பொதுவாகவே, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்பது நமக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும். தெரியாத்தனமா ஒருத்தர் வந்து நம்ம கிட்ட ஆலோசனை கேட்டார்னா...அவ்ளோ தான், அவரை ஒரு அரை மணி நேரம் மொக்கை போட்டு அனுப்புவோம். அவருக்கு தகுந்த, சரியான ஆலோசனை கிடைத்ததா இல்லையா என்பது மறுபடியும் அவர் நம்மிடம் ஆலோசனை கேட்டு வருகிறாரா, அல்லது நம்மைப் பார்த்த உடனே ஓடுகிறாரா என்பதை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டும்.
அறிவுரை என்பது சான்றோர், எளியவனிடம் வழங்குவது. ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையில் கொடுப்பது தான் அறிவுரை. இன்றைய கால கட்டத்தில் அறிவுரை(Advice) வழங்குவது என்பது, ஆப்பைத் தேடி நாமே உட்காருவதற்கு சமம். ஆனால், ஆலோசனை வழங்கவோ, கேட்கவோ இவை போன்ற பாகுபாடுகள் இல்லை. அதுமட்டுமல்லாமல், அதனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் மனநிலையில் உள்ளது. ஆகையால்,எதைச் சொல்வதானாலும் அதனை ஒரு ஆலோசனையாக(suggestion) சொல்வதே சிறந்தது..
அப்படி ரொம்ப சின்சியரா, நம்ம கிட்ட வந்து ஒருத்தர் ஆலோசனை கேட்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அப்படி ஆலோசனை வழங்கும் போது நாம் கடைபிடிக்கவேண்டிய அத்தியவாசியமான அணுகுமுறைகளை இங்கு பார்ப்போம். அனைவருக்கும் தெரிந்தது விஷயங்கள் தான் என்றாலும் ஒரு சின்ன ரிமைண்டர்.
1. மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முதல் தகுதியே, நாம் , அவருடைய நிலையில் இருந்து பிரச்சினையை யோசிக்க வேண்டும். வருகிறவரின் மனநிலையை நன்கு உணர்ந்தால் தான், அவருக்கு சரியான முறையில் ஆலோசனைகளை எடுத்துச் சொல்ல முடியும்.
ரொம்ப கஷ்டத்தோட ஒருத்தர் அவருடைய வேதனையை நம்மிடத்தில் சொல்லி வழி கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்,
2.அவர் சொல்லுகின்ற விஷயத்தைப் பற்றி தெரிந்தால் மட்டுமே ஆலோசனை வழங்கலாம். தெரியவில்லை என்றால் இதைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது என்று பளிச்சென்று கூறிவிடுவது நல்லது. "அதெப்படி, என் கிட்ட ஒருத்தர் வந்து கேக்குறார்...தெரிலன்னு சொன்னா நல்லாவா இருக்கும்.." என்று நினைக்கக் கூடாது. தவறான ஆலோசனை சொல்வதை விட, ஆலோசனை சொல்லாமல் இருப்பதே மேல்!
3.நம்ம கிட்ட ஒருத்தர் வந்து கேக்குறார்னா....அவரை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும்.நாம் அதனை கவனித்துக் கொண்டு மட்டும் இருக்க வேண்டும், இடையில் குறுக்கிடக் கூடாது. நம்மில் பலர், அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, முந்திக்கொண்டு சொல்யூஷன் சொல்லிடுவாங்க. என்ன சொல்ல வர்றார்னே தெரியாம, கொடுக்குற ஆலோசனை நிச்சயம் utter flop தான்.
ஆசிரியர் கேள்வியை முடிப்பதற்குள், மாணவர்கள் பதிலளித்தல், பள்ளியில் வேண்டுமானால் நமது திறமையை நிரூபிக்கலாம், ஆனால் இங்க அது ஒத்து வராதுங்க.
4.இன்னொரு முக்கியமான மேட்டர். எவ்வளவோ குழப்பத்துக்கு நடுவில், நம்மையும் ஒரு ஆளாக மதித்து, ஒருவர் ஆலோசனை கேட்கிறார். அப்படி வருகிறவரிடம், இது தான்யா சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து, நம்முடைய பொது அறிவையோ, மொழித் திறமையையோ வெளிப்படுத்தி பந்தா காண்பிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி....நெகடிவ் எஃபெக்ட் தாங்க.
5. தவறான விஷயங்களுக்கு ஆலோசனை அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். உலகத்தில் எந்த ஒரு மனிதனும், தவறு செய்வதற்கு முன்னால் எவரிடமாவது நேர்முகமாக, மறைமுகமாகவோ ஆலோசனை பெற்றவர்கள் தான். அதனால, தவறான விஷயங்களுக்கு, இது தவறு என்று புரிய வைத்து, ஸ்ட்ரிக்ட் நோ சொல்லிட வேண்டும்.
6. ஆலோசனை என்கின்ற பெயரில் நம்முடைய கருத்தை மற்றவரிடம் திணிப்பது ரொம்ப அநாகரிகமான மேட்டர். அதனால, இது தான் பிரச்சினையா, இதுக்கு இத்தனை வழிகள் இருக்கு....இந்த வழியில் போன இது நல்லது இது கெட்டது..என பல வழிகளைச் சொல்லி, அதில் அவருக்கு பொருத்தமானவற்றை அவர் தேர்ந்தெடுக்க வழி வகை செய்ய வேண்டும்.
7. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், நம்மிடம் ஆலோசனை கேட்பவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது தான். ஏதோ பிரச்சினைன்னு நம்ம கிட்ட வந்து, அவர்கள் மனதில் உள்ளவற்றை அப்படியே வெளியில் சொல்லும் போதே, பாதி சரி ஆயிடுவாங்க. மனசுல இருக்குற பாரமும் குறைஞ்சுடும். மேற்கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தி, நம்பிக்கை ஏற்படுத்துறதான், ஆலோசனை வழங்குவதன் முக்கிய நோக்கம்.
ஏதாவது முக்கியமான பாய்ன்ட் விடுபட்டிருந்தால்...மறுமொழிகளில் தங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது : )