Saturday, January 9, 2010

எஸ் ஐ உசுரு, அமைச்சருக்கு மசுரு!

சமீபத்தில் நடந்த கொலை வெறித் தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தது அனைவரும் அறிந்ததே. அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லாத காட்டு மனிதர்களாக நாம் இருந்தாலும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு பதிவுக்குள் செல்வோம்.

டிவி நியூஸ்ல பார்த்தேன். யாரோ ஒருவர் ரோட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். தலையில் பலத்த காயத்துடனும், ஒரு கால் துண்டுபட்ட நிலையிலும், துடித்துக் கொண்டிருக்கிறார். உதவி கேட்டு கதறிக் கொண்டிருக்கிறார். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. சிறிது நேரத்தில் அமைச்சர்களின் வாகனங்கள், மற்றும் பாதுகாப்பு அலுவலர்களின் வாகனங்கள் வருகிறது. உடல் நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விளையாட்டு அமைச்சர் மொய்தீன் கான் மற்றும் மாவட்ட கலெக்டர், ஹெல்த் செக்ரடரி என அனைவருமே அந்த இடத்தில் இருக்கின்றனர்.. காரை விட்டு யாருமே வெளியே வரவில்லை. 8 நிமிடம் கழித்து கலெக்டர் காரிலிருந்து வெளியில் வந்து ஆம்புலன்சிற்கு போன் செய்கிறார். ஆம்புலன்ஸ் வரத் தாமதாகும் என்று கலெக்டர் உணர்கிறார். 20 நிமிடங்கள் வரை அமைச்சர் காரிலேயே அமர்ந்திருக்கிறார். பிறகு வந்து விசிட் அடிக்கிறார். பிறகு கலெக்டரின் உத்தரவுப்படி பாதுகாப்பு அலுவலர்களின் வாகனத்தில் குத்துயிரும், கொலைஉயிருமாய் இருந்த எஸ் ஐ வெற்றிவேலை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். ரத்தம் அதிகம் வெளியேறியதால், வழியிலேயே பரிதாபமாக உயிர் இழக்கிறார்.

என்ன சொல்றதுன்னே தெரியல. அவர் அப்படி துடித்துக்கொண்டு உதவிக்காக கதறுகிறார், ஒருத்தர் கூட உதவி செய்யல. இதே மாதிரி நாம அடிப்பட்டு கிடந்து, சுற்றி எல்லோரும் இருந்து, எல்லா அதிகாரியும், அமைச்சரும் இருந்து, நம்மை காப்பாற்ற யாரும் வரலைன்னா எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். ஐயோ....ரொம்ப கொடுமை.

கொஞ்சம் முன்னாடியே யாராவது கூட்டிட்டுப் போய் இருந்தால் இந்நேரம் அவர் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கும்.

வெற்றிவேலின் நிலைமையில் நாம இருந்தோம்னா, அந்தக் கடைசி உயிர் பிரியுற நேரத்துல நிஜமா என்ன நினைச்சு இருப்போம்? அவருடைய அந்த நிலைமை எப்படி இருந்திருக்கும்னு நமக்கு தெரியாது. இருந்தாலும், அவர் நிலைமையில் இருந்தால், இப்படித் தான் நான் நினைச்சு இருப்பேன்.

எத்தனை தடவை இதே அமைச்சர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இரவெல்லாம் கண்விழித்து வேலை பார்த்திருப்போம். அரசியல் கும்பல் தலைவர்கள் வீட்டு கல்யாணத்திலிருந்து, காரியம் வரை எவ்வளவு செஞ்சி இருப்போம். இந்த நேரத்துல பக்கத்துல இருக்க ஒரு ஆஸ்பித்திரிக்கு கூட கொண்டு போய் சேர்க்க மாட்றாங்களே ! நாம செத்துக்கிட்டுறுக்கோம்...காரை விட்டே வெளிய வரமாட்டேங்குறாங்க...... எத்தனையோ முறை உங்களின் கார் கதவுகளை ஓடி வந்து திறந்துவிட்டிருக்கேன். இப்பொழுது என்னுடைய குருதியின் நாற்றம் உங்கள் கார்களை சேதப்படுத்தும் என்று, எட்ட நின்று வேடிக்கைப் பார்க்கிறீர்களா? உங்கள் வீட்டு மனிதர்கள்... வேண்டாம்..அவங்க நல்லா இருக்கட்டும், உங்க வீட்டு நாய் அடிபட்டிருந்தால் இதே மாதிரி தான் நடந்து கொண்டிருப்பீர்களா? உடல் சிதைந்து குருதி பீய்ச்சும் வலியை விட, என் உயிரை காப்பாற்ற ஒருவரும் வரலியே அப்படிங்குற மன வேதனை தான் அதிகமா இருந்திருக்கும்.

இது நார்மல் தானே. இங்க சிட்டிலேயே, ஆக்சிடெண்ட் ஆகி அடிபட்டவங்களை ஒரு பரிதாப லுக் விட்டுட்டு, ஆண்டவா காப்பாத்திடுப்பா ந்னு ஒரு வேண்டுதலை போட்டுட்டு, டைம் பாத்துட்டு, அடிபட்ட மனுஷன கண்டுக்காம போறாங்களே...அப்படின்னு கேட்கலாம். பெரும்பாலான சமயங்களில், விபத்துக்களில் காயம் பட்டவர்களை நல்லுள்ளம் படைத்தவர்கள் உடனடி சிகிச்சை கொடுப்பதை எல்லோரும் பார்த்திருப்போம். அப்பாடி, அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்க...அப்படின்னு ஒரு திருப்தி இருக்கும். சிறு காயமாக இருந்தால், அவர்களின் வாகனத்தை ஓரம் கட்டி, அவருக்கு முதலுதவி செய்வதை எல்லாம் பாத்துட்டுத் தானே இருக்கோம்.

இங்க வெற்றிவேலுக்கு நடந்த விஷயம் அப்படியல்ல. அவர் நல்லவரா, கெட்டவரா, பின்னணி,என்ன செய்தார் அது இப்போ தேவையில்லாத விஷயம். ஒரு மனுஷன் வெட்டுபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். சக மனுஷனா இருந்தா காப்பாற்ற முயற்சி செய்யணும். ஒரு காகத்திற்கு அடிபட்டதை பார்த்த மற்றொரு காகம், கரைந்து ஒரு கூட்டத்தையே அழைக்குமாம் உதவி செய்ய. அவைகளுக்கு இருக்கும் உணர்வு கூட நம் அரசியல் வர்கத்திற்கும், அதிகார வர்கத்திற்கும் இல்லாதது ரொம்ப கொடுமை.
மக்களின் சேவையே எங்கள் உயிர் மூச்சு என்று சொல்லி, எப்படி தான் உங்களுக்கு ஓட்டு கேட்க மனசு வருதோ தெரியல ?

சாதாரண ஆளுங்க, இந்த மாதிரி சமயத்துல பெரும்பாலும் பயப்படுவது, ஏதாவது போலீஸ் கேஸ் ஆயிடுமோ...நமக்கு எதுக்கு வம்பு என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இங்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் அடிபட்டு உதவிக்காக கதறுகிறார், அதற்கான உரிய அதிகாரிகளே அந்த இடத்தில் இருந்தும், போதாக்குறைக்கு அமைச்சர்களே இருந்தும் இப்படி நடந்திருப்பது மகாக் கேவலம். இரக்கமில்லா மந்திரிகள்(மனிதர்கள்) என்று தான் சொல்லணும்.

காரை விட்டு வெளியே கூட வராமல், அமைச்சர் உட்கார்ந்திருக்கிறார் என்றால், சாமானியனின் உயிர், உங்களுக்கு ம....ஆக கூட தோன்றவில்லை என்றே தெரிகிறது.

சரிங்க...என்ன பண்றது டிவி பார்த்ததுல இருந்து, ரொம்ப டிஸ்டர்ப் ஆயிடுச்சு அதான் கொட்டி தீர்த்துட்டேன்.

ஜக்குபாய் திருட்டு டிவிடி ரிலீஸ் ஆனதுக்கெல்லாம், வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு ஓரிரு மணித்துளிகளில் ஆக்ஷன் எடுத்த திராவிட சிங்கங்களின் அரசு, இந்த மேட்டர்ல கவனிக்குறது மட்டுமில்லாமல், அந்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சேர்த்து கவனிக்குறது தான் வெற்றிவேலின் ஆத்மா சாந்தியடைய உதவும்!

குருதி சுகாதாரமற்றது என
சுகாதாரத் துறை அமைச்சகம் நிராகரிக்க,
இது ரவுடிகளின் விளையாட்டு என
விளையாட்டுத் துறை அமைச்சகம் விலக,
ஆட்சித்துறையோ அலட்சியப்படுத்த,
அரசாங்கமே இருந்தும்,
உதவிக்கு நாதியற்று கிடந்தார் வெற்றிவேல்.

மறித்தது அவர் உயிர்மட்டுமல்ல,
நம் மனித நேயமும் தான்!

LinkWithin

Blog Widget by LinkWithin