Thursday, November 19, 2009

Curly Hair,Very Fair -RHYMES நமக்காகவா?


"ஏங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க அங்க....எப்ப பார்த்தாலும் டிவி முன்னாடி உட்கார்ந்துட்டு நியூஸ் பாக்குறதே வேலையா போச்சு......இங்க வாங்க, நம்ம பையன் ரைம்ஸ் சொல்றான், இங்க வந்து கேளுங்க...." என தங்கமணி சவுண்ட் விட, நானும் போனேன்.
"தீபு, டேடிக்கு RHYMES சொல்லி காமி டா..." என்றாள்.

Chubby Cheeks,Dimple Chin

Rosy Lips,Teeth within

Curly Hair,Very Fair

Eyes are blue,Lovely Too

Mummy's pet, is that you? Yes...Yes...Yes...

Very Good..Super da கண்ணா...என பாராட்டிவிட்டு, டிவி பார்க்க திரும்பினேன். அப்போ தான் யாரோ டார்ட்டாய்ஸ் கொசு வத்தியை முகத்துக்கு முன்னாடி சுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்க். ஆமாங்க ஃப்ளாஷ் பாக் தான். ஆஹா...நம்மளும் இப்படி தானே பாடியிருப்போம். என் பையன் பரவாயில்லை கொஞ்சம் கலர். நானெல்லாம், கிட்ட தட்ட தார் கலர் ஆச்சே. நம்ம கூட இந்த பாட்டை சிரிக்காம பாடியிருக்கோமேன்னு தோணுச்சு. குழந்தைங்க என்ன செஞ்சாலும், எது பாடினாலும் ரசிக்கும் படியாகத் தான் இருக்கும் என்பது வேறு விஷயம். இருந்தாலும் அந்த பாடலின் அர்த்தத்தை நினைத்துப் பார்க்கும் போது, இந்தப் பாடல், நம்ம நாட்டு குழந்தைகளுக்கு ஏற்புடையதான்னு யோசிக்கத் தோணுச்சு.

ஆரம்பப் பள்ளிக் காலங்களில், காலம் காலமாக நாம் பயின்று வரும் ஆங்கில RHYMES என்கிற பாடல்கள் நமக்கு ஏற்ற மாதிரி இருக்கான்னு ஒரு சின்ன அலசல். முதலில் இந்தப் பாடலையே எடுத்துப்போம்.

"chubby cheeks"
ஒரு வேளை உணவிற்கே வழியில்லாமல், குழந்தைகளை வேலைக்கு அனுப்பினாங்க பெத்தவங்க..."சாப்பிட சோறே இல்லாத போது எந்தக் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவாங்க பெத்தவங்க...இலவசமா பள்ளிக் கூடத்துல சாப்பாடு போடுங்க....கல்வியும் கொடுங்க..." என சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து கல்விப் புரட்சியைத் தொடக்கியவர் காமராஜர். இப்படி கன்னம் ஒட்டி போய், மெலிந்து வரும் குழந்தைகள் பாடும் பாட்டைப் பாருங்க... Chubby Cheeks

"Rosy Lips, Teeth within...Curly Hair,Very Fair"
இது அதைவிட மோசம். நம்ம ஊர்ல முக்கால்வாசி பேரு கருப்பு தான். இந்த பாடலை நானும் குழந்தைப் பருவத்தில ஆர்வமா கை கால் ஆட்டி பாடி காட்டியிருப்பேன். எங்க வீட்லயும், ரசிச்சு பார்த்திருப்பாங்க. கொஞ்சம் அர்த்தம் தெரிஞ்ச பிறகு, கன்னங்கரேல் நு இருந்துட்டு, சுத்தமா சம்பந்தமே இல்லாம, இப்படி ஒரு பாட்டு பாடி இருக்கனேன்னு சிரிப்பு தாங்க வருது.

இந்த மேட்டர்களுக்கு நம்ம அரசியல் கும்பல்கள் என்ன மாதிரி கருத்து தெரிவிப்பாங்கன்னு ஒரு கற்பனை.
London Bridge is Falling down,...falling down...falling down......on my Fair Lady.

திராவிடர் கழக பிட்டு : "Fair Lady". இந்தப் பாடல் வெள்ளை ஆரியனை உயர்த்தி, கருப்புத் திராவிடனை தாழ்த்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட ஒரு பார்ப்பனீயச் சிந்தனை. இத்தகைய மூடப் பாடல்களைத் சமுதாயத்தில் இருந்து அகற்றுவதே திராவிடர் கழகத்தின் முதல் வேலை. அதற்கு பதிலாக
Rain Rain Go away styleல..
"God God where are you?
Come to me, if you are true..."

கலைஞர் பிட்டு: லண்டன் பிரிட்ஜ் என்பது நம்மில் பெரும்பாலானோர் பார்க்காத ஒரு பாலம். அது விழுவதாக பாடல் வரிகளில் வருவதில் நம் ஊரில் எந்த அரசியலும் இல்லை. ஆனால், இதையே கத்திப்பாறா பிரிட்ஜ் என்றோ வேறு ஒரு மேம்பாலம் என்றோ குறிப்பிட்டால், நான் கட்டிய பாலம் எப்படி உடைந்து விழும் என அம்மையார் சண்டைக்கு வருவார். ஆகையால், யாரும் பார்க்காத ஒரு பாலம் விழுவதாகவே பாடலில் இருத்தல் நலம். வேண்டுமென்றால், இல்லாத பாலமான ராமர் பாலம் விழுவதாக வேண்டுமானால் மாற்றுங்கள், சேதுவிற்காவது வழி பிறக்கட்டும்.

அடுத்தது இந்தப்பாடல்,
"Hot Cross Buns, Hot Cross Buns
One a Penny, two a Penny
Hot Cross Buns..."
பிஜெபி பிட்டு : Bun என்பது சரி. அது என்ன அந்த ரொட்டி மீது ஒரு கிராஸ். ஆங்கிலேயன் கிறித்துவத்தை பரப்புவதற்காக ரொட்டி மீது கிராஸ் போட்டு நம்மிடம் திணித்த பாடல் இது. இது நம் இறையாண்மைக்கு எதிரான பாடல்.

கம்யூனிச பிட்டு : Bun என்கின்ற உணவு ஆங்கிலேயன், அவனுடைய பொருட்களை சந்தை செய்ய இந்தியாவிற்கு இறக்குமதி செய்த ஒன்று. ஆரம்பக்கல்வியிலேயே அவனுடைய ஏகாதிபத்யத்தை செலுத்தியதால், இன்று Bun வளர்ந்து Pizza வாக உருவெடுத்து பிசாசாக நிற்கிறது உலகமயமாக்கல். இதற்கு முடிவு கட்டும் முதல் முயற்சியாக இப்பாடலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

சரி, என்ன தான் வெள்ளைக்காரன் நம்முடைய கல்வி வாய்ப்பை திறந்து விட்டாலும், அதுக்காக எத்தனை வருஷமா நமக்கு சுத்தமா சம்பந்தமே இல்லாத பாடல்களை, தேவை இல்லாத பாடல்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கோம்னு தோணுதுங்க.. தமிழ் ரைம்ஸ் பாடல்கள் கலக்கலா இருக்குங்க...புதுசா புதுசா அருமையான பாடல்கள் வந்த வண்ணம் இருக்கு...அதுல சந்தேகமே இல்லை. ஆனா ஆங்கில பாடல்கள் இன்னும் அதே தேய்ஞ்ச ரிக்கார்டு மாதிரியே பாடிட்டு இருக்கோம். நம்ம நாட்டுக்கு, ஊருக்கு ஏத்த மாதிரி சொந்தமா ஆங்கில ரைம்ஸ் பாடல்களை நம்முடைய குழந்தைகள் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோன்னு தோணுதுங்க..

என்ன தான் இந்த மேட்டரை, நம்ம கிண்டலா சொன்னாலும், இட்லி-சாம்பார் பத்தியோ, பொங்கல் வடை பத்தியோ, போண்டா- பஜ்ஜி ,முறுக்கு போன்ற நம்ம ஊர் ஐட்டங்களைப் பற்றி, நம்ம குழந்தைகளுக்கு பழகிய ஒன்றைப் பற்றி ஆங்கில ரைம்சுகள் ஒன்றில் கூட வராதது கொஞ்சம் வருத்தம் தான். (அட நன்னாரிப் பயலே...கடைசியிலே உன் புத்திய காட்டிட்டியே டா... : ) ) இங்கு விற்கப்படும் ABCD புத்தகங்களில் கூட பெரும்பாலும், நமக்கு கிடைக்காத பழவகைகள், பார்த்திராத மிருகங்கள், கேள்விப் படாத பறவைகள் போன்றவைகள் தான் இருக்குங்க. என் பையன் அதை எல்லாம் பார்த்துட்டு, டால்பின் பாக்கணும் டேடி...போலார் பியர் பாக்கணும் டேடி...சீல் பாக்கணும் டேடி, SpoonBill பாக்கணும் டேடி, Iquana பாக்கணும் டேடி ந்னு சொல்றான்....இதுக்கெல்லாம் நான் எங்க போறது....டேய் நானே இதெல்லாம் பார்த்தது கிடையாதுடா....ஏதோ, என்னால முடிஞ்ச காக்கா குருவி,குதிரை வேணும்னா காட்டுறேன்..வாடா...ஒரு கதை சொல்றேன்...ஒரு பாட்டி வடை சுட்டுன்னு இருந்தாங்களாம்......@#$%^&*() : )

டேய் இந்த ரைம்ஸ் மேட்டருக்கு, இவ்வளவு பெரிய ஒப்பாரியா டா ந்னு நீங்க கேக்குறது புரியுது...என்னமோ போங்க... : )

Sunday, November 8, 2009

"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்?

என்னடா, இவனுக்கு இதைப் பத்தி ஒரு ஆராய்ச்சின்னு நீங்க நினைக்கலாம். பல சமயங்களில் கவனிச்ச ஒன்று தாங்க இது.நிறைய பேரு நின்னுட்டு டீ குடிச்சிட்டு இருப்பாங்க, சமோசா, பஜ்ஜி சாப்பிட்டுட்டு இருப்பாங்க. ஆனா, அவங்க எல்லாம் பிச்சைக்காரர்களுக்கு முதல் டார்கெட் கிடையாது. யாரு சிகரெட் புடிச்சிட்டு இருக்காங்களோ, அவங்கள தான் முதல்ல அட்டாக் பண்ணுவாங்க. அதுவும் பல தடவை, இல்லைமா, போயிட்டு வாங்க...அப்படின்னு சொன்னாலும் போக மாட்டாங்க. எந்த பக்கம் மாறி மாறி நின்னாலும், எதிர்ல வந்து நின்னு, காசு கொடுக்குற வரைக்கும் விட மாட்டாங்க.

சரி, அப்படி என்ன தான்யா தம் அடிக்கிறவங்க கிட்ட இருக்கு. எதுக்கு அவங்கள எல்லா பக்கமும் அணை கட்டுற மாதிரி, சுத்தி சுத்தி வந்து பிச்சை கேக்குறாங்கன்னு, கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சு பார்த்தபோது தான் தோணுச்சு, சரி இதைப் பற்றியே ஒரு பதிவு போட்டுறலாம்.

எல்லாப் பிச்சைக்காரர்களும் ஒரே மாதிரி இல்லைங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையா இருப்பாங்க.சிலர் வீடு வீடாக சென்று உணவு வாங்கிச் செல்பவர்கள், சிலர் சிக்னலில் பிச்சை எடுப்பவர்கள், சிலர் பொட்டிக் கடை,டீக்கடை அருகில் பிச்சை எடுப்பவர்கள், சிலர் கோவில் வாயிலில் பிச்சை எடுப்பவர்கள் என பல வகைகள் உண்டு.

ஆனா, என்ன தான் பிச்சைக்காரர்களாக இருந்தாலும், யாரிடத்தில், எப்பொழுது, எப்படி பிச்சைக் கேட்டால் பிச்சை கிடைக்கும் என்பதை சரியாக தெரிந்து வைத்திருப்பார்கள்.இந்த சூழ்நிலையில் பிச்சைக் கேட்டால், அவனால மறுக்கவே முடியாது என்பதை அறிந்து ஒரு Clear Strategy யுடன் பிச்சை எடுப்பவர்கள் பலர். அப்படி ரொம்ப டெக்னிகலா ப்ளான் பண்ணி பிச்சை எடுப்பவர்களிடம் எந்த மாதிரியான சூழ்நிலைகள்ல, நாம எப்படியெல்லாம் மாட்டிக்கிறோம்னு இப்போ பார்ப்போம்.

சூழ்நிலை 1: வேலை செய்கிற,30 வயதுடைய ஒருவர் தம் அடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பிச்சை கேட்பதின் நோக்கம்.

ஐயா, நல்லா இருக்க உடம்பை கெடுத்துக்குறதுக்கே நீங்க ரூ.4.50 செலவு பண்றீங்களே, நாங்கல்லாம் சோத்துக்கே வழி இல்லாம இருக்கோமே, எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன் என்று சொல்வது போல இருக்கும் அவர்களின் பாவணை.

பல சமயங்களில் நமக்கே ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படும்...என்னடா நம்ம சிகரெட் பிடிக்க இவ்ளோ செலவு பண்றோம், ஆனா அவங்க சாப்பாட்டுக்கே வழி இல்லாம காசு கேக்குறாங்களே.....கிட்ட தட்ட ஒரு குற்ற உணர்ச்சி மாதிரி தோணும். சரி, கொடுத்துடுவோம்னு பெரும்பாலான தம் பிரியர்கள் நினைக்குறாங்க.


சூழ்நிலை 2 : கல்லூரி வளாகத்தின் வெளியே ஒரு மாணவன், புகை வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

ராசா, உங்களப் பெத்தவங்க, படிக்கக் கொடுத்த காசை, புகையையாய் எறிச்சுத் தள்ளுறீங்க. கஷ்டப்பட்டு அப்பா அனுப்புற காசை மொத்தமும் ஊதி அழிக்காம, எங்களுக்கும் கொடுத்தீங்கன்னா புண்ணியமாவது வந்து சேரும் ராசா...

நம்மாளு வேற வழி இல்லாம 50 காசோ, 1 ரூபாயோ போட்டு அனுப்புவார்.

சூழ்நிலை 3: காதலனும் காதலியும் தனிமையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஒருவர் பிச்சைக் கேட்கிறார்.

சாதாரண சமயங்களில், எச்சைக் கையில் காக்கா கூட ஓட்டாதவராக இருக்கும் காதலன், காதலியுடன் இருப்பதால், உடனே பர்சை எடுத்து டகால்னு ஒரு 5 ரூபாய் எடுத்துக் கொடுப்பார்(1 ரூபாய் 2 ரூபாய் சில்லரை இருக்கும்). "என்னாங்க...பிச்சைக்காரனுக்கு போய் 5 ரூபாய் போடுறீங்க..இதெல்லாம் டூ மச் ங்க..." என்பாள் காதலி. "இல்லம்மா ...சேஞ் இல்லை..its OK." என்று பொய் சொல்லி, தன் இமேஜை கொடை வள்ளல் ரேஞ்சுக்கு டெவலப் செய்து கொள்வான் காதலன்.

சூழ்நிலை 4: கல்யாண வயசுல இருக்க பெண்ணை அழைத்துக்கொண்டு, குடும்பத்தோட கோவிலுக்குப் போறாங்க. அங்க, கோவில் வாசலில்
ஒருவர் பிச்சைக் கேட்க அமர்ந்திருக்கிறார்.

"அம்மா, இது உங்க பொண்ணுங்களா அம்மா. எம்பெருமான் அருளால, பொண்ணுக்கு சீக்கிரமா ஒரு வரன் அமையும். சந்தோஷமா கோயிலுக்குப் போயிட்டு வாங்க..."

அடடா.....நம்ம நினைச்சுட்டு வந்த விஷயத்தை அப்படியே சொல்றாரே...நுழையும் போதே நல்ல வார்த்தை சொல்றாரே...இவர் வாக்கு பளிக்கனும்னு நினைச்சு...அவர் தட்டுல ஒரு கணிசமான தொகை விழுறது நிச்சயம்.

சூழ்நிலை 5: பிளாட்பார்ம் கடையில இட்லி சாப்பிட்டுட்டு இருப்போம். அப்போ ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்கிறார்.

"சாரி பா சேஞ்ச் இல்லை" என்று சொல்லிவிட்டு கடையில் பணம் கொடுக்கிறார். மிச்சம் சில்லரையை கொடுக்கிறார் கடைக்காரர்.

இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் அதே பிச்சைக்காரர் மறுபடியும் கேட்கிறார் : )

இந்த மாதிரி பல சூழ்நிலைகளில், பிச்சைக்காரர்களை தவிர்ப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷய்ம் தான்.

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவதிலேயே நமக்குள்ள பல பாலிசிகள் இருக்கும். சின்ன பசங்களுக்கு பிச்சை போடக்கூடாது. உடல் குறைபாடுகள் இருக்கவங்களுக்கோ, முதியவர்களுக்கோ பிச்சை போடலாம்.இப்போதெல்லாம், பிச்சை என்பது பணம் புழங்கும் பெரிய தொழிலாகி விட்டது. இப்படியெல்லாம் சொல்லுவோம்.

இப்படி என்ன தான் காரணங்கள் சொன்னாலும், அவர்களுடைய வயிற்றுப் பசியின் கோரம், விகாரமாக ஒலித்தும் ,நம் மூளை அதனை நிராகரிப்பது என்பது பல சமயங்களில் வருத்தமான மேட்டராவே இருக்குங்க : (

Wednesday, November 4, 2009

வந்தே மாதரம் பாடலுக்கு ஃபத்வா !

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் வங்காள தேசத்தில், துணை ஆட்சியாளராக திகழ்ந்தவர் பக்கிம் சந்திர சேட்டர்ஜி. அவர் ஒரு நாள், ராமகிருஷ்ணரை பார்க்கச் சென்றிருந்தார்.

அப்போது ராமகிருஷ்ண்ர் "உன் பெயர் என்ன?" என்று வினவினார். பக்கிம் சந்திர சேட்டர்ஜி என்றார் அவர்.

அதற்கு ராமகிறுஷ்ண்ர் "பக்கிம் என்றால் வலைந்த என்று பொருள். சந்திர என்பது சந்திரன். ஆக, வலைந்த சந்திரன் என்பது உமக்கு பொருத்தமான பெயர் தான். ஆங்கிலேயனுக்கு வேலை செய்து, பூட்ஸ் காலில் அடிப்பட்டு வலைந்து போகிறாய். உமக்கு இந்தப் பெயர் பொருத்தமான பெயர் தான்" என்று வேடிக்கையாகச் சொன்னாராம்.

ஆங்கிலேயனுக்கு வேலை செய்வது அடிமைத்தனம். இந்த அடிமைத்தனத்தை இவ்வளவு நாள் செய்துவிட்டோமே என்று எண்ணி, தன் வேலையை ராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில் இறங்கினார் பக்கிம் சந்திர சேட்டர்ஜி.

தேசப்பற்றை வளர்க்கும் பல நூல்களை எழுதினார். அதில் "ஆனந்தமடம்" என்ற நூலும் ஒன்று. அதிலிருந்து எடுக்கப்பட்டது தான் "வந்தே மாதரம்". இந்திய மக்களை, ஆங்கிலேயனுக்கு எதிராக ஒன்று கூட்டி போராடச் செய்த பாடல் அது. எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள், அடித்து கொல்லப்பட்ட போது, தூக்கிலிட்ட போது மரணப்பிடியில் இருந்தும் கூட உணர்ச்சிபொங்க, வீரம் ததும்ப சொன்ன வார்த்தைகள் இது "வந்தே மாதரம்".

அப்படியாப்பட்ட ஒரு பாடலை முஸ்லிம்கள் பாடக்கூடாது என ஃபத்வா போட்டிருக்கிறது, ஜமாத் இ உலீமா ஹிந்த் என்கின்ற ஒரு அமைப்பு. என்னய்யா...என்ன பிரச்சினை உங்களுக்கு அதுல...அப்படின்னு கேட்டா. அல்லாவைத் தவிர யாரையும் முஸ்லிம்கள் வணங்கக் கூடாது. வந்தே மாதரம் பாடலில் தாய் மண்ணை வணங்குவதாக சொல்கிறதாம். என்ன கொடுமைங்க இது. அந்தப் பாடல் தமிழில் தாய் மண்ணே வணக்கம் என்று தாங்க வருது. ஒரு தாயை, தாய் மண்ணுக்கு வணக்கம் கூறுவதில் என்ன கெட்டுப் போச்சு ?

சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலான அபுல் கலாம் ஆசாத் ஒரு மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர். அவரே வந்தே மாதரம் பாடலை வழிமொழிந்திருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய சுன்னி உலீமா பேரவை, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பாகங்களை முஸ்லிம்கள் பாடலாம் என ஃபத்வா போட்டது. தாயின் காலில் தலை தாழ்த்துவது என்பது வழிபாடு அல்ல அது ஒரு மரியாதையாக கருத வேண்டும் என அந்தப் பேரவையின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருதீன் குவாத்ரி அஜீலானி கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்தப் பாடலைப் பாட வேண்டும் என்று யாரும், யாரையும் வற்புறுத்தவில்லை. இப்படி இருக்க எதுக்காக இப்போ இந்த கும்பல், இதை ஆரம்பிக்குறாங்க....ஒண்ணுமே புரியல....

தேசப்பற்று மிக்க இந்தப் பாடலுக்கு மதச்சார்பான அர்த்தம் கற்பிப்பது, நம் நாட்டி ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயலாகவே கருதப்படும். இதை ஒரு காரணமாக வைத்து, அண்ணன் தம்பியா இருக்க மக்களை சண்டை போட வைக்கணும் அல்லது பல இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் ஜமாத் இ உலீமா ஹிந்த் தான் உண்மையான இயக்கம் என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி ஆள் சேர்க்க வேண்டும் என்பது தான் இது போன்ற இயக்கங்களுடைய நோக்கமாகத் தெரிகிறது. எது எப்படியோ,

வீட்டில் இந்துவாய் இரு
வீட்டில் கிறித்துவனாய் இரு
வீட்டில் இஸ்லாமியனாய் இரு
நாட்டில் இந்தியனாய் இரு.

அப்படின்னு குன்றக்குடி அடிகளார் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது.

வந்தே மாதரம் !

LinkWithin

Blog Widget by LinkWithin