஐயா, மூன்றாவது டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்க.


4. கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்? அல்லது Wrong Number க்கு கால் செய்து அரை மணி நேரம் பேசக் கூடிய திறமை கொண்டவரா நீங்கள்? இதுக்கும் ஓகே சொன்னீங்கன்னா....கிட்ட தட்ட முக்கா கிணறு தாண்டிட்டீங்க நீங்க..


5.நீங்கள் படித்த கல்லூரியிலோ, பள்ளியிலோ, ஆசிரியரிட்ம், உங்களைப் பற்றி கேட்கச் சொல்லுங்கள். "எத்தனையோ பசங்கல பாத்து இருக்கேன். சில பேர் ரொம்ப பழம் மாதிரி இருப்பான், சில பேர் ரொம்ப அரட்டையா இருப்பான். ஆனால் இவன் ஒரு மாதிரி, எப்பவும் மர கழண்ட மாதிரியே சுத்திட்டு இருப்பான்".

இப்படி ஒரு பதில் வந்துச்சுன்னா.....அடேங்கப்பா....நெருங்கிட்டீங்க....ஐந்தாவது டெஸ்டிலும் நீங்க பாஸ்.


6. கடைசியா ஒரு கஷ்டமான கேள்வி. பால் குடிக்கிற குழந்தை என்ன குடிக்குது? இந்த கேள்விக்கு எவ்வளவு யோசிச்சும் உங்களால பதில் சொல்ல முடியலையா? சூப்பர். இந்த டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்க!


அட, எல்லா டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்களா?


Congratulations! நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது. நிச்சயமாக சன் மியூசிக் அல்லது இசையருவியில் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது ! அதே வேகத்தோடு, இதோ இதையும் கொஞ்சம் சொல்லி பழகிக்கோங்க.


"இதுவரைக்கும் நாடோடிகள் படத்துல இருந்து ..பாட்டு பாத்து எஞ்சாய் பண்ணோம். இப்போ அடுத்து நம்ம கிட்ட பேச போற நெக்ஸ்ட் காலர் யார்னு பாக்குறதுக்கு முன்னாடி ஒரு short commercial break.!


டிஸ்க்: இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, பிறரைப் புண்படுத்த அல்ல


Monday, July 6, 2009

மற்றவர்களை புண்படுத்தவது ஒரு கொள்கையா?


தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கருத்து வேறுபாடோ, வெறுப்போ இல்லாத போதும், நமக்கு பிடிச்ச நபர்களையோ,விஷயங்களையோ,நம்பிக்கைகளையோ, மற்றொருவர் கேவலப்படுத்துறார்னு தோன்றும் போது, அதை ஜீரணித்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான். அப்படிப் பட்ட பதிவுகளுக்கு எதிராக நான் , சின்ன சின்ன பின்னூட்டங்கள் இடுவது உண்டு. கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு. இப்படி பிரபல திராவிட இயக்க பதிவரான தமிழ் ஓவியாவிற்கும், நமக்கும் சின்ன சின்ன கருத்து Fight வருவதுண்டு. "மகாவிஷ்ணு இராம அவதாரம் எடுத்தது எதற்கு? -7" என்ற தலைப்பில் நடந்த கருத்துப் பரிமாற்றம்..இங்கே..

தமிழ் ஒவியா :மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டிகாவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

கபிலன்: பூமியின் நிலப்பரப்புகளில் காலா காலமாக Geographical மாற்றம் எப்படி ஏற்பட்டு வந்தது என்பதை Manorama புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு காலத்தில் நிலப்பரப்புகள் பெரும்பாலும் ஒன்றாக இருந்தன. காலப்போக்கில் பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள் காரணமாக நிலப்பரப்புகள் நகர்ந்து(Continental Plates) அதன் பிறகே ஒவ்வொரு கண்டமாக உருவெடுத்தது. அது மட்டுமல்ல, இந்த அவதாரங்கள் எடுத்த காலகட்டத்தில், அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா என்ற ஒன்று இருந்ததா? என்பதே கேள்விக்குறி தான்.

தமிழ் ஓவியா: இப்போது கடவுள்கள் ஏன் அவதாரங்கள் எடுப்பதில்லை.


இந்த கேள்விக்கு, பின்னூட்டத்தில் பதில் சொல்வதை விட, பதிவிலேயே சொல்லி விடலாம். ஏன்னா பதில் கொஞ்சம் பெருசு. ஒரு வேளை, நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனா? பலர் நினைக்கிறாங்க, ஆனா கண்டுக்காம விட்டுடுறாங்களா? என்ன மேட்டர்னு, பலரோட கருத்து தெரிய வரும்.

கபிலன்:

நண்பரே, நிரூபிக்க கூடிய விஷயங்களைக் கொண்டவையை, அறிவியல்(Science) என்போம். உதாரணமாக, Nuclear Science,Computer Science இப்படி. ஆனால் சமயங்களை நம்பிக்கைகள்( Religious Belief) என்று சொல்கிறோம் அதாவது hindu belief, Islam and christian faith என்று சொல்லுவோம். நிரூபிக்கப் படாத விஷயங்கள், மனிதனின் அறிவுக் கண்களுக்கு எட்டாத விஷயங்கள் அனைத்தும் பொய்யாகாது !

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ! ஒவ்வொரு மாதிரியான வழிபாடுகள் ! நம்ம இங்க இட்லி சாப்பிடுறோம், அமெரிக்காவுல பர்கர், பீட்சா சாப்பிடுறாங்க, கொரியாவில் மாமிசத்தை அரை வேக்காட்டில் சாப்பிடுவாங்க...ஏன் நாய்களைக் கூட உணவாக உண்ணும் இடங்கள் உண்டு. வெவ்வேறு உணவாக இருந்தாலும், கடைசியில், அனைத்தும் நம் பசியைத் தீர்க்கத் தான் பயன்படுகிறது. அதே போல தான் சமயங்களும். வெவ்வேறு சமங்களின் வழிபாடுகள், முறைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், அனைவரும் அன்பு செலுத்தி, நல்வழியில் நடந்து, இன்புற வேண்டும் என்பதைத் தான் எல்லா சமயங்களும் வற்புறுத்துகின்றன.

கடவுள் இருக்கிறார். இவ்வாறாக இருக்கிறார். அனைவரையும் நல்வழிப் படுத்துகிறார் என்பது நம்பிக்கை ! நம்முடைய நம்பிக்கைகள் அடுத்தவரை பாதிக்காதவரை, அடுத்தவரை புன்படுத்தாதவரை, நம் நம்பிக்கைளின்படி நடப்பதில் என்ன தவறு இருக்கிறது ?

கடவுளை ஒழித்தால் சாதி ஒழியுமா? ஏற்றத் தாழ்வுகள் நீங்குமா?
மனதில் தோன்றும் பதில் "வாய்ப்பே கிடையாது"

சாதிகள் களையப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. பெரியார் இறந்து, வருடங்கள் பல ஓடியும், சாதி ஒழியவில்லையே ஏன்?

காரணம் நடைமுறைச் சிக்கல்கள். பேச்சளவில் சாதி ஒழிய வேண்டும் என்று கூச்சலிடுவோம். எல்லா விண்ணப்பங்களிலும் சாதி என்ற இடத்தில் நம் சாதியை போட்டுக்கொள்வோம். பிறகு எப்படி சாதி ஒழியும் ? நம்மில் பலருக்கு, முழுமையான சாதிப் பெயர் இப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது தான் தெரியும். சாதிச் சான்றிதழ் வாங்க மணியக்காரிடமும்,தாசில்தாரிடமும் நடையோ நடை நடந்து சாதிச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு தானே இருக்கிறோம்? பேச்சளவில் சாதி இந்தளவு ஒழிந்திருப்பதற்கு பெரியார் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், பேச்சளவில் இருந்த சாதிக்கு, எழுத்து வடிவம் கொடுத்து ஏட்டில் ஏற்றிவிட்டதால், அதனை ஒழிக்க முடியாமல் தவிக்கிறோம்.

தெரியாம தான் கேக்குறேன்...கடவுளை நீங்கள் நம்புவதில்லை, அப்புறம் கடவுள் நல்லவரா இருந்தா, உங்களுக்கு என்ன? அல்லது கெட்டவராக இருந்தால் உங்களுக்கு என்ன? நாங்க கோவிலுக்கு போறதுல, சர்ச்சுக்கு போறதுல, மசூதிக்கு போறதுல உங்களுக்கு என்ன வருத்தம் ?

தங்கள் இயக்கத்தின் கருத்துக்களும், கொள்கைகளும், பல சாதி மக்களிடையே, பல சமய மக்களிடையே வேற்றுமைகளை உருவாக்குகிறது, பகையை வளர்க்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

யாரையாவது எதிர்த்தால் தான் இயக்கம் வலிவடையும் என்பது உண்மை தான். அதற்காக நாட்டின் ஒற்றுமையையும், மதச் சார்பின்மையையும் எதிர்க்க வேண்டாம் !

"நாத்திகனுக்கு இந்து அறநிலையத்துறை"
அடடா...என்னே நம் நிலைமை..!

திராவிட கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும், கடவுள் மட்டும் வேண்டாம், ஆனால் கடவுளின் உண்டியல் மட்டும் வேண்டும்.


என்னே ஒரு கொள்கை!

நான் பிடித்த முயலுக்கு மூணு கால்னு எத்தனை நாள் தான் சொல்லிக் கொண்டே இருக்கப் போகின்றீர்கள்.
மாற்றம் என்பது மானிடத் தத்துவம் !

உங்களை கடவுளை வழிபட அழைக்கவில்லை. கடவுளை நம்புவதோ, நம்பாமலிருப்பதோ அவரவர் தனிப்பட்ட விஷயம்.

அப்படி கடவுள் நம்பிக்கை உள்ள, பல கோடி மக்களின் நம்பிக்கையையும், அவர்களின் மனங்களையும் புன்படுத்தாமலாவது இருங்கள் என்று தான் கேட்கிறோம் !

தமிழ் ஓவியா, இப்படி தான் சொல்லுவார்னு நினைக்கிறேன்..."எங்கள் இயக்கத்தினுடைய, என்னுடைய கருத்தை சொல்வதற்கு எனக்கு முழு உரிமை உண்டு. யாருக்கும் பயப்படத் தேவை இல்லை. நீங்கள் அறியாமையில் பேசுகிறீர்கள். விடயம் தெரியாமல் பேசுகிறீர்கள். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். "

ஆஹா கபிலா....ஜூட்....

கருத்து வேறுபாடுகள் இயல்பு. அதற்கான பதிவு தான் இது. இதில் நண்பர் தமிழ் ஓவியாவின் மீது தனிப்பட்ட வெறுப்புகள் எதுவும் கிடையாது. அவரைப் புன்படுத்துவது இந்தப் பதிவின் நோக்கமல்ல அதற்காக எழுதியவையும் அல்ல.

கடைசியா....

சமுதாயம்ங்கறது ஒரு பாக்கெட் பால் மாதிரிங்க...அதுல நம்மைப் பிரித்து ஆள்வதற்கு ஒரு சில கூட்டங்கள் இருக்கு...அதை மட்டும் சிசர்ஸ் எடுத்து லைட்டா வெட்டி விட்டோம்னா...அன்பு என்கின்ற பால் வெள்ளமாக வழிந்து, சாதி மதச் சண்டைகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன், அமைதியுடன், சந்தோஷமாக வாழலாம்.


(டேய் மாதவா..என்ன என்னமோ பேசுறடா...எப்படிடா இதெல்லாம்...என்னமோ போடா....)

தமிழ் ஓவியாவின் எழுத்துக்கள் இங்கே!
http://thamizhoviya.blogspot.com/2009/07/7.html

அடிவாங்குறதுக்கு முன்னாடி.....குதிச்சுடுறா கைப்புள்ள ..................Friday, July 3, 2009

நிதி அமைச்சரே, பட்ஜெட்ல இதையும் கவனிச்சுக்கோங்க..!

எந்த சேனல் எடுத்தாலும், பெரிய பெரிய ஆளுங்கள கூப்பிட்டுட்டு வந்து, இந்த பட்ஜெட் எப்படி இருக்கணும், அது இதுன்னு கேள்வி கேக்குறாங்க. நம்ம மனசுல இருக்குறதையும் எங்கேயாச்சும் சொல்லனுமே...அதாங்க இங்க சொல்றேன்...கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் சீரியஸ்...

மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் அவர்களுக்கு,


1. மூன்று வருஷம் ஒழுங்கா வரி செலுத்துறவங்களுக்கு, ஒரு வருஷ வரி விடுமுறை கொடுங்க : ). (பண முதலைகளான, முதலாளிகளுக்கு மட்டும் வரி விடுமுறை விடுறீங்களே, சாதாரண தொழிலாளிங்களுக்கு கொடுங்க)


2.10% மேல Lay-Off பண்ண நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை ரத்து செய்து, புதிய வரியை அமல்படுத்துங்கள் (கொள்ளை லாபம் பார்த்தால் நீங்க அனுபவிப்பீங்க, நஷ்டம்னா நாங்க அனுபவிக்கனுமா? இப்படி பண்ணா தான் எங்க கோவம் தீரும்).


3.ரிசஷன் காரணமாக, வேலை இழந்தவர்களுக்கு, அவர்கள் வாங்கின கடனை எல்லாம், மறு வேலை கிடைக்கிற வரைக்கும், நிறுத்தி வைக்கனும். (இல்லை அரசே அந்த கடனை கட்டினாலும் ஓகே தான் : )).


4.எப்படியெல்லாம் சாதாரம பொது மக்களிடம் இருந்து வரி என்ற பெயரில் பணம் பிடுங்களாம் என்று எண்ணாமல், கருப்பு பணம் வைத்திருக்கும் கோட் சூட்டு போட்ட கொள்ளைக்காரன், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்ட ரவுடி+கொள்ளைக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்யும் வழிகளை தடை செய்யுங்கள்.


5. வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க.செக்ஷன் 80 C, 80 D ல 1 லட்சம் சேமிக்கணும்னு சொல்லி இருக்கு. இதை எல்லாம் சேமிப்பின்னு சேத்துகிட்டா நல்லா இருக்கும்.


1. பொட்டி கடையில நாங்க வச்சி இருக்குற அக்கவுண்டையும் இந்த செக்ஷனுக்கு கீழ எடுத்துட்டு வரணும்.


2. ஹெல்மட் போடாம, இன்சூரன்ஸ் ரினீவ் பண்ணாம, குடிபோதையில் வண்டி ஓட்டி,சிக்னல் மதிக்காம, நாங்க டிராபிக் போலீஸ்க்கு கட்டின Fine எல்லாம் இந்த செக்ஷன் கீழ எடுத்துட்டு வரணும்.


3.எந்த கடையில எது வாங்கினாலும், கூடவே வரின்னு ஒரு சதவிகிதத்தை பில்லில் சேர்த்து, அதை எங்கள் தலையிலேயே கட்டி விடுகிறீர்கள். ஆகவே, நாங்கள் அப்பொருட்களுக்கு, அந்த பணத்திற்கு வரி செலுத்திவிட்டோம். ஆகையால், இவ்வாறாக செலவு செய்த பணத்திற்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும்.


4.எங்க போனாலும் லஞ்சம் கொடுத்தா தான் வேலை ஆகுற நம்ம இந்தியாவுல, இப்படி நாங்க கொடுக்குற லஞ்சத்தையும் இந்த செக்ஷன் கீழ எடுத்துட்டு வந்து, வரி விலக்கு கொடுக்கணும்.வரி ரீபண்ட்1.அடிப்படி இயற்கை வளமான தண்ணீரை கூட, நாள் ஒன்றுக்கு 30 ரூபாய், கொடுத்து தண்ணி கேன் வாங்கி குடிக்கிறோம். மாதத்திற்கு 1000 ரூ, வருடத்திற்கு 12000 ரூபாய். இந்த தொகையை ரீபண்ட் செய்ய வேண்டும்.


2. ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் ஆகுற அத்தியாவசிய செலவுகளான, மருத்துவ செலவு, சுபச்செலவு இவைகளுக்கு எல்லாம் எளிய முறை வகுத்து ரீபண்ட் செய்ய வேண்டும்.


கடைசியா ஒரே ஒரு கோரிக்கை, எந்த ஊர்ல எந்த வங்கில இருக்க கடனை ரத்து செய்ய போறீங்கன்னு எங்களுக்கும் சொன்னீங்கன்னா, நாங்களும் இப்பவே கடன் வாங்கிக்குவோம். உங்க குடும்ப ஆளுங்களுக்கும், கட்சிக்காரங்களும் மட்டும் சொல்லாம எங்களுக்கும் சொல்லிடுங்க, எந்த கடனை ரத்து செய்யப் போறீங்க அமைச்சரே!

நன்றி,

இப்படிக்கு,
ஏமாந்த,ஏமாறப் போகும் பொதுஜனம்.

Wednesday, July 1, 2009

மனசு = அறிவு இல்லாத மூளை !

பொதுவாகவே, நம்ம மூளை ஒன்று சொல்லும், அதற்கு எதிர்மாறாக மனசு ஒன்றைச் சொல்லும். இதையே சில சமயங்களில் நாம் மனசாட்சி என்று சொல்கிறோம்.

நம்ம வழக்குமுறைகளில் கூட மனசுல இருக்குறத அப்படியே சொல்லுங்க என்று தான் சொல்லுவோம். மூளையில இருக்குறத, நல்லா யோசிச்சு சொல்லுங்கன்னு சொல்லுவோம்.


இந்த மாதிரி வேறுபடுத்தி சொல்கிற வழக்கம் நம்ம ஊரில் மட்டுமல்ல..உலகெங்கும் இருக்கற விஷயம் தான். உதாரணமா, காதலுக்கு, இதயத்தை தான், சின்னமாக உலகமே அங்கீகரித்து இருக்கிறது. காதல் வயப்படுபவர்கள் "I have fallen in love" நு தான் சொல்லுவாங்க, "I have decided to love" நு சொல்ல மாட்டாங்க. அறிவைத்(மூளையை) தோற்கடித்து, மனம் வெற்றி பெறுவது தான் காதல். அதே மாதிரி, கல்யாணம்னு வரும்போது "I have decided to marry her " நு சொல்லுவாங்க. இங்க நம்ம ஆளுங்க நிறைய யோசிப்பாங்க. பல ஃபார்முலாக்கள் போட்டு வொர்க் ஒவுட் ஆகுதான்னு பாப்பாங்க. இங்க அறிவு(மூளை) வெற்றி அடைகிறது, மனம் அதனை ஆதரிக்கிறது.

அது என்ன மனசு? எங்கே இருக்கிறது மனசு? நம்மைப் பொறுத்த வரையில், ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு சொல்லணும்னா, நெஞ்சில் கை வைத்து சொல்லுவோம். பெரியவங்க, யாரையாவது வாழ்த்தும் போது கூட மனசார சொல்றேன் மா, நீ ரொம்ப நல்லா இருக்கணும்னு, நெஞ்சில் கை வச்சு சொல்லுவாங்க. மலேசியா போன்ற நாடுகளில் கூட
நாம் கை கொடுக்கும் போது, அவங்க நெஞ்சில் கை வச்சுட்டு, அதுக்கு அப்புறம் தான் கை குலுக்குவாங்க. வெறும் வாய்சொல்லில் மட்டுமல்லாமல், உங்களை மன்சார வரவேற்கிறேன் என்று சொல்லுவதாக அமைகிறது அதன் அர்த்தம்.

இதை எல்லாம் வச்சு பார்க்கும் போது, மனசு என்பதை இதயமாக பாவிக்கிறோம். அறிவு என்பதை மூளையாக பாவிக்கிறோம்.
அறிவியலின் படி பார்த்தால், மனசு என்கிற உணர்வு மூளையில் இருந்து தான் தோன்றுவதாக படிக்கிறோம். இருந்தாலும், நம்ம எல்லோருக்கும் இதை தனி தனியா பாக்குறதுல தான் விருப்பம்.

முதலில் தோன்றிய ஆதாம் ஏவாளுக்கு விதித்த கட்டளை, அந்த பழத்தை( Fruit of Knowledge) மட்டும் உண்ணாதீர்கள். பெரும் துன்பத்திற்கு ஆளாவீர்கள் என்று எச்சரித்ததாக கூறுகிறது பைபிள். அதாவது, மனம் மட்டும் இருந்தால், நல்ல வாழ்க்கையை வாழ முடியும், அறிவை தேடிக் கொண்டால் கஷ்டம் தான் வரும் என்று கூறுவது போல அமைந்து இருக்கிறது.

அப்படி, மூளை என்ன சொல்லும், மனசு என்ன சொல்லும் என்பதற்கான சின்ன உதாரணங்கள்.

காதல்
மூளை: டேய் அந்த பொண்ணு வேணாம்டா...ரொம்ப வசதியான பொண்ணு....வேற சமயத்து பொண்ணு வேற...நம்ம குடும்பத்துக்கு சரி வராதுடா...விட்டுறு டா......
மனசு: இல்லைடா எனக்கு புடிச்சு இருக்கு...எனக்குன்னே பொறந்தவ மாதிரி இருக்கா அவ....யாரு என்ன சொன்னாலும் பரவாயில்ல...நான் அவள தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்...
(அதுக்கு அப்புறம் அவர் படுகிற அவஸ்தை எல்லாம் அனுபவிக்குறவனுக்கு தெரியும்).

கிரிக்கெட் T20 இலங்கை Vs பாகிஸ்தான்
மூளை: கண்ணா, நம்ம எல்லாம் இந்தியர்கள், பாகிஸ்தான் காரன் எவ்ளோ கொடுமை பண்ணி இருக்கான் நம்ம நாட்டுக்கு...அவன் தாண்டா தோத்து போகணும்..
மனசு: பாகிஸ்தான் எதிரி தான்...ஆனா முதல் எதிரி இலங்கை தான்......பாகிஸ்தான் ஜெயிச்சா கூட பரவாயில்லை..இலங்கை ஜெயிக்க கூடாது.....

சரி, எப்பொழுதும் மனம் சொல்படி நடக்கலாமா என்று யோசித்தால், அதுவும் முடியாது. நம்முடைய சமூக அமைப்பை உருவாக்கியது மூளை. அந்த மூளை, நிச்சயம் மனதை வெற்றி பெற விடாது.

என்ன தான்டா சொல்ல வர்றே...சினிமா ஸ்டைல்ல சொல்லணும்னா...

மனசுல இருந்து சொல்றது INNOCENCE
மூளையில இருந்து சொல்றது INTELLIGENCE


நம்ம லெவலுக்கு கொஞ்சம் ஓவரான ஸ்ப்ஜெக்ட் தான்னு தெரியுது, சரி நம்ம எண்ணங்களை மட்டும் பகிர்ந்துக்குவோம்னு சொன்னது மனசு. இதுல கருத்து சொல்ற அளவுக்கோ, முடிவு சொல்ற அளவுக்கோ எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்வது அறிவு.

சரி அதென்ன இப்படி ஒரு பேரு பதிவுக்கு....இதோ வர்றேங்க..

அறிவியலின் படி மனசு என்பது மூளையின் அங்கமே.
அதன்படி,

அறிவு + மனசு = மூளை
மனசு = மூளை - அறிவு
மனசு = அறிவு இல்லாத மூளை

=> மனசு = அறிவு இல்லாத மூளை
(Thus the pythogores theorem has been proved... hehehe)

Tuesday, June 30, 2009

மனைவியின் தாக்குதல்களுக்கு கணவரின் பதில் பாடல்கள்!

மனைவி கேக்குற கேள்விகளுக்கு எல்லாம், கணவர் பாடலிலேயே பதில் சொன்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.
சும்மா நகைச்சுவைக்காக மட்டும் : )


மனைவி : கடைக்கு போய்ட்டு ஒரு நல்ல தக்காளி வாங்கிட்டு வர தெரியல, தண்ணி கேன் எடுத்து ஊத்த தெரில, கடைத்தெருவுக்கு போய் விலை பேச தெரில, குழந்தை கூட உட்கார்ந்து ஹோம் வொர்க் செய்ய வைக்க தெரில, ஆத்திரம் அவசரம்னா ஒரு தோசை சுட தெரில...ஏன் ஒரு மேக்கி கூட செய்ய தெரில....


கணவன் :


பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது..
அப்படி பொறந்துவிட்டா பொம்பளைய நினைக்கக் கூடாது...மனைவி : எவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் என்னை கல்யாணம் பண்ணிக்க வந்தாங்க...அவங்கள எல்லாம் விட்டுட்டு உங்கள போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாருங்க.....எல்லாம் என் தலையெழுத்து...


கணவன்:

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று....
மனைவி : என்ன திட்டினாலும் கேக்க மாட்றீங்க...இப்படியே வாரத்துல 2 நாளு குடிச்சிட்டு வர்றீங்களே...சரி அப்படியே குடிச்சிட்டு வந்தாலும், அமைதியா இருந்தா பரவால்ல....உங்க மொக்கையை யாரு தாங்குறது....இன்னிக்கு ஒரு நாள் வெளியவே படுங்க..(தடக் என கதவை அடைத்து, மனைவி வெளியே தள்ளிட்டாங்க)

கணவன் :
"வாடி பொட்ட புள்ள வெளியே...
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..."

"இரவினில் ஆட்டம்.....
பகலினில் ஓட்டம்..
இது தான் எங்கள் உலகம், எங்கள் உலகம்..."

"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இதில் நீயேன்ன...
அடியே நானேன்ன ஞானப் பெண்ணே..
வாழ்வின் பொருளென்ன...
நீ வந்த கதை என்ன?"


மனைவி : இப்படியே ஆபீஸ் வேலைன்னு, குடும்பத்தை, பசங்கள கவனிக்காம சுத்திட்டே இருந்தீங்கன்னா...வயசான காலத்துல நம்ம புள்ளைங்க நம்மல கவனிக்காம போய்டுவாங்க.... நான் சொல்றது உங்க புத்தில, ஏறுதா இல்லையா...?

கணவன்:
"வீடு வரை உறவுவீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ......
கடைசி வரை யாரோ......"


மனைவி: பொண்ணு பாக்க வரும் போதே, என்னை விட என் பக்கதுல இருந்த பொண்ண பல்ல இளிச்சுட்டு பார்த்த போதே நினைச்சேன்...இந்த மாதிரியான ஆளு நமக்கு தேவையான்னு நினைச்சேன்....இருந்தாலும் ஏதோ லைட்டா தடுமாறிட்டேன்...இப்ப உங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்..*&%##########$%^%$$##$%%^$#$$

கணவன் :
சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக்குள்ள யாருமில்ல, எந்த நெஞ்சும் ஈரம் இல்ல
சம்சாரம்....
நேரம் வந்து நெருங்கி தொட்டா ஷாக் அடிக்கிற மின்சாரம்...மனைவி : ஏங்க..ரெண்டு நாளு நான் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன்...அடக்கமா இருங்க....ரெண்டே நாள்ல திரும்பி வந்துடுவேன்..ஆளில்லன்னு ஆட்டம் போடாதீங்க...

கணவன்:
"அட்றாட்றா நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..
ஏய் மாடு செத்தா, மனுஷன் தின்னா, தோள வச்சி மேளம் கட்டி,
அட்றாட்றா நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா.."

"ஹேப்பி...இன்று முதல் ஹேப்பி...
ஹேப்பி...இன்று முதல் ஹேப்பி..."மனைவி : இந்த மாதிரி ஏடாகுடமாவே பேசிட்டு இருக்கீங்களே...என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க என்னை பத்தி?

கணவன்:
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம், கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன......
காதல் வாழ்க....
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் !


கடைசியா கொஞ்சம் சமாதானமா முடிச்சுக்குறது தான் கணவர்களுக்கு பாதுகாப்பு !


சும்மா சிரிப்புக்காகவும், பொழுது போக்குக்காகவும் மட்டும் இந்த பதிவு !

LinkWithin

Blog Widget by LinkWithin