Friday, April 30, 2010

அழகை நிர்வாணமாக்கிய அசிங்கம் -எது அழகு ? எது அசிங்கம் ?

சமீபத்தில் படித்த ஒரு சின்ன கதையோடு தொடங்குகிறேன்.

கடவுள் சொர்கத்திலிருந்து அழகு, அசிங்கம் இரண்டையும் ஒரு சேர பூமிக்கு அனுப்பினார். அழகும், அசிங்கமும் தொலைதூரப் பயணத்தால் அழுக்குண்டு, கலைப்புற்று பூமியை வந்தடைந்தன.

அழகு தன் ஆடைகளைக் கழற்றி கரையில் வைத்துவிட்டு, குளிப்பதற்காக குளத்தில் இறங்கியது. அழகு குளித்துக்கொண்டிருந்தபோது, கரையில் இருந்த அசிங்கம், அழகின் உடைகளைப் உடுத்திக் கொண்டு போய்விட்டது. குளித்துவிட்டு கரைக்கு வந்த அழகு, தன் ஆடைகள் காணாமல் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. அதற்கு மாறாக அசிங்கத்தின் உடைகள் அங்கு இருந்தன. நிர்வாணமாக இருந்த அழகு, வேறு வழியின்றி அசிங்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டது. தன்னுடைய உடையை அசிங்கம் அணிந்து சென்றதை தெரிந்து கொண்ட அழகு, அசிங்கத்தைத் தேடி ஓடியது.

அழகு அசிங்கத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது !
உலகம் இப்படித் தான் இருக்கு என்பது போல முடியுது கதை !

அழகாகத் தெரியும் அனைத்தும் அழகும் அல்ல
அசிங்கமாகத் தெரியும் அனைத்தும் அசிங்கமும் அல்ல.பெரும்பாலும் வெளித்தோற்றத்தின் சிறப்பைச் சொல்லும் ஒன்றாகவே அழகு பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய இயல்பான உணர்ச்சிகளான சிரிப்பு, அழுகை போன்றவற்றை வெளிப்படுத்துவதில் கூட மற்றவர் கண்களுக்கு அழகாகத் தெரிகிறோமா என்று பார்க்கும் அளவிற்கு அழகு என்ற ஒன்று வெளித்தோற்றத்தின் கைகூலியாகவே சமுதாயம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

எத்தனையோ மீட்டிங்க்ஸ்ல சுத்தமா சிரிப்பே வராத ஒரு மொக்கை ஜோக்கை Client சொல்லுவார், இருந்தாலும் நாம விழுந்து விழுந்து சிரிப்பது போல பாவணை செய்வோம். ரொம்ப மட்டமான ஒரு ஐடியாவை நம் மேலாளர் சொல்லும் போது, சார் அருமையான ஐடியா சார்..நிச்சயம் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகும்னு சொல்லுவோம். இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும், நம்முடைய போலியான உணர்வுகளை வெளிப்படுத்தி நம்மை அழகாக காட்டிக்கொள்கிறோம்.

அழகு மாதிரியே தான் நாகரிகமும். இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஒரு இடத்தில் அல்லது ஒரு குழுவில் அழகு என்று சொல்லப்படும் ஒன்று மற்றொரு குழுவில் அழகில்லாமல் தெரியும். ஒவ்வொரு குழுவிற்கும் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக நடிப்பதின் பெயர் தான் நாகரிகமோ என்ற சொல்லும் அளவிற்கு இருக்கிறது நாகரிகம். நம்ம ஊர்ல வெறும் கைகளால் சாப்பிடுகிறோம், சீனாவில்/கொரியாவில் எதற்கெடுத்தாலும் குச்சி கொடுத்து சாப்பிடச் சொல்வார்கள். என்னை மாதிரி புதுசா பயன்படுத்துற பலருக்கு குச்சியில் எடுத்து சாப்பிட முடியாமல் போகும். அப்பொழுது கூட, ஒண்ணுமே சாப்பிடாம வந்தாலும் வருவோமே தவிர...கையில் மட்டும் சாப்பிட மாட்டோம்...நாகரிகம் : ) இது தான் அழகு, இது தான் நாகரிகம் என்று சொல்ல வரலைங்க..ஆனால் நமக்கு இப்படித் தான் விளங்கவைக்கிறாங்கன்னு தோணுது.

சமீபத்தில், என் தாய் தந்தைக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைத்தோம். அதற்காக அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்றிருந்தோம். நிறைய கிராமங்களுக்கு சென்றோம். பெரும்பாலும் நான் இதற்கு முன்பு நான் செல்லாத இடங்கள். ஒருத்தவங்க வீட்டுக்கு போனோம். கூரை வீடு 8க்கு 8 அடி இருக்கும். சானம் மொழுகி, சுத்தமாக இருந்த மண் தரை. வறுமையின் அடையாளங்கள் அனைத்தும் நிறைந்த வீடு. இரண்டு சிறுவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். குரல் கொடுத்தோம். ஒரு அம்மா ஓடி வந்தாங்க. "அடடே...வாங்க....வாங்க....." என்று சந்தோஷச் சிரிப்புடன் வரவேற்றார். அவர் முகத்தில் அடுப்புக் கறி அடையாளங்கள். பற்கள் சற்று வித்தியாசமாக(மேல் தூக்கி) இருந்தது. முதற்கணத்தில் இவை அனைத்தையும் மூளை படம் பிடித்தது. உடனே அவர், அந்த சிறுவனை எழுப்பி, பக்கத்து வீட்ல போய் ஸ்டூல் கொண்டு வா..மாமா க்கு...என்று சொல்லியபடி...என்ன சாப்பிடுறீங்க...என்று கேட்டார். அவர் முகமெல்லாம் அப்படி ஒரு சிரிப்பு, சந்தோஷம். நான் பல இடங்களில் பார்த்த சிரிப்பிற்கும் சந்தோஷத்திற்கும், முற்றிலும் மாறாக இருந்தது. போலித்தனமே இல்லை. நம்ம மனசுக்கு அது அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது. அட இது தான் அழகோ... நானெல்லாம் அசிங்கம் என்ற எண்ண வைத்தது.

எந்த ஒரு விஷயத்தையும் முதலில் உணர்ந்து கொள்வது நம் தலை தான். அதாவது, நம்முடைய கண்கள், காது, மூக்கு போன்ற உறுப்புக்கள் தான் வெளியில் என்ன நடக்கிறது என்பதை சொல்பவை. இவைகள் வெறும் மெசெஞ்சர்கள் தான். நடப்பவைகளை இந்த உறுப்புக்கள் முதலில் மூளைக்கு கொண்டு செல்கின்றன. ஏன்னா மூளைக்கும், கண்-மூக்கு-காது போன்ற உறுப்புக்களும் டிஸ்டன்ஸ் கம்மி. ஆனால்,மனசு(அ) இதயம்னு நாம சொல்லிக்கொள்கிற மேட்டர் தலையிலிருந்து கொஞ்சம் டிஸ்டன்ஸ். இதனால தான் என்னவோ....ஒருவரைப் பார்க்கும் பொழுது, ஒரு செயலை உணரும் பொழுது தலையின் உள்ளயே இருக்கும் மூளைக்கு முதலில் செல்வதால், முடிவை மூளையே எடுத்துக் கொள்கிறது. பெரும்பாலும், மனதிற்கு செல்ல விடாமல் செய்கிறது.

மூளை,போலியை பொலிவுபடுத்துகிறது நிஜத்தை நிராகரிக்கிறது.
அகம் (அ) மனசு உண்மையான அழகை வெளிப்படுத்துகிறது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் : )

கடைசியா என்ன தான் சொல்ல வர்ற என்று நீங்கள் கேட்பது புரியுது....தெரியல...அழகைப் பற்றி கொஞ்சம் யோசிச்ச போது எனக்கு தோன்றியவை இவை. சரியா தவறான்னு நீங்க தான் சொல்லணும் !

Thursday, March 25, 2010

ECONOMICS -கொஞ்சம் லோக்கலா !

ரொம்ப நாளாவே ECONOMICS பற்றி ஒரு சின்ன பதிவு போடணும்னு நினைச்சிட்டே இருந்தேன். ரொம்ப விரிவா எழுத உள்ள சரக்கு இல்லாத காரணத்தால், பொதுவாக உபயோகப்படுத்தும் ECONOMICS வார்த்தைகளை கொண்டு ஒரு பதிவு இது. அதுவும் கொஞ்சம் லோக்கலா...


பதிவுலகத்துல பல எகனாமிக்ஸ் ஜாம்பவாங்கள் எல்லாம் இருப்பாங்க. எனக்குத் தெரிஞ்ச எகனாமிக்ஸ் சொல்லி இருக்கேன். தவறான புரிதல் இருக்கலாம், ஏன் தப்பாக் கூட சொல்லி இருக்கலாம். குற்றம் குறை இருந்தால் சொல்லுங்க...தெரிஞ்சிக்குறேன்,திருத்திக்குறேன் !

INFLATION :


படிக்குற சமயத்தில் பாக்கெட் மணி 20 ரூ தான். அதுலயே...5 சிகரெட், 3 டீ, 2 வெண்ணை பிஸ்கட், போக வர ப்ஸ் டிக்கெட் என எல்லா செலவுக்கும் போதும். ஆனால், இப்போ அதே 20 ரூபாய்ல 4 சிகரெட் மட்டும் தான் வாங்க முடியும். அதாவது, போன வருஷம் ஒரு ரூபாய்ல இரண்டு கடலை மிட்டாய் வாங்க முடிஞ்சுது, அதே ஒரு ரூபாய்க்கு இந்த வருஷம் ஒரு கடலை மிட்டாய் தான் வாங்க முடியுது. அப்போ கடலை மிட்டாய் INFLATION 50% அதிகரித்தது என்று பொருள். இது தான் INFLATION. ஆனால், இதை எந்தெந்த பொருட்களை வைத்து கணக்கிடுகிறார்கள்...முக்கியமான பொருட்கள் அனைத்து இரண்டு மூன்று மடங்கு விலை உயர Inflation 10% தான் இருக்குதாமே...! அதுமட்டுமல்ல, கடந்த வருடம் INFLATION 0% க்கும் குறைவாக இருந்த போது கூட எல்லாவற்றின் விலையும் உச்சத்திலேயே இருந்துச்சே...அது எப்படி ?


அதனால, என்னைப் பொருத்த வரை, எகனாமிக்ஸ்லியே கிட்ட தட்ட ஒரு டுபாக்கூர் டேட்டா எதுன்னு பார்த்தோம்னா அது INFLATION தான்.


DIVESTMENT


கல்லூரிக் காலங்களில், கையில, கழுத்துல போட்டு இருக்க நகையை அடகு வச்சு,விற்று சரக்கு அடிப்போமே...அதே மாதிரி அரசிடம் உள்ள கம்பெனியின் பங்குகளை விற்று, தற்காலிகமாக துண்டு விழும் தொகையை சமாளிப்பது தான் DIVESTMENT. இந்த துட்டை வச்சிகிட்டு தான் ரோடு, பிரிட்ஜ் கட்டுவாங்களாம் ! நாம கொடுக்குற வரிப்பணம் என்ன ஆச்சுன்னு கேட்கக் கூடாது. உனக்கு economics தெரியாதுன்னு சொல்லிடுவாங்க பொம்மை சிங்கும், ப்ளேனிங்க் கமிஷனும் : ) !


Gross Domestic Product (GDP)


GDP- இதை வச்சி தான் நாட்டோட பொருளாதாரம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிப்பாங்களாம். ஏழை நாடா...வளரும் நாடா, வளர்ந்த நாடா என கண்டுபிடிப்பாங்களாம்.


நாட்டினுடைய Consumption, முதலீடு, ஏற்றூமதி, இறக்குமதி, அரசின் செலவுகள் இதெல்லாம் வச்சி, கூட்டி கழிச்சு இந்த GDP யை கணக்கு செய்றாங்க. GDP நல்லா இருந்தால், அந்த நாட்டு மக்கள் சூப்பரா இருப்பாங்க, கம்மியா இருந்தா கர்ம கொடூரமா இருப்பாங்கன்னு சொல்றது தான் இந்த GDP. நல்ல GDP உள்ள நம்ம நாட்டுல தான், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களே கிட்ட தட்ட 30 சதவிகிதம் மக்கள் என்றால் பார்த்துக்கோங்களேன். (அதாவது ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 25 ரூபாய்க்கும் கம்மியா வருமானம் இருக்கவங்க தான் வறுமைக் கோட்டிற்கு கீழ இருக்கவங்க.)


இது தான் India Growth Story : )


LIBERALISATION / GLOBALISATION


உங்க ஊர்ல நான் கடை போடுவேன்...எங்க ஊர்ல நீ கடை போட்டுக்கோ....இது தான் LIBERALISATION / GLOBALISATION.ஆனால், நம்ம இந்திய அரசு போடுகிற டீல்ஸ் எல்லாம் ரொம்ப வித்யாசமானது. நாமலே....தேடிப் போய் ஆப்பு மேல உட்கார்ந்துக்குற மாதிரியான டீல்கள் தான் பெரும்பாலும். நியூக்ளியர் டீல் இதற்கு உதாரணம். அதாவது, இந்தியாவிற்கு அணுஆயுத தொழில்நுட்பம், மின்சாரம் போன்றவற்றிற்கு நாங்க உதவுகிறோம். ஆனா, சின்ன கண்டிஷன். அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது. எங்க ஊர் கம்பெனிங்க தான் இந்தியாவில் கடை விரிக்கும். அதில் வரும் லாபம் மொத்தம் எங்களுக்கு. ஆனால், அணுஆயுத விபத்து ஏற்பட்டால், நாங்க நஷ்ட ஈடு தரமாட்டோம். அதை இந்தியாவே கொடுக்கணும்...இப்படி ஒரு அதிபுத்திசாலி டீல். இதே மாதிரி தான் பிடி கத்திரிக்காய் கதையும்.


ஆஹா...இந்தியா ஒரு லிபரலைஸ்டு எகானமி : ) !


SUBSIDY


ஹ்ம்....இதை எப்படி சொல்றது..சரி...
உதாரணமா, அரசு, 2500 ரூபாய்க்கு ஷிவாஸ் ரீகல் விஸ்கியை வாங்கி, நம்ம சந்தோஷத்துக்காக 1500 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அதற்கு அரசு வழங்கும் மானியம்1000 ரூபாய். இது தான் SUBSIDY. பெட்ரோலியப் பொருட்களை சர்வதேச விலைக்கு வாங்கி, நம்ம ஊர் மக்கள் வாங்குற அளவுக்கு விலையைக் குறைத்து, அதன் இழப்பை அரசு மானியமாகத் தருகிறது.


இவ்ளோ கஷ்டப்பட்டு அரசு மானியம் கொடுக்குறது சரி...அப்புறம் எதுக்கு, அதே பொருட்களுக்கு மத்திய அரசு தனியா வரி, மாநில அரசு தனியா வரி விதிக்கணும்...அமெரிக்கா போன்ற உலக நாடுகளை விட இந்தியாவில் தான் பெட்ரோலியப் பொருட்கள் விலை அதிகமா இருக்குன்னு நீங்க கேள்வி கேட்டால்.....அதை அப்படியே நம்ம பெட்ரோலியத் துறை அமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் தான் forward பண்ணனும் : )


RATE HIKE:


கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி எகனாமிக் டைம்ஸ் பேப்பர் படிக்குறதுக்கே பயமா இருக்கும். பல வார்த்தைகள் கேள்விப்படாதவைகளாக,தெரியாதவைகளாக இருக்கும். அதுல ஒண்ணு இந்த வட்டி விகித உயர்வு. ஏன் உயர்த்துறாங்க...ஏன் குறைக்குறாங்கன்னு புரியாமலே இருந்துச்சு...


ஆனால், இப்போ சின்னக் குழந்தைங்க கூட கரெக்டா சொல்றாங்க....GDP குறையப் போகுதா.....வட்டியை குறை...நிறையபேரு கடன் வாங்குவான், பணப்புழக்கம் ஏற்படும், எகனாமி வலுவு பெரும்......Inflation ரொம்ப ஜாஸ்தியா போகுதா வட்டியை ஏற்று..எவனும் கடன் வாங்கமாட்டான், பணப்புழக்கம் குறையும்...Inflation உம் குறையும்....இது இரண்டுத்தையும் கரெக்டா பேலன்ஸ் பண்ற வேலையைத் தான் நிதி அமைச்சகம், ப்ளானிங்க் கமிஷன் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா செய்றாங்களாம் !

ஹ்ம்ம்...அதென்னவோ போங்க.....இந்தியாவின் GDP வளரும் போது மட்டும், எங்கள் அரசின் பொருளாதாரத் திட்டத்தில் தான் இத்தனை சதவிகிதம் வளர்ச்சின்னு மார் தட்டுற சிங்கங்கள், விலை ஏற்றம் ஏன் ? என்று கேட்டால் உலகப் பொருளாதார வீழ்ச்சின்னு சொல்ல எப்படித் தான் மனசு வருதோ...தெரியல..

பொள்ளாச்சியில் விளைகிற தக்காளி விலை ஏற்றத்துக்கும், பஞ்சாப்பில் விளைகிற நெல், பருப்பு போன்ற பொருட்களின் விலை ஏற்றத்துக்கும் கூட உலகப் பொருளாதார வீழ்ச்சி தான் காரணம்னு சாமர்த்தியமா எதையாச்சம் சொல்லி, ஜனங்கள நம்பற வைக்கிற, எகனாமிக்ஸ்ட்களின் திறமை நம்ம கிட்ட இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும் !

Friday, March 19, 2010

Pre-KG க்கே கிழியுதே !

"என்னங்க....நம்ம தீபுவுக்கு 2 1/2 வயசு ஆகுது....Pre-KG சேர்க்கணும்...எதாச்சும் ஸ்கூல் பார்த்தீங்களா ? இல்லையா ? நம்ம வீட்ல இருந்து ஒரு கிமீ தூரத்துக்குள்ள இருக்கணும். குழந்தையை நல்லா பார்த்துக்கணும். எத்தனை தடவை சொல்லிட்டே இருக்குறது...பொறுப்பே இல்லாம இருக்கீங்களே...மத்தவங்க எல்லோரும் அவங்க அவங்க பிள்ளைங்களுக்கு எப்படி எல்லாம் தேடுறாங்க...நீங்க மட்டும் ஏங்க இப்படி இருக்கீங்க...." என்று தங்கமணி மறுபடியும் ஒரு அலர்ட் விட்டாங்க.

சரிம்மா. இன்னைக்கே போய் ஒரு நாலு ப்ளே ஸ்கூல் பார்ப்போம். எது நல்லா இருக்குன்னு நீயே முடிவு பண்ணிக்கோ..அதுல சேர்த்துடலாம்.. என்று சொல்லி பையனை கூட்டிட்டு கிளம்பினோம்.

ஏங்க...வெங்கட்நாராயணா ரோட்டுல நான் ஒரு ப்ளே ஸ்கூல் பார்த்தேங்க....நல்லா இருக்க மாதிரி தெரியுது....அதுக்கே முதல்ல போவோம் என்று தங்கமணி ஆணை பிறப்பிக்க, நேராக அந்தப் ப்ளே ஸ்கூல்க்கு போனோம். மாடியில் ஒரு வாடகை வீடு. அது தான் ப்ளே ஸ்கூல். கொஞ்சம் நேரம் கழிச்சு ஒரு பெண்மணி வந்தாங்க. Admission Enquiryக்காக வந்திருக்கீங்களா...இருங்க மேடம் வருவாங்க என்றார்.

சரி. அவங்க வர்றதுக்குள்ள, லைட்டா ஸ்கூல் உள்ள எட்டிப் பார்த்தேன். ஏறக்குறைய 30 பசங்க இருந்தாங்க. 1 சறுக்காமரம்(Slider),1 சீ சா, வீடு முழுக்க ஸ்டிக்கர், ஒரு ஆயா, ஒரு மேடம். ஓஹோ...இது தான் ப்ளே ஸ்கூலா....அட பெரிய முதலீடே இல்லாம, இப்படி ஒரு அருமையான தொழிலா ? என்று நினைச்சிட்டே இருந்தேன். மேடம் வந்துட்டாங்க.

ஒரு சில விசாரிப்புக்களுக்குப் பிறகு, 1 1/2 வயசுக்கு Day Care, 2 வயசு ஆச்சுன்னா ப்ளே ஸ்கூல், 2 1/2 வயசுக்கு Pre-KG, உங்க பிள்ளையை எதுல சேர்க்க வந்திருக்கீங்க என்றார். 2 1/2 வயசு ஆயிடுச்சு...தீபு வை Pre-KGல சேர்க்கணும். என்றோம். என் மகனிடம், பெயர், அப்பா பெயர்,ஊர் பெயர் என அவர்கள் கேட்ட விஷயங்களுக்கு பதில் சொன்னான்.

உங்க பையன் ABCD சொல்லுவானா ? என்று கேட்டாங்க மேடம். உடனே...அபியும் நானும் படம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு...உங்க பொண்ணுக்கு நீச்சல் தெரியுமா? என்று பிரின்சிபல் கேட்பார். இல்லைங்க மேடம்...இப்போ தான் நடக்கவே ஆரம்பிச்சிருக்கா...என்பார் பிரகாஷ்ராஜ். இல்லைங்க மேடம்...இப்போ தான் ABCD சொல்லி கொடுத்துட்டு இருக்கோம். சரி. இங்கிலீஷ் ரைம்ஸ் ஏதாச்சும் சொல்லு தீபு என்றார் என் மகனிடம். நார்மலா ஒண்ணு ரெண்டு வரி ரைம்ஸ் சொல்றவன், அவங்க கேட்டப்ப, வாயே திறக்கல. சரி தீபு, அதோ அது என்ன என்று கையை நீட்டி கேட்டார். அது என்னடான்னு நான் திரும்பி பார்த்தேன். கண்ணன் வெண்ணை சாப்பிடுற மாதிரி ஒரு படம் இருந்துச்சு. தீபு, கண்ணா ஜேஜி சொல்றா என்றேன். "டேடி, வெளியில ஆட்டோ டுர்ர்ர்ன்னு போகுது...டேடி" என்றான் வெளியில் எட்டிப் பார்த்தபடி. அந்த மேடம் குறுக்கிட்டு, அது கேலண்டர் என்றார். அடங்கொய்யால, கண்ணன் படத்தைத் தான் கேட்டாங்கன்னு நினைச்சா...அதுக்கும் கீழ ஒரு கேலண்டர் தொங்கிட்டு இருக்கு. அது, நமக்கே தெரியல.

மேஜையில் ஒரு flower vase வச்சிருந்தாங்க. தீபு, அந்த Flower என்ன கலர் சொல்லு பார்க்கலாம் என்றார் மேடம். Sun Flower என்று சொல்லிவிட்டு, என்னை திரும்பிப் பார்த்தான். டேய் ராசா...எனக்கு அது என்ன பூன்னு தெரியாதுடா...ஆளை விட்டுறுடா என்ற பாணியில் பார்த்தேன். உடனே மேடம் குறுக்கிட்டு...நோ நோ....அது Daisy என்றார். நல்ல வேலை, நம்மல கேட்கல என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். சரி தீபு, மேடம்க்கு ஒரு திருக்குறள் சொல்லுடா என்றதும், தங்கமணி சொல்லிக் கொடுத்த 3 திருக்குறளை அப்படியே சொன்னான். ஹோ...தமிழ் தான் சொல்லிக் கொடுத்திருக்கீங்களா என்றார் மேடம்.

சரிங்க ஃபீஸ் 22000 ரூ. ரிஜிஸ்ட்ரேஷன் 100 ரூ, இன்னைக்கே பண்ணிக்கோங்க. மூன்று நாட்களுக்குள் மொத்த ஃபீஸ் பே பண்ணிடனும் என்று மெயின் மேட்டருக்கு வந்தார். அடேங்கப்பா....22000 ரூபாயா ? Govt பொறியியல் கல்லூரியில், என்னுடைய 4 வருட படிப்பின் மொத்த கட்டணமே 11500 ரூபாய் தானே. Pre-KGக்கே நம்ம ட்ரவுசர் கிழியுதே, அடுத்து ஸ்கூல் காலேஜ்னா....அடேங்கப்பா...சுமாரா வருமானம் வருகிற பொட்டி தட்டுற வேலையில இருக்க நமக்கே இப்படின்னா....குறைவா வருமானம் இருக்கவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க... என்று நினைத்துக் கொண்டேன்.

தங்கமணி, ஸ்கூல் டைமிங்க்ஸ் பற்றி விசாரிச்சாங்க. இந்த வருஷம் 9 AM -12 AM, ஆனா, இப்போ syllabus அதிகப் படுத்துறாங்க....நிறைய montessori materials கொடுக்குறாங்க...அதனால 9 AM -1:30 AM வரைக்கும் ஸ்கூல் இருக்கும் என்றார். தங்கமணிக்கு ஒரே ஷாக்...ஐயோ...குழந்தையை 4 1/2 மணி நேரம் தனியா விடணுமா...என்று யோசனையில் மூழ்கினார். சரிங்க மேடம், நாளைக்கு வந்து சொல்றோம் என்று கிளம்பினோம். மேடம் குறுக்கிட்டார். எவ்வளவோ சமாளித்துப் பார்த்தாலும், ரிஜிஸ்ட்ரேஷன் இன்னைக்கே பண்ணிக்கோங்க...என்று ஒற்றைக் காலில் நின்றார். மேடம், அவ்ளோ காசு என்னால உடனே புரட்ட முடியாது என சொல்லி எஸ்கேப் ஆனோம்.

அது என்னவோ, தங்கமணிக்கு அந்த ஸ்கூல் பிடிக்கல.அதன் பிறகு, இன்னும் இரண்டு ப்ளே ஸ்கூல் போய் பார்த்தோம். அதே வாடகை வீடு, அதே சருக்காமரம், அதே மாதிரி மேடம், அதே மாதிரி கட்டணம். வீட்டில் இருப்பதற்கும், பள்ளிக்கு அனுப்புவதற்கும் பெரிதாக வேறுபாடு இருக்க மாதிரி தெரியல. ஏன்மா...பேசாம, டைரக்டா அடுத்த வருஷமே LKG சேர்த்துடலாமே... .இல்லைன்னா...2 or 3 months மட்டும் நம்ம பக்கத்து வீட்ல சின்னதா ஒரு ப்ளே ஸ்கூல் இருக்கே...அதுல சேர்த்துடலாமா? சும்மா போய் விளையாடிட்டு வரட்டும்... நம்ம குழந்தைப் பருவ காலங்களில் எல்லாம், நல்லா விளையாடுவோம். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் திருடன் போலீஸ், கண்ணாமூச்சி என நமக்கெல்லாம் நல்லா விளையாடும் வாய்ப்புக்கள் இருந்துச்சு. ஆனா, இப்போ, குழந்தைகளை வெளியில் விளையாட விடுறோமா ? அக்கம் பக்கத்துல யாரு இருக்காங்கன்னே நமக்கு தெரியாது. குழந்தையும் நம்ம மூஞ்சியையே 24 மணி நேரமும் பார்த்துட்டு இருக்கு. டேய்...அதைப் பண்ணக் கூடாது, அந்தத் தண்ணியை குடிக்கக் கூடாது, அதைத் தொடக் கூடாது, அதுல ஜெர்ம்ஸ் இருக்கு...இதுல பேக்டீரியா இருக்கு...இதைத் தொட்டா ஜூரம் வரும். இப்படி, இதையெல்லாம் கேட்டு கேட்டு குழந்தைங்க மனசுக்குள்ள நம்மல பச்சை பச்சையா திட்டுற மாதிரியே எனக்கு ஒரு பீலிங்க் : ) ..இதற்கு ஒரு வ்டிகாலாகத் தான், பிள்ளைகளை ப்ளே ஸ்கூல் அனுப்பணும்குறது என்னுடைய கருத்து. என்னம்மா சொல்ற...என்றேன்.

நீங்க வேற, உங்களுக்கு ஒண்ணுமே தெரிய மட்டேங்குது... LKG சேர்க்கும் போது, Pre-KG அனுப்பினீங்களா இல்லையான்னு கேட்பாங்க......இதெல்லாம் LKG admissionக்கு ரொம்ப முக்கியம். உங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியும். தமிழ்மணத்துல,தமிழிஷ்ல இன்னைக்கு யார் அதிக ஓட்டு வாங்கி இருக்காங்க...யார் இந்த வார நட்சத்திரம்.....எந்த ப்ளாக்ல சண்டை ஓடுது....நீங்க அடிச்ச கமெண்ட்டுக்கு யார் உங்களை திட்டி இருக்காங்க....அதையேப் போய் பாருங்க.... என்றார் ஒரு கொதிப்புடன்.

தேடல் தொடரும் : ) !

Thursday, February 4, 2010

கிராமத்துப் பாரிஜாதமா ?? நகரத்துப் பிரதிக்க்ஷா வா?

கிராமத்துப் பொண்ணா ? நகரத்துப் பொண்ணா ? இதுல, எந்தப் பெண் உனக்கு மனைவியாக வரணும்னு ஆசைப்படுவ ? என்று ஆண்களிடம்(தமிழக) ஒரு கேள்வி கேட்டால், பெரும்பாலானவர்களிடமிருந்து, கிராமத்துப் பொண்ணு தான் என்று சடார்னு ஆணித்தரமா பதில் வரும்.


அது என்னடா பொண்ணுல, கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு அப்படிங்குற வித்யாசம். இதுல நம்மாளுக்கு ஏன் கிராமத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு பிரியம், நகரத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு வெறுப்பு என கொஞ்சம் அலசுவோம்.


கடைசியில் போட வேண்டிய டிஸ்கிய பதிவிலேயே சொல்லிடுறேன். பொதுவாக ஆண்களின் எண்ணத்தில் நிலவிக் கொண்டிருக்கும் சில விஷயங்களை அலசுவதே இப்பதிவின் நோக்கம். எல்லா ஆண்களும் இப்படித்தான்னு நான் சொல்ல வரலைங்க. எல்லா கிராமத்துப் பொண்ணும் இப்படித்தான், எல்லா நகரத்துப் பொண்ணும் இப்படித்தான்னு சொல்ல வரல.
ஆலமரம், நாட்டாமை, சொம்பு எல்லாம் இங்க இல்லை என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் : ).


சரி மேட்டர்க்கு வருவோம்.


பொதுவாகவே ஒரு மெண்டாலிட்டி. கிராமத்துப் பொண்ணுன்னா(பாரிஜாதம்), அடக்க ஒடுக்கமா இருப்பாள், குடும்பத்து நிலைமையை அனுசரிச்சு நடந்துப்பாள், சொந்த பந்தங்களிடம் நன்றாக நடந்துப்பாள், உள்குத்து வெளிக்குத்து தெரியாத வெகுளியா இருப்பாள். மொத்தத்தில எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டாள். சந்தோஷமா குடும்பத்தை ஓட்டலாம் என்பது நினைப்பு.


நகரத்துப் பெண் (பிரதிக்க்ஷா), ஈகோ புடிச்ச பொண்ணு, ரூல்ஸ் பேசுபவள்.குடும்பத்தை அனுசரிக்கத் தெரியாதவள், உள்குத்துக்களின் ராணி, கூட்டுக் குடும்பத்தினை உடைக்க வந்த உளவாளி. கிட்ட தட்ட, ஆப்பைத் தேடி தானே உட்கார்ந்து கொள்வது மாதிரி நினைக்குறாங்க.


இந்த மாதிரி ஒரு definition கொண்ட பெண் தான் கிராமத்துப் பெண், நகரத்துப் பெண் என ஸ்ட்ராங்கா மண்டையில ஏற்றிவிட்டிருக்காங்க. சும்மா ஒரு அடையாளத்துக்குத் தான் இந்த கிராமத்துப் பெண்,நகரத்துப் பெண் என்ற பெயர்களெல்லாம். எல்லா ஊர்களிலும் இவ்விருவரும் இருக்காங்க.


கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு சாதக-பாதகங்கள் என்ன ? ஏன் நம்மாளு கிராமத்துப் பொண்ண prefer பண்றார்னு பார்க்கலாம்.


ஏன் மா, இன்னைக்கு சனிக்கிழமை...வீக் எண்ட்... பீச் போகலாமா...?

பாரிஜாதம் : ஹ்ம்ம் போகலாங்க...!
(பட்ஜெட் பத்மனாபி : ) )
பிரதிக்க்ஷா :பீச் வேணாம்ங்க....முதல்ல கிளம்பி, பிட்சா கார்னர் போயிட்டு ஒரு Combo Pack முடிச்சிட்டு...அப்புறம் மாயாஜால் போயிட்டு சினிமா பார்த்துட்டு, அப்படியே வரும்போது அஞ்சப்பர்ல டின்னர் முடிச்சுட்டு வந்துடுலாம்ங்க...
(ராயல் சீமா ராஜலக்ஷ்மி : ) )

என்ன மா, நேத்து வச்ச, அதே குழம்பை ஃப்ரிட்ஜ்ல வச்சி கொடுக்குற, வேற செய்யக் கூடாதா ?

பாரிஜாதம் : கடைக்குப் போகணும். வீட்ல ஒண்ணுமே இல்லை. உங்க கிட்ட நேத்தே சொன்னேன் நீங்களும் மறந்துட்டீங்க.
பிரதிக்க்ஷா :ஏன், இதுக்கு முன்னாடி நேத்து வச்ச குழம்பு, நீங்க சாப்பிட்டதே இல்லையா ? அவ்வளவு பாக்குறவர், நேத்தே, நான் கேட்டதை வாங்கிட்டு வர வேண்டியது தானே...!


எங்க அக்காவோட கல்யாண நாள் வருது. புடவை எடுத்துக் கொடுக்கலாம்னு இருக்கேன்....நீ வர்றீயா...

பாரிஜாதம் :நான் வர்றேங்க....உங்க அக்கா கிட்ட சிவப்பு கலர், ராமர் கலர் புடவை எல்லாம் இருக்கு, மயில் கழுத்துக் கலர்ல வஸ்திரகலா பட்டு எடுத்துக் கொடுப்போம்ங்க. போத்தீஸ் போலாம்...
பிரதிக்க்ஷா : ஹ்ம்ம்...வர்றேங்க...உங்க அக்காவுக்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்ல போய் ஒரு அருமையான காட்டன் சேரி எடுத்துட்டு....அப்படியே அங்க இருந்து நல்லி சில்க்ஸ் வந்து, எங்க அம்மாவுக்கு ஒரு சில்க் காட்டன் புடவை எடுத்துட்டு வரலாம்ங்க...

இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட, கிராமத்துப் பெண்ணின் அணுகுமுறையும், நகரத்துப் பெண்ணின் அணுகுமுறையும் பெருமளவு வித்தியாசமா இருக்குங்க. அதுல கிராமத்துப் பெண்ணின் அப்ரோச் நல்லா இருக்க மாதிரி தெரியுது.

சரி இதையெல்லாம் ஒரு புறம் யோசிச்சுப் பார்த்தாலும், நமக்குள்ள ஒரு சின்ன டவுட்...

நம்மாளு பயப்படுறாரோன்னு ஒரு சந்தேகம். இன்றும் கூட, பொதுவாகவே பெண் தேடும் போது தன்னைவிட குறைவா படிச்ச, தன்னைவிட குறைவா சம்பாதிக்குற பெண்ணைத் தான் நம்மாளு தேடுவார். இது தான் பேசிக் மாதிரி ஆயிடுச்சு. ஆக, தன்னைவிட எதிலும் உயர்வான பெண்ணை ஏற்றுக் கொள்ளும் மனம் வரவில்லையோ ?

அதுவும் இல்லாம, நம்முடைய வீட்டு சூழல் பார்த்தீங்கன்னா, நம்ம அப்பா, அம்மாவை பார்த்து வளருகிறோம். பெரும்பாலான, வீடுகளில் அப்பா ரொம்ப டாமினண்ட் இருப்பார்(அந்த காலத்துல). அம்மா அமைதியா அப்பா சொல்லை எதிர்த்துப் பேசாமல், அப்படியே நடக்கக் கூடியவராக இருப்பார். அதைப் பார்த்தே வளர்ந்த நம்மாளு, நமக்கு வரப் போகின்ற மனைவியும் கிட்ட தட்ட அதே மாதிரி வேணும்னு எதிர்ப்பார்க்குறான்னு நினைக்கத் தோணுது.

குடும்பம் நடத்துறதுல இரண்டே ஆப்ஷன்ஸ் தான். ஒண்ணு, சிதம்பர ஆட்சின்னு நாம சொல்றது. அதாவது ஆண் தான் CEO. இன்னொன்று மதுரை ஆட்சி,அதில் பெண் தான் CEO. ஒரு நாட்டுக்கு ஒரு பிரதமர்,ஒரு அதிபர் மாதிரி, ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைவர் தான். இந்த வகையில் பார்க்கும் போது, கிராமத்துப் பெண்ணை மணந்தால், அந்தத் தலைவர் பதவி நமக்கே கிடைக்கும் என்று நம்மாளு நினைக்கிறாரோ? நம்மாளு தான் CEO என்றால், கூட்டுக்குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு.

இப்படி நம்மாளு கிராமத்துப் பெண்ணைத் தேடுவதில் பல காரணங்கள் இருக்கு.

பெண் என்று பார்த்தால் அனைவரும் ஒன்று தான். எல்லோருக்கும் கிட்ட தட்ட ஒரே மாதிரியான குணம் தான். ஆனால், அதனை வெளிப்படுத்தும் முறைகளில் தான் மாற்றமே தவிர, அடிப்படையில் இருவருமே ஒரே மாதிரி தான்!

சரி, கடைசியா ஒரே ஒரு கேள்வி, பார்த்திபன் கனவுல உங்களுக்கு புடிச்சது (பாரிஜாதம்)சினேகாவா ?
(பிரதிக்க்ஷா) சினேகாவா?

Saturday, January 9, 2010

எஸ் ஐ உசுரு, அமைச்சருக்கு மசுரு!

சமீபத்தில் நடந்த கொலை வெறித் தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தது அனைவரும் அறிந்ததே. அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லாத காட்டு மனிதர்களாக நாம் இருந்தாலும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு பதிவுக்குள் செல்வோம்.

டிவி நியூஸ்ல பார்த்தேன். யாரோ ஒருவர் ரோட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். தலையில் பலத்த காயத்துடனும், ஒரு கால் துண்டுபட்ட நிலையிலும், துடித்துக் கொண்டிருக்கிறார். உதவி கேட்டு கதறிக் கொண்டிருக்கிறார். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. சிறிது நேரத்தில் அமைச்சர்களின் வாகனங்கள், மற்றும் பாதுகாப்பு அலுவலர்களின் வாகனங்கள் வருகிறது. உடல் நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விளையாட்டு அமைச்சர் மொய்தீன் கான் மற்றும் மாவட்ட கலெக்டர், ஹெல்த் செக்ரடரி என அனைவருமே அந்த இடத்தில் இருக்கின்றனர்.. காரை விட்டு யாருமே வெளியே வரவில்லை. 8 நிமிடம் கழித்து கலெக்டர் காரிலிருந்து வெளியில் வந்து ஆம்புலன்சிற்கு போன் செய்கிறார். ஆம்புலன்ஸ் வரத் தாமதாகும் என்று கலெக்டர் உணர்கிறார். 20 நிமிடங்கள் வரை அமைச்சர் காரிலேயே அமர்ந்திருக்கிறார். பிறகு வந்து விசிட் அடிக்கிறார். பிறகு கலெக்டரின் உத்தரவுப்படி பாதுகாப்பு அலுவலர்களின் வாகனத்தில் குத்துயிரும், கொலைஉயிருமாய் இருந்த எஸ் ஐ வெற்றிவேலை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். ரத்தம் அதிகம் வெளியேறியதால், வழியிலேயே பரிதாபமாக உயிர் இழக்கிறார்.

என்ன சொல்றதுன்னே தெரியல. அவர் அப்படி துடித்துக்கொண்டு உதவிக்காக கதறுகிறார், ஒருத்தர் கூட உதவி செய்யல. இதே மாதிரி நாம அடிப்பட்டு கிடந்து, சுற்றி எல்லோரும் இருந்து, எல்லா அதிகாரியும், அமைச்சரும் இருந்து, நம்மை காப்பாற்ற யாரும் வரலைன்னா எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். ஐயோ....ரொம்ப கொடுமை.

கொஞ்சம் முன்னாடியே யாராவது கூட்டிட்டுப் போய் இருந்தால் இந்நேரம் அவர் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கும்.

வெற்றிவேலின் நிலைமையில் நாம இருந்தோம்னா, அந்தக் கடைசி உயிர் பிரியுற நேரத்துல நிஜமா என்ன நினைச்சு இருப்போம்? அவருடைய அந்த நிலைமை எப்படி இருந்திருக்கும்னு நமக்கு தெரியாது. இருந்தாலும், அவர் நிலைமையில் இருந்தால், இப்படித் தான் நான் நினைச்சு இருப்பேன்.

எத்தனை தடவை இதே அமைச்சர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இரவெல்லாம் கண்விழித்து வேலை பார்த்திருப்போம். அரசியல் கும்பல் தலைவர்கள் வீட்டு கல்யாணத்திலிருந்து, காரியம் வரை எவ்வளவு செஞ்சி இருப்போம். இந்த நேரத்துல பக்கத்துல இருக்க ஒரு ஆஸ்பித்திரிக்கு கூட கொண்டு போய் சேர்க்க மாட்றாங்களே ! நாம செத்துக்கிட்டுறுக்கோம்...காரை விட்டே வெளிய வரமாட்டேங்குறாங்க...... எத்தனையோ முறை உங்களின் கார் கதவுகளை ஓடி வந்து திறந்துவிட்டிருக்கேன். இப்பொழுது என்னுடைய குருதியின் நாற்றம் உங்கள் கார்களை சேதப்படுத்தும் என்று, எட்ட நின்று வேடிக்கைப் பார்க்கிறீர்களா? உங்கள் வீட்டு மனிதர்கள்... வேண்டாம்..அவங்க நல்லா இருக்கட்டும், உங்க வீட்டு நாய் அடிபட்டிருந்தால் இதே மாதிரி தான் நடந்து கொண்டிருப்பீர்களா? உடல் சிதைந்து குருதி பீய்ச்சும் வலியை விட, என் உயிரை காப்பாற்ற ஒருவரும் வரலியே அப்படிங்குற மன வேதனை தான் அதிகமா இருந்திருக்கும்.

இது நார்மல் தானே. இங்க சிட்டிலேயே, ஆக்சிடெண்ட் ஆகி அடிபட்டவங்களை ஒரு பரிதாப லுக் விட்டுட்டு, ஆண்டவா காப்பாத்திடுப்பா ந்னு ஒரு வேண்டுதலை போட்டுட்டு, டைம் பாத்துட்டு, அடிபட்ட மனுஷன கண்டுக்காம போறாங்களே...அப்படின்னு கேட்கலாம். பெரும்பாலான சமயங்களில், விபத்துக்களில் காயம் பட்டவர்களை நல்லுள்ளம் படைத்தவர்கள் உடனடி சிகிச்சை கொடுப்பதை எல்லோரும் பார்த்திருப்போம். அப்பாடி, அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்க...அப்படின்னு ஒரு திருப்தி இருக்கும். சிறு காயமாக இருந்தால், அவர்களின் வாகனத்தை ஓரம் கட்டி, அவருக்கு முதலுதவி செய்வதை எல்லாம் பாத்துட்டுத் தானே இருக்கோம்.

இங்க வெற்றிவேலுக்கு நடந்த விஷயம் அப்படியல்ல. அவர் நல்லவரா, கெட்டவரா, பின்னணி,என்ன செய்தார் அது இப்போ தேவையில்லாத விஷயம். ஒரு மனுஷன் வெட்டுபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். சக மனுஷனா இருந்தா காப்பாற்ற முயற்சி செய்யணும். ஒரு காகத்திற்கு அடிபட்டதை பார்த்த மற்றொரு காகம், கரைந்து ஒரு கூட்டத்தையே அழைக்குமாம் உதவி செய்ய. அவைகளுக்கு இருக்கும் உணர்வு கூட நம் அரசியல் வர்கத்திற்கும், அதிகார வர்கத்திற்கும் இல்லாதது ரொம்ப கொடுமை.
மக்களின் சேவையே எங்கள் உயிர் மூச்சு என்று சொல்லி, எப்படி தான் உங்களுக்கு ஓட்டு கேட்க மனசு வருதோ தெரியல ?

சாதாரண ஆளுங்க, இந்த மாதிரி சமயத்துல பெரும்பாலும் பயப்படுவது, ஏதாவது போலீஸ் கேஸ் ஆயிடுமோ...நமக்கு எதுக்கு வம்பு என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இங்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் அடிபட்டு உதவிக்காக கதறுகிறார், அதற்கான உரிய அதிகாரிகளே அந்த இடத்தில் இருந்தும், போதாக்குறைக்கு அமைச்சர்களே இருந்தும் இப்படி நடந்திருப்பது மகாக் கேவலம். இரக்கமில்லா மந்திரிகள்(மனிதர்கள்) என்று தான் சொல்லணும்.

காரை விட்டு வெளியே கூட வராமல், அமைச்சர் உட்கார்ந்திருக்கிறார் என்றால், சாமானியனின் உயிர், உங்களுக்கு ம....ஆக கூட தோன்றவில்லை என்றே தெரிகிறது.

சரிங்க...என்ன பண்றது டிவி பார்த்ததுல இருந்து, ரொம்ப டிஸ்டர்ப் ஆயிடுச்சு அதான் கொட்டி தீர்த்துட்டேன்.

ஜக்குபாய் திருட்டு டிவிடி ரிலீஸ் ஆனதுக்கெல்லாம், வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு ஓரிரு மணித்துளிகளில் ஆக்ஷன் எடுத்த திராவிட சிங்கங்களின் அரசு, இந்த மேட்டர்ல கவனிக்குறது மட்டுமில்லாமல், அந்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சேர்த்து கவனிக்குறது தான் வெற்றிவேலின் ஆத்மா சாந்தியடைய உதவும்!

குருதி சுகாதாரமற்றது என
சுகாதாரத் துறை அமைச்சகம் நிராகரிக்க,
இது ரவுடிகளின் விளையாட்டு என
விளையாட்டுத் துறை அமைச்சகம் விலக,
ஆட்சித்துறையோ அலட்சியப்படுத்த,
அரசாங்கமே இருந்தும்,
உதவிக்கு நாதியற்று கிடந்தார் வெற்றிவேல்.

மறித்தது அவர் உயிர்மட்டுமல்ல,
நம் மனித நேயமும் தான்!

LinkWithin

Blog Widget by LinkWithin