Friday, April 30, 2010

அழகை நிர்வாணமாக்கிய அசிங்கம் -எது அழகு ? எது அசிங்கம் ?

சமீபத்தில் படித்த ஒரு சின்ன கதையோடு தொடங்குகிறேன்.

கடவுள் சொர்கத்திலிருந்து அழகு, அசிங்கம் இரண்டையும் ஒரு சேர பூமிக்கு அனுப்பினார். அழகும், அசிங்கமும் தொலைதூரப் பயணத்தால் அழுக்குண்டு, கலைப்புற்று பூமியை வந்தடைந்தன.

அழகு தன் ஆடைகளைக் கழற்றி கரையில் வைத்துவிட்டு, குளிப்பதற்காக குளத்தில் இறங்கியது. அழகு குளித்துக்கொண்டிருந்தபோது, கரையில் இருந்த அசிங்கம், அழகின் உடைகளைப் உடுத்திக் கொண்டு போய்விட்டது. குளித்துவிட்டு கரைக்கு வந்த அழகு, தன் ஆடைகள் காணாமல் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. அதற்கு மாறாக அசிங்கத்தின் உடைகள் அங்கு இருந்தன. நிர்வாணமாக இருந்த அழகு, வேறு வழியின்றி அசிங்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டது. தன்னுடைய உடையை அசிங்கம் அணிந்து சென்றதை தெரிந்து கொண்ட அழகு, அசிங்கத்தைத் தேடி ஓடியது.

அழகு அசிங்கத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது !
உலகம் இப்படித் தான் இருக்கு என்பது போல முடியுது கதை !

அழகாகத் தெரியும் அனைத்தும் அழகும் அல்ல
அசிங்கமாகத் தெரியும் அனைத்தும் அசிங்கமும் அல்ல.பெரும்பாலும் வெளித்தோற்றத்தின் சிறப்பைச் சொல்லும் ஒன்றாகவே அழகு பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய இயல்பான உணர்ச்சிகளான சிரிப்பு, அழுகை போன்றவற்றை வெளிப்படுத்துவதில் கூட மற்றவர் கண்களுக்கு அழகாகத் தெரிகிறோமா என்று பார்க்கும் அளவிற்கு அழகு என்ற ஒன்று வெளித்தோற்றத்தின் கைகூலியாகவே சமுதாயம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

எத்தனையோ மீட்டிங்க்ஸ்ல சுத்தமா சிரிப்பே வராத ஒரு மொக்கை ஜோக்கை Client சொல்லுவார், இருந்தாலும் நாம விழுந்து விழுந்து சிரிப்பது போல பாவணை செய்வோம். ரொம்ப மட்டமான ஒரு ஐடியாவை நம் மேலாளர் சொல்லும் போது, சார் அருமையான ஐடியா சார்..நிச்சயம் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகும்னு சொல்லுவோம். இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும், நம்முடைய போலியான உணர்வுகளை வெளிப்படுத்தி நம்மை அழகாக காட்டிக்கொள்கிறோம்.

அழகு மாதிரியே தான் நாகரிகமும். இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஒரு இடத்தில் அல்லது ஒரு குழுவில் அழகு என்று சொல்லப்படும் ஒன்று மற்றொரு குழுவில் அழகில்லாமல் தெரியும். ஒவ்வொரு குழுவிற்கும் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக நடிப்பதின் பெயர் தான் நாகரிகமோ என்ற சொல்லும் அளவிற்கு இருக்கிறது நாகரிகம். நம்ம ஊர்ல வெறும் கைகளால் சாப்பிடுகிறோம், சீனாவில்/கொரியாவில் எதற்கெடுத்தாலும் குச்சி கொடுத்து சாப்பிடச் சொல்வார்கள். என்னை மாதிரி புதுசா பயன்படுத்துற பலருக்கு குச்சியில் எடுத்து சாப்பிட முடியாமல் போகும். அப்பொழுது கூட, ஒண்ணுமே சாப்பிடாம வந்தாலும் வருவோமே தவிர...கையில் மட்டும் சாப்பிட மாட்டோம்...நாகரிகம் : ) இது தான் அழகு, இது தான் நாகரிகம் என்று சொல்ல வரலைங்க..ஆனால் நமக்கு இப்படித் தான் விளங்கவைக்கிறாங்கன்னு தோணுது.

சமீபத்தில், என் தாய் தந்தைக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைத்தோம். அதற்காக அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்றிருந்தோம். நிறைய கிராமங்களுக்கு சென்றோம். பெரும்பாலும் நான் இதற்கு முன்பு நான் செல்லாத இடங்கள். ஒருத்தவங்க வீட்டுக்கு போனோம். கூரை வீடு 8க்கு 8 அடி இருக்கும். சானம் மொழுகி, சுத்தமாக இருந்த மண் தரை. வறுமையின் அடையாளங்கள் அனைத்தும் நிறைந்த வீடு. இரண்டு சிறுவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். குரல் கொடுத்தோம். ஒரு அம்மா ஓடி வந்தாங்க. "அடடே...வாங்க....வாங்க....." என்று சந்தோஷச் சிரிப்புடன் வரவேற்றார். அவர் முகத்தில் அடுப்புக் கறி அடையாளங்கள். பற்கள் சற்று வித்தியாசமாக(மேல் தூக்கி) இருந்தது. முதற்கணத்தில் இவை அனைத்தையும் மூளை படம் பிடித்தது. உடனே அவர், அந்த சிறுவனை எழுப்பி, பக்கத்து வீட்ல போய் ஸ்டூல் கொண்டு வா..மாமா க்கு...என்று சொல்லியபடி...என்ன சாப்பிடுறீங்க...என்று கேட்டார். அவர் முகமெல்லாம் அப்படி ஒரு சிரிப்பு, சந்தோஷம். நான் பல இடங்களில் பார்த்த சிரிப்பிற்கும் சந்தோஷத்திற்கும், முற்றிலும் மாறாக இருந்தது. போலித்தனமே இல்லை. நம்ம மனசுக்கு அது அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது. அட இது தான் அழகோ... நானெல்லாம் அசிங்கம் என்ற எண்ண வைத்தது.

எந்த ஒரு விஷயத்தையும் முதலில் உணர்ந்து கொள்வது நம் தலை தான். அதாவது, நம்முடைய கண்கள், காது, மூக்கு போன்ற உறுப்புக்கள் தான் வெளியில் என்ன நடக்கிறது என்பதை சொல்பவை. இவைகள் வெறும் மெசெஞ்சர்கள் தான். நடப்பவைகளை இந்த உறுப்புக்கள் முதலில் மூளைக்கு கொண்டு செல்கின்றன. ஏன்னா மூளைக்கும், கண்-மூக்கு-காது போன்ற உறுப்புக்களும் டிஸ்டன்ஸ் கம்மி. ஆனால்,மனசு(அ) இதயம்னு நாம சொல்லிக்கொள்கிற மேட்டர் தலையிலிருந்து கொஞ்சம் டிஸ்டன்ஸ். இதனால தான் என்னவோ....ஒருவரைப் பார்க்கும் பொழுது, ஒரு செயலை உணரும் பொழுது தலையின் உள்ளயே இருக்கும் மூளைக்கு முதலில் செல்வதால், முடிவை மூளையே எடுத்துக் கொள்கிறது. பெரும்பாலும், மனதிற்கு செல்ல விடாமல் செய்கிறது.

மூளை,போலியை பொலிவுபடுத்துகிறது நிஜத்தை நிராகரிக்கிறது.
அகம் (அ) மனசு உண்மையான அழகை வெளிப்படுத்துகிறது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் : )

கடைசியா என்ன தான் சொல்ல வர்ற என்று நீங்கள் கேட்பது புரியுது....தெரியல...அழகைப் பற்றி கொஞ்சம் யோசிச்ச போது எனக்கு தோன்றியவை இவை. சரியா தவறான்னு நீங்க தான் சொல்லணும் !

LinkWithin

Blog Widget by LinkWithin